தமிழ்த் திருமண முறை/தமிழ்த் திருமண முறை
பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள் நிகழ்த்திய தமிழ்த் திருமணமுறை
தமிழ்த் திருமணம் கடவுட் கொள்கையோடு கூடியது. மணம் செய்துகொள்ளுவோர் பிற்கால வாழ்க்கையிலே தம்முடைய கடமையை உணர்ந்து நல்வழியிலே நடத்தல் வேண்டும் என்பதே இத்திருமணத்தின் முதல் நோக்கம். ஆதலால் திருமணத்தில் செய்யும் சடங்குகளின் பொருளைச் செய்விப்போரும் செய்துகொள்வோரும் உடனிருப்போரும் புரிந்துகொள்ளத்தக்க முறையிலே இந்தத் தமிழ்த் திருமணம் அமைக்கப் பெற்றுள்ளது. எனவே இத் திருமணத்தை நடத்தி வைப்போர் அங்குக் குழுமியுள்ள மக்களுக்கும் மணம் செய்துகொள்ளும் மணமக்களுக்கும் அவ்வப்போது விளக்கிக் கூறுதல் வேண்டும். அங்ஙனம் கூறத்தக்கவைகளுள் கீழ் வருபவை இன்றியமையாதனவாகும்.
1. மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் அழைப் பிதழ்களைத் திருமண மன்றத்தில் கூடியுள்ள பெரியோர்களுக்குப் படித்துக் காட்டுதல்.
2. வரவேற்பவர், மணமக்களின் பெற்றோர் முதலியவர்களின் பெயர்களைப் படித்துக் காட்டிக் கூடுமானால் அவர்களையும் அறிமுகப்படுத்துதல் நலம்.
8. மணமகன், மணமகள் ஆகிய இருவரையும் ஆங்குக் குழுமியுள்ளவருக்கு அறிமுகப்படுத்துதல்.
4. மணமக்களின் எண்ணம் அறிந்துகொள்ளும் வகையில் இந்தத் தமிழ்த் திருமணத்தைக் குறித்தும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கடமையைக் குறித்தும், மணமக்களுக்குச் சுருக்கமாக விளக்கிக் கூறுதல்.
திருமணம் செய்துகொள்வோர்க்கு அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவகையில் இந்தத் திருமணத்தை நடத்துதல் நலம்.
அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, மணப்பந்தலை மலர் மாலைகளாலும் பல்வேறு விளக்குகளாலும் அழகு படுத்துமாறு செய்தல் வேண்டும். குத்துவிளக்கு, குடவிளக்கு, கிளைவிளக்கு, கைவிளக்கு முதலியவைகளுள் ஒன்றினை அவரவர்கட்கு இயைந்த வகையில் ஏற்றிவைக்கலாம். சிலர் வர்ணம் தீட்டிய மட்கலங்கள், மர உரல் முதலியவைகளை மணப்பந்தலில் வைப்பினும் ஆசிரியர் அவைகளை ஏற்றுக் கொள்ளலாம். மரபுக்கு மாறுபடாத வகையில் குறைந்தது இரண்டு குத்துவிளக்குகளேனும் இருத்தல் வேண்டும்.
மணப்பந்தலில் மணமக்கள் கிழக்கு நோக்கியும் மணம் செய்து வைக்கும் ஆசிரியர் வடக்கு நோக்கியும் அமர்ந்திருத்தல் நம் நாட்டு மக்களின் வழக்கமாக இருத்தலின் இதனேயே அனைவரும் மேற்கொள்ளலாம்.
ஒரு தலைவாழையிலையை மணமக்களுக்கு முன்புறமாக (அதாவது கிழக்குத்திசையில்) வைத்து, அவ்வாழை இலையில் மூன்று பிடி பச்சரிசி பரப்பி வைத்து அதன் மீது வாழைப் பூ வடிவிலமைந்த ஒரு செம்பினை மஞ்சள் குங்குமங்களால் அலங்கரித்து வைத்தல் வேண்டும். பின்பு அச்செம்பில் தூய்மையான நீர்வார்த்து மாவிலைக் கொத்தினைப் பொருத்தி அதன்மீது முற்றிய தேங்காய் ஒன்றினை மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டு வைத்தல் வேண்டும். அச் செம்பினுக்குப் பக்கத்தில் அரைத்த மஞ்சளைப் பிடித்து வைத்து அதைக் குங்குமத்தால் அலங்கரித்தல் வேண்டும். செம்பினுக்கு மற்றாெரு பக்கத்தில் ஒருதட்டில் மஞ்சள் கலந்த பச்சரிசியைப் பரப்பி அதன் மீது முற்றிய தேங்காய் ஒன்றினை வைத்து அதனையும் மஞ்சள் குங்குமங்களால் அலங்கரித்துப் பொற்றாவியோடு கூடிய மஞ்சள் கயிற்றை அதில் சுற்றி வைத்தல் வேண்டும். மணமக்களுக்கு முன்னர் இரண்டு முக்காலிகள் இட்டு மணமகனுக்காகவும் மணமகளுக்காகவும் பெற்றாேர்கள் பரிசாகத் தரும் புத்தாடைகளும் மலர் மாலைகளும் நிரம்பிய தட்டுகளை வைத்தல் வேண்டும்.
