உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் திருமண முறை/தமிழ்த் திருமண நிகழ்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

தமிழ்த் திருமண நிகழ்ச்சிகள்

*   1. இறைவழிபாடு
    2. கால் நடுதல் 
    3. கும்ப பூசை
*   4. மணமக்களுக்கு ஆடை வழங்குதல்
*   5. காப்பு அணிதல் 
*   6. பெற்றாேர் வழிபாடு 
*   7. மகட் கொடை நேர்தல் 
*   8. செந்தீ வேட்டல்
    9. மங்கல நாண் வழிபாடு 
*   10. மணமக்கள் உறுதி மொழி
*   11. மங்கல நாண் அணிதல்
    12. பொட்டு இடுதல்
*   13. மாலை மாற்றல்
    14. பட்டம் கட்டுதல்
*   15. மணமக்கள் செந்தீ வலம் வருதல்
    16. வாழ்த்துரை
    17. கண்ணேறு கழித்தல்
    18. மணமக்கள் மணவறையைவிட்டு எழுந்து வேற்றிடஞ் சென்று அமர்தல், பால் பழம் உண்டல்
*   19. காப்புக் களைதல்

குறிப்பு

சுருக்கமாகத் தமிழ்த் திருமணம் செய்ய விரும்புபவர்கள் * இக்குறியிட்டுள்ள நிகழ்ச்சிகளைமட்டும் பின்பற்றலாம்.

தமிழ்த் திருமண நிகழ்ச்சிகளும் பொருத்தமான மந்திரப் பாடல்களும்
1. இறைவழிபாடு

மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து விளக்கேற்றி வைத்தல். ஆசிரியர் வடக்கு நோக்கி அமர்ந்து மணமகனை அழைத்துக் கிழக்கு நோக்கி அமரச் செய்தல். ஆசிரியர் பின்வரும் திருப்பாடலைப் பாடிக்கொண்டு மஞ்சள் கலந்த அரிசி, உதிரிமலர் ஆகியவற்றை மணமகன்கையில் கொடுத்துப் பிள்ளை யாரை வழிபடச் செய்தல்.

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.

2 கால்நடுதல்

அரசங்கிளை அல்லது ஆலங்கிளை ஒன்றினை மங்கல அணி அணிந்த மகளிர் மூவருடனும் மணமக்களுடனும் நடுதல். ஆசிரியர் பின்வரும் பாடலை ஓதிக்கொண்டு கால்களுக்கு. மஞ்சள், குங்குமம் இட்டுத் துணி கட்டச் செய்தல்.

மாவேலை ஆலமதை அடக்கித் தன்னுள்
        மண்ணுலகம் அண்டமெலாம் வளர்ந்துதானோர்
காவேயின் முன்னுதித்த அரசிற் றோன்றிக்
        கடம்புபுனை குருந்தினுக்குத் துணைய தாகித்
தூவேதந் தலைகாண்டற்கு அரிய தாகித்
        துன்பமுறு பிறவியெனுந் துகள்சேர் வெய்யில்
ஆவேனைத் தன்னடியாம் நிழலிற் சேர்த்த
        அத்திதனைப் பத்தி செய்து முத்தி சேர்வாம்.

3. கும்ப பூசை

வாழையிலையில் அரிசியிட்டு இரண்டு கும்பங்களில் தண்ணீர் நிறைத்துப் பெரிய கும்பத்தை வலப்பக்கத்திலும் சிறிய கும்பத்தை இடப்பக்கத்திலும் வைத்துக் கும்பங்களை இறைவன் இறைவியாக நினைத்துத் தூப தீபங்காட்டி ஆசிரியர் பின்வரும் பாடல்களை ஓதிக்கொண்டு மணமக்களை வழிபாடு ஆற்றும்படி செய்தல் :

இறை வழிபாடு

வலப்பக்கக் கும்பவழிபாடு

அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாங் வேறாம்
குறியது உடைத்தாய் வேதா கமங்களின் குறியிறந்தங்கு
அறிவினில் அருளால் மன்னி அம்மையோடு அப்பனாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்.

உலகெ லாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

இறைவி வழிபாடு

இடப்பக்கக் கும்பவழிபாடு

தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவமினி மேவ கிலாவே.

4.மணமக்களுக்கு ஆடை வழங்குதல்
மணமகனுக்கு ஆடை அளித்தல்

ஒரு தட்டில் புத்தாடை, பூ, வெற்றிலைபாக்கு இவைகளை வைத்து ஆசிரியர் பின்வரும் திருப்பாடலை ஓதிக்கொண்டு மணமகனுக்குத் தருதல்.



