தமிழ்த் திருமண முறை/வள்ளுவர் கண்ட காதலர்.
வள்ளுவர் கண்ட காதலர்
1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
இவள் இச் சோலையில் வாழும் தெய்வமகளோ, சிறந்த மயிலோ, அல்லது மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்தானோ; இவள் இன்ன வகையைச் சார்ந்தவள் எனத் துணிந்து சொல்ல முடியாமல் என் மனம் மயங்குகின்றது.
2. இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
இவளுடைய மைதீட்டிய கண்களுக்கு இரண்டு வகையான பார்வை இருக்கிறது. அவற்றுள் ஒரு பார்வை நோயை உண்டாக்குவது, மற்றாெரு பார்வை அந்நோய்க்கு மருந்து.
3. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
புறத்தே, அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கால் நோக்குதல் அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பு ஆகும்.
4.கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்
என்ன பயனும் இல.
காதலொடு கூடிய இருவர் கண்களுள் ஒருவர் கண்கள் மற்றாெருவரது கண்களை நோக்குமேயானல் அவர்கள் சொல்லக் கூடிய வாய்ச் சொற்களால் ஒரு சிறிதும் பயன் இல்லை.
5.கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும் மூக்கால் மோந்தும், உடம்பால் தொட்டும் அனுபவிக்கப்படும் ஐம்புல இன்பங்களும் ஒளி பொருந்திய வளையலணிந்த இவளிடத்தே உள்ளன.
6. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
மாநிறமுடைய இவ்வழகிய மங்கையினது சேர்க்கை தம் வீட்டிலிருந்து தம்முடைய முயற்சியால் வந்த பொருளைத் தமக்கு உரியவர் யாவருக்கும் பகிர்ந்துகொடுத்துத் தாமும் தமக்குரிய பாகத்தை அனுபவிப்பதைப் போன்ற இன்பத்தைத் தருகிறது.
7. அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
நூல்களை ஊன்றிப் படிக்குந்தோறும் முன்பு இருந்த அறியாமையை உணர்ந்துகொள்வது போன்று சிறந்த ஆபரணங்களை அணிந்த இவளிடம் சேருந்தோறும் இவள் பால் உள்ள காதல் புதுமையாய் மேன்மேலும் மிகுந்து இன்பத் தைத் தருகிறது.
8. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்நீரள் யாம்வீழ் பவள்.
அனிச்சப்பூவே, நீ எல்லா மலர்களினும் மென்மையான தன்மையைப் பெற்றிருக்கின்றாய். ஆதலின் நீ வாழ்வாயாக. ஆனால் என்னால் விரும்பப்படுகின்றவள் உன்னைக்காட்டிலும் மென்மையான தன்மையுடையவள்.
9. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
மூங்கில்போலும் தோளினையுடைய இவளுக்கு உடல் தளிர் போன்ற தன்மை வாய்ந்தது. பல் முத்துப்போன்றது, மணம் இயற்கையாக அமைந்த நல்ல மணம். மை தீட்டப் பெற்ற அவள் கண்கள் வேல்போன்று இருக்கும்.
10. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
அனிச்சமலரும் அன்னப் பறவையின் இறகும் ஆகிய இவைகள் இவள் பாதத்திற்கு (முள்ளோடு கூடிய) நெருஞ்சிப் பழம் போன்றவைகள்.
11. பாலோடு தேன்கலங் தற்றே பனிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய வெண்மையான பற்களில் ஊறிய நீர் பாலோடு தேன் கலந்தாற் போன்ற சுவையை யுடையதாயிருக்கின்றது.
12. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
இம் மங்கையோடு எமக்குள்ள தொடர்பு உடம்பிற்கும், உயிர்க்கும் உள்ள தொடர்புகள் எப்படியோ அப்படியாகும்.
உடம்பும் உயிரும் வேற்றுமையில்லாமல் கலந்திருத்தல் போலவும், இன்ப துன்பங்களைச்சேர்ந்து அனுபவித்தல் போலவும் நாங்கள் இருவரும் வேற்றுமையில்லாமல் இன்ப துன்பங்களைச் சேர்ந்து அனுபவிக்கக்கூடிய அவ்வளவு நெருங்கிய தொடர்பு உடையவரானோம் என்பதாம்.
13. கருமணியில் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
என் கண்ணின் கருமணியிலுள்ள பாவையே என்னால் விரும்பப்படுகின்ற அழகிய நெற்றியை யுடைய இவள் தங்கி இருப்பதற்கு வேறு இடம் இல்லை. ஆகையால் நீ தங்கி யிருக்கும் அவ்விடத்தைவிட்டு வெளியே வருவாயாக.
14. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.
மை தீட்டப்படும்போது மை தீட்டும் கோலைக் கண் உணராதது போலக் கணவனைக் கண்டபோது அவரைக் காணாதபோது முனைத்திருந்த குற்றங்களுள் ஒன்றையும் நான் காணமாட்டேன்
15. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
என் கணவரை யான் காணும்போது குற்றமானவை ஒன்றையும் நான் அறியேன் ; அவரைக் காணாதபோது குற்றமல்லாதவற்றை அறியவே மாட்டேன் (அவர் குற்றத்தையே காண்பேன்.)
16. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
காம இன்பம் மலரைக் காட்டிலும் மென்மையுடையதாக இருக்கும். அங்ஙனம் அது மென்மை யுடையதாய் இருத்தலை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர்கள் உலகத்திற் சிலரே ஆவர்.
47.உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
ஊடல் உணவுவகைகளுக்குச் சுவை தரும் உப்புப் போன்றது. அவ்வூடலை நாம் சிறிது அதிக நேரம் நீட்டித்தோமானால் உப்பு அதிகப்பட்டு உணவு சுவை கெட்டுப்போவது போல் இல்வாழ்வு பயனற்றதாகிவிடும்.
18. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
இந்தப் பிறவியில் நான் உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன் என்றேன்.அப்படி யானால் மறு பிறவியில் பிரியக் கருதுகின்றீரோ என்று பிணங்கித் தன் கண்கள் நிறைய நீரைப் பெருக்கினாள்.
19. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
பிரிந்திருந்த காலத்து நான் உன்னை நினைத்தேன்” என்றேன். அப்படியானால் 'என்னை நீர் மறந்தீரோ, மறந்தாலல்லவோ நினைத்திருக்க வேண்டும்’ என்று சொல்லி முன் தழுவுவதற்கு இருந்தஅவள்அதைவிட்டு ஊடல் கொள்ளலாயினாள்.
20. ஊடலில் தோற்றவர் வென்றார், அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
இன்பம் நுகர்தற்குரிய இருவருக்குள் நிகழும் ஊடலில் தோல்வியுற்றவரே வெற்றிபெற்றவராவர்.இவ்வுண்மைஅப்போது தெரியக்கூடாதிருப்பினும் அவர்கள் சேர்ந்து இன்புறும் போது நேரில் கண்கூடாக அவர்களே அறிந்து கொள்ளுதல் கூடும்.
21. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
யாயும் யாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
-குறுந்கொகை,
ஆண் பெண் வாழ்க்கை அன்பு வளர்க்கை
பெண்மையில் முன்னும் ஆண்மை அதிகம்
பெண்சொற் கேட்டல் பெரிய தவமே
பெண்மையில் தாய்மை தாய்மையில் இறைமை
காதல் பெருக்கம் தாய்மை அன்பே
தாய்மை அன்பே இறைமைக் கருணை
வாழ்க பெண்மை! வாழ்க காதல்!
-பெரியார் திரு. வி. க. அவர்கள்.