இறை வணக்கம் முடிந்தபின்னர் மணப்பந்தலில் குழுமியுள்ள அன்பர்களிடம் அப்புத்தாடைகளை வாழ்த்தித் தருமாறு கேட்டு அவர்கள் வாழ்த்தினைப் பெற்று மணமக்கட்கு அப்புத்தாடைகளை அளித்தல் வேண்டும்.
புத்தாடையுடன் மணமகனும் மணமகளும் மணப் பந்தலுக்கு வந்ததும் அவரவர் மரபுக்குத் தக்கபடி இறைவழி பாட்டினை முடித்துக் கொண்டு மணமக்கள் மணமேடையில் வந்து அமர வேண்டும்.
மணமகன் மணமகளுக்கு மங்கல நாண் அணியும் வரையில் மணமகள் மணமகனுக்கு வலப்பக்கத்தில் இருத்தல் மரபு என்பதனை ஒட்டி அவ்வாறு இருக்கச் செய்யலாம். இம் மங்கல நிகழ்ச்சி முடிந்ததும் மணமகளை மணமகனுக்கு இடப் பக்கத்தில் அமரச் செய்யலாம்.
மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதை அருவ மென்றும் உருவ மென்றும் சொல்ல இயலாத கந்தழிக் கடவுள் வடிவமென்றும், நீர் நிரம்பிய செம்பின்மேல் தேங்காயோடு விளங்கும் வடிவத்தினை இறைவன் அம்மை அப்பனாக இருக்கும் வடிவமென்றும், குடவிளக்கு, கிளைவிளக்கு முதலிய வைகள் இறைவன் ஒளிவடிவமாக விளங்கும் நிலையினைக் குறிப்பன என்றும் மறைமலை அடிகளார் தெரிவித்துள்ள கருத்தின்படி மணமக்கள் இம் மூன்று வகையாலும் இறைவனே வணங்குவார்கள்.
சமித்துகள் கொண்டு செய்யும் எரியோம்புதலும் இவ் வழிபாடுகளுள் தலைசிறந்த ஒன்றாக விளங்குதல் வேண்டும்.
புத்தாடை அணிந்து வந்த மணமக்கள் முதலில் பெற்றாேர் வழிபாடு செய்து அவர்தம் நல்வாழ்த்தினைப் பெற்று எரியோம்பும் செயலால் ஒளிவடிவில் கடவுளே வணங்குவர். செந்தீயோம்புதலால் கடவுளை வழிபடும்போது தேவார, திருவாசகங்கள், தமிழ் மறையாகிய திருக்குறள் இவைகளுள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் தகுதிவாய்ந்த பாடல்களைத் திருமணம் நிகழ்த்தும் ஆசிரியர் உளங்கனிந்து பாடுதல் வேண்டும். (அங்ஙனம் பாடுதற்குரிய பாடல்கள் இந்நூலில் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. வைணவ சமயத்தவர் திருமணத்திற்குப்பொருத்தமான பாடல்கள் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளன.) இவ்வழிபாடு முடிந்ததும் குழுமியுள்ள பெரியோர்களால் வாழ்த்தித் தரப்பெற்ற மங்கலநாணை மணமகன் மணமகளுக்கு அணிதல் வேண்டும். அப்பொழுது இன்னிசை முழக்கமும் "மனமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க!” என அன்பர்களின் வாழ்த்தலும், மஞ்சள் கலந்த மலரும் தூவுதலும் நிகழும்.
பின்னர் மணமக்கள் மாலைமாற்றிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் தம் மாலைகளை மூன்று முறை மாற்றிக் கொள்வதால் மணமக்களின் மன ஒருமைப்பாட்டினை மக்கள் அறிந்து கொள்கின்றனர். மாலை மாற்றுதல் முடிந்தபின்னர் மணமகன் தன் வாழ்க்கைத் துணைவியின் கையைப்பிடித்துக் கொண்டு மணப்பந்தலைச் சுற்றிவருதல் வேண்டும். மாலை மாற்றுதலும் மணமகளைக் கைப்பிடித்து வலம் வருதலும் தமிழ்த்திருமணத்திற்கு இன்றியமையாதனவாக உள்ளன. அன்றியும் மணமக்களின் உடன் பாட்டினை அங்குக் குழுமியுள்ளோர் அறிந்து கொள்வதற்கும் சிறந்த சான்றாக விளங்குகின்றன. இச் செயல்களோடு திருமணம் முடிவு பெறுகின்றது. பின்னர்த் திருமணம் செய்து வைத்த ஆசிரியரும் ஆன்றோர்களும் சான்றோர்களும் மணமக்களுக்கு இல்வாழ்க்கையின் சிறப்பினை எடுத்துக் கூறி வாழ்த்துவர்.