போன்னு மெய்ப்பொரு, ளுந்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்,
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்,
பிழையெ லாம்தவி ரப்பணிப் பானை,
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.

மணமகளுக்கு ஆடை வழங்குதல்

ஆசிரியர் பின்வரும் பாடலை ஓதிக்கொண்டு மணமகளுக்கு ஆடையை அளித்தல்.

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்பினும் தொண்டர் தருகிலா
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்,
இம்மை யேதரும் சோறும் கூறையும்
ஏத்த லாம் இடர் கெடலுமாம்,
அம்மை யேசிவ லோக மாள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே.


5. காப்பு அணிதல்

ஒருதட்டில் பச்சரிசி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் பூசிய தேங்காய், பழம், மஞ்சள் கோக்கப்பட்ட இரண்டு மஞ்சள் நாண் ஆகியவற்றை வைத்தல்.

திருமணம் தடையின்றி இனிது நடைபெறும் பொருட்டுத் திருவருட்காப்பாக இந் நாணைக் கையில் கட்டுகின்றேன் என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டு பின்வரும் பாடலை ஓதி மணமகன் வலக்கையில் கட்டுதல்.



மணமகன் வலக்கையில் கட்டல்

ஓர்வரு கண்க ளிணைக்கயலே உமையவள் கண்கள் இணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே எழில்கொளு தாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே.

ஆசிரியர் பின்வரும் பாடலை ஓத மணமகளுக்கு இடக் கையில் மணமகன் காப்புக்கட்டுதல்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
தந்தி மகன்றனே ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

6. பெற்றாேர் வழிபாடு

மணமகன் தன் பெற்றாேரின் திருவடியைத் தூய நீரால் விளக்கிப் பொட்டிட்டு மலர் தூவிப் பின்வரும் திருப்பாட்டை ஓதிக் கொண்டு வழிபடவேண்டும்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய்என் நெஞ்சம் துரப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

மண மகள் தன் பெற்றோரின் திருவடியை நீரால் விளக்கி மலர் தூவிப் பின்வரும் திருப்பாடலை ஓதிக்கொண்டு வழிபடுதல்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே,
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெரு மானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே.

7.மகட் கொடை நேர்தல்‌‌

மணமகளின் வலக்கையை மணமகனின் வலக்கையின் மேல் வைக்கச் செய்து, மணமகனின் பெற்றாேரும், மணமகளின் பெற்றாேரும் தத்தம் கைகளையும் மணமக்களின் கைகளோடு மேலும் கீழுமாக வைத்துக்கொள்ளும்படி செய்தல். மணமகளின் பெற்றோர் கையில் வெற்றிலை, பாக்கு, பழம் இவைகளுடன் நீர் வார்த்துக் கொடுத்தல். அப்பொழுது பின்வருமாறு கூறுதல் வேண்டும்.

மணமகள் பெற்றாேர்

' .......... . இருக்கும் ........ , .. ஆகிய யான் என் அருமை மகள் திருவளர்செல்வி ... ...... என்ற நங்கையை ....... இருக்கும் ......... மகன் திருவளர்செல்வன் ...... ...க்கு உறவினர், ஆன்றோர் முதலியவர்கள் சான்றாகத் திருமணம் செய்தளிக்கின்றேன்.

மணமகன் பெற்றாேர்

.......இருக்கும் ...... ஆகிய யான் என் அருமை மகன் திருவளர்செல்வன் ............ க்கு ...... ... இருக்கும் ........... மகள் திருவளர்செல்வி ... நங்கையை உறவினர் ஆன்றோர் முதலியவர்கள் சான்றாகத் திருமணம் செய்து கொள்ள இசைகின்றேன்,' என்று கூறுதல்.

8.செந்தீவேட்டல்

இந் நிகழ்ச்சிக்குச் சமித்து, நெய், பொரி, மணல் ஆகியவை வேண்டும்.

மணல் பரப்பிச் சமித்தினை இட்டுத் தீ வளர்த்தல். மணமகனைக் கொண்டு செந்தீயில் சுள்ளியும் நெய்யும் இடச் செய்தல். ஆசிரியர் பின்வரும் பாடல்களை ஓதுதல்.

நமச்சிவாய வாழ்க!நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!
கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

ஆடக மதுரை அரசே போற்றி!
கூடல் இலங்கு குருமணி போற்றி!
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி!
இன்றெனக் காரமுது ஆனாய் போற்றி!
மூவா நான்மறை முதல்வா போற்றி!
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி!
மின்னார் உருவ விகிர்தா போற்றி !
கல்நார் உரித்த கனியே போற்றி !
காவாய் கனகக் குன்றே போற்றி!
ஆவா என்றனக்கு அருளாய் போற்றி !
மானேர் நோக்கி மணாளா போற்றி!
வானகத் தமரர் தாயே போற்றி!
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி !
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி !
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி!
போற்றி போற்றி புயங்கப் பெருமான்!
போற்றி போற்றி புராண காரண!
போற்றி போற்றி சயசய போற்றி!

செந்தீ வளர்த்து முடிந்தபின் ஓதுதல்

இரு நிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாய்எறியும் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாசமாய் அட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவும் தம்முருவும் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளே யாகி
நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே.

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழல் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத் தயனுமால் அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
ஆதியே யடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்ற ருளாயே.

ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண் மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடு அரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.


9. மங்கல நாண் வழிபாடு

பொன் தாலியில் மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டு இருமுழ நீளமுள்ள மஞ்சள் பூசிய நாணில் அப் பொன் தாலியைக் கோத்து இரு புறமும் முடியிட்டுத் தட்டில் வைத்து, பூவெற்றிலை பாக்கு தேங்காய் பழம் மஞ்சள் இவற்றையும் வைத்துக் குழுமி யுள்ள சான்றோர் வாழ்த்துக்கூறிக் கைகளால் தொடும் வண்ணம் காண்பித்து வருதல் வேண்டும்.

மணமகன் மணமகளுக்கு வடக்குப் பக்கத்தில் அமர்தல். மணமகள் வலப்பக்கமும் மணமகன் இடப் பக்கமும் அமர்தல் வேண்டும். அப்பொழுது ஆசிரியர் பின்வரும் பாடலை ஓத. மங்கல நாண் வழிபாடு நடைபெறும்.

மன்றில்மணி விளக்கு எனலாம் மருவுமுக நகைபோற்றி
ஒன்றியமங் கலநாணின் ஒளிபோற்றி உலகும்பர்
சென்றுதொழ அருள் சுரக்கும் சிவகாம சுந்தரிதன்
நின்றதிரு நிலை போற்றி நிலவுதிரு வடிபோற்றி.


10.மணமக்கள் உறுதிமொழி

மணமகன் உறுதிமொழி கூறுதல்

பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே ! பேரன்புகெழுமிய உறவினர்களே ! உங்கள் அனைவர்க்கும் அன்பு கனிந்த வணக்கம். வாழ்விலோர் திருநாளாகிய இந்நன்னாளில் உங்கள் முன்னிலையில் இப்பெண்ணின் நல்லாளை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ள மட்டற்ற மகிழ்ச்சியுடன் இசைகின்றேன். அன்பில் மலர்கின்ற இல்வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது வான்புகழ் வள்ளுவர் வகுத்த தெள்ளு தமிழ் நெறியில் நின்று வாழ்வேன் என்று உறுதி கூறுகின்றேன். என் துணைவிக்கு இல்லற வாழ்வில் அளிக்க வேண்டிய உரிமைகளை அளித்து அன்புடன் வாழ்வேன். ‘காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்’ என்ற ஆன்றோர் மொழியை நினைவிற் கொண்டு என் வாழ்க்கைத் துணைவியுடன் ஒற்றுமையோடு வாழ்வேன் என்பது உறுதி. எங்கள் இல்லற வாழ்வு பெற்றாேரும் பெரியோரும் புகழும் வகையில் இனிது நடைபெற வேண்டுமென்று எங்கும் நிறைந்த இறைவனை இறைஞ்சுகின்றேன்.

மணமகள் உறுதிமொழி கூறுதல்

இங்குக் குழுமியுள்ள பெரியோர்கள் அனைவர்க்கும் வணக்கம். உங்கள் முன்னிலையில் இந் நம்பியை என் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொள்ளப் பெருமகிழ்ச்சியுடன் இசைகின்றேன். என் கணவர் கருத்தறிந்து ஒழுகி இல்வாழ்க்கைக்கு உற்ற துணையாகத் திகழ்வேன். இன்பத்திலும் இன்னலிலும் இணைபிரியாது என் கணவரை மதித்து அவர் இன்பமே என் இன்பம்; அவர் நலமே என் நலம் எனக்கருதி வாழ்வேன் என்று உறுதி கூறுகின்றேன். தமிழ் மறையாம் திருக்குறள் கூறும் இல்லற நெறியில் என் கணவருடன் அன்புடன் இணைந்து வாழ்வேன் என்பது உறுதி. எங்கள் மனையற வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கச் சிறப்புடன் விளங்க அருள்புரியுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.


11. மங்கல நாண் அணிதல்

1. மணமகனின் உடன் பிறந்தாள் ஒரு தட்டில் திருவிளக்கேற்றி அதனை மணமகளின் பின்புறம் ஏந்தி நிற்றல் வேண்டும்.