குறிப்பு
தமிழ்த் திருமணம் மிகவும் சிக்கன முறையில் ஒரே வேளையில் நிகழுமாறு அமைத்திருப்பதால், காப்புக் கட்டல் காப்புக்களைதல், அரசாணிக்கால் நடுகல் முதலியன தேவை இல்லை. இவைகளையும் மண நிகழ்ச்சியில் சேர்த்துச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்பவர்களுக்குப் பின்வருமாறு செய்தல் வேண்டும்.
காப்புக் கட்டுதல்: ஒரு தட்டிலே மஞ்சள் கலந்த அரிசியைப் பரப்பிவைத்து அதன் மீது மஞ்சள் குங்கு மங்களால் அலங்கரிக்கப்பட்ட தேங்காயை வைத்து அந்தத் தட்டினை மணமகனுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் முக்காலியின் மேல் வைத்தல் வேண்டும். மணமகன் வலக்கையினை அந்தத் தேங்காயின்மீது வைத்தபடி இருக்க முழுமஞ்சள் கட்டப்பெற்ற நூல்கயிற்றினை மணமகன் கையில் கட்டுதல் வேண்டும். அதன் பின்னர் மணமகள் தன் இடக்கையை அந்தத் தேங்காயின்மேல் வைக்க மணமகன் மஞ்சள் கட்டிய நூலினை மணமகள் கையில் கட்டுதல் வேண்டும். அதேசமயத்தில் அவர்களுக்கு எதிர்ப்புறத்தில் நடப்பெற்றுள்ள அரச மரக்கிகளைக்கும் மஞ்சள் நூல்கயிறு ஒன்று கட்டுதல் வேண்டும்.
காப்புக்களைதல்
திருமணம் முடிந்தபின்னர்க் காப்புக்கட்டிய அதே முறையில் மணமகன் மஞ்சள் பூசிய தேங்காயின் மேல் கையைவைக்கச் செய்து முன் புகட்டிய மஞ்சள் நூல் கயிற்றினை அவிழ்த்திடச் செய்தல் வேண்டும் அந்த நேரத்திலேயே அரசங்கிளையில் கட்டிய மஞ்சள் கயிற்றினையும் அவிழ்த்து விடுதல் வேண்டும். இந்நிகழ்ச்சிகளின்போது தும்மல், இருமல் முதலியன கேளாமல் இருத்தற் பொருட்டு மேளம் கொட்டுதல் வழக்கம்.
பந்தற்கால் நடுதல்
தமிழ்த் திருமணம் செய்துகொள்பவர்கள் இந்தச் சடங்கைச் செய்வதற்கு ஆசிரியர் உதவியை நாடவேண்டியதில்லை மங்கல மகளிர் ஐவர் ஒன்று கூடிப் பந்தற்கால்களுள் வட கிழக்கு மூலையில் நடவேண்டிய ஒன்றுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு மலர் சூடி மேளதாள முழக்கத்துடன் தங்கள் கைகளால் அந்தக் கம்பத்தைக் குழியில் நடலாம். ஆசிரியரும் உடனிருந்து நிகழ்த்த வேண்டுமென்று விரும்பினால் ஆசிரியரையும் வைத்துக் கொள்ளலாம். ஆசிரியர் இறைவழிபாடு செய்து மஞ்சள் கலந்த அரிசியைப் பரப்பிய தலை வாழையிலையின்மீது கலசம் நிறுத்தி, அந்தக் கலசத்திற்கு வழிபாடாற்றிக் கலசத்திலுள்ள நீரினைக் கொண்டு பந்தற் காலினைக் கழுவும்படி செய்வர். இந்த நிகழ்ச்சியை அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்பப் பெரியோர் கருத்தறிந்து செய்தல் நலம்.
உறுதி செய்தல்
இது திருமணம் நிகழ்வதற்கு முன்னர் மணமகள் வீட்டில் நிகழும் நிகழ்ச்சியாகும். மணமகனுக்கு உரியோரும் மணமகளுக்கு உரியோரும் ஒரு நல்ல நாளில் உற்றார் உறவினர் முன்னிலையில் ஒருவருக்கொருவர் உறுதி கூறிக் கொள்வது மரபு. பெண்வீட்டார் தம் பெண்ணைக் குறித்த ஒரு மணமகனுக்குத் தருவதாகவும் அவ்வாறே அம்மணமகன் வீட்டார் மணமகனுக்கு வாழ்க்கைத் துணைவியாகக் குறித்த ஒரு பெண்ணை ஏற்றுக் கொள்வதாகவும் ஒருவர்க்கொருவர் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் ஆசிரியர் முன்னிலையில் சுற்றத்தார்கள் நண்பர்கள் சான்றாக விளங்க உறுதி செய்து கொள்ளவேண்டும்.