2. ஆசிரியர் மங்கல நாணை மணமகன் கையில் கொடுத்தல்.

3. மணமகன் தன் வலக்கை மணமகளின் கழுத்திற்குப் பின்புறமாக அவனது வலப்பக்கம் வரும்படிவளத்து, மற்றாெருகை இடப்புறத்தில் இருக்க, மங்கல நாணின் இரு புறங்களையும் பற்றித் தாலியின் முகப்பின் முன்புறம் மார்பின் நடுவே விளங்க, கழுத்தில் கட்டி மூன்று முடியிடுதல் வேண்டும். பின் கையெடாமல் திருநீறு, குங்குமம் சந்தனம், மலர் இவற்றை முடியில் வைத்தல் வேண்டும்.

மணமகன் மணமகளுக்கு மங்கல நாண் அணியும் பொழுது ஆசிரியர் பின்வரும் பாடல்களை ஓதுதல் வேண்டும்.

1.மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலே
கண்ணின் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

2.நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளேறு
ஒன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடையாத திருவுடை யானை சிராப் பள்ளிக்
குன்றுடை யானைக் கூறவென் உள்ளம் குளிரும்மே.

3.முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
   மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
   பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
   அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள்
   தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

12. பொட்டு இடுதல்

மணமகளுக்கு மணமகன் பொட்டு இடுதல். அப்போது, ஆசிரியர் பின்வரும் பாடலை ஓதுவார்.

கலவஞ்சேர் கழிக்கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவஞ் சே ரணை வாரிக் கொணர்ந் தெறியும் அகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடும்
திலகம்சேர் நெற்றியினர் திருவேட்டக் குடியாரே.

13. மாலை மாற்றல்

மணமகன் தன் கழுத்தில் அணிந்துள்ள மாலையைக் கழற்றி மணமகளுக்குச் சூட்டுதல். மணமகள் தன் கழுத்தில் உள்ள மாலையைக் கழற்றி மணமகனுக்குச் சூட்டுதல். அப்பொழுது ஆசிரியர் பின்வரும் பாடல்களை ஒதுவார்.

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினெடுஞ் சென்றவள் தன் குணத்தினை நன்கு அறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடு அரிசிலின்தென் கரைமேல்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடியாரவர் வான் புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.

14. பட்டம் கட்டுதல்

மணமகள் மணமகனின் இடப்பக்கத்தில் மாறி அமர்தல் வேண்டும். மணமக்களின் அம்மான்மார்கள் மணமக்களின் நெற்றியில் பட்டம் கட்டுதல். மாமிப்பட்டம், நாத்திப்பட்டம், கட்டுதலும் உண்டு. அப்பொழுது ஆசிரியர் பின்வரும் பாடலைப் பாடுவார்.

"கொட்ட மேகமழுங் குலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
பட்டமே புனைவா யிசைபாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை
நல்லவர் பிரியாத சிற்றம்பலம் இட்டமா வுறைவாயிவை மேவிய தென்னை கொலோ."


15. மணமக்கள் செந்தீ வலம் வருதல்

மணமகன் மணமகள் கையைப் பற்றிக்கொள்ளவேண்டும்.தோழன் முன்னும் தோழி பின்னும் செல்ல மணமக்கள் ஒரு முறை வலம் வந்து கிழக்கு நோக்கி நிற்றல் வேண்டும். மணமகனின் கைகளின் மேல் மணமகளின் கைகளை வைக்கச்செய்தல், மணமகளின் உடன் பிறந்தான் பொரியை மணமக்கள் கையில் இடுதல். மணமக்கள் அதைத் தம்கைகளால் மூடி வணங்கிப் பின் அதனைச் செந்தீயில் இடுதல்.

இவ்வாறு மூன்று முறை வலம் வந்து பொரியிடுதல்.அப்பொழுது பின்வரும் பாடல்களை ஓதுதல் வேண்டும்.

அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
ஐம்புலனும் அடக்கி ஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர் கோயில்
தகவுடைநீர் மணித்தலத் துச்சங் குளவர்க்
கந்திகழச் சலசத் தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்டட
மணஞ் செய்யும் மிழலை யாமே.

குறிப்பு

மணமக்கள் இரண்டாம் முறை வலம் வந்தவுடன் மணமகன் மணமகள் கால்விரலில் மெட்டியிடுதல். மூன்றாம் முறை வலம் வந்து பொரியிட்டதும் மைத்துனர்க்கு மோதிரம் இடுதல்.
16. வாழ்த்துரை

ஆசிரியர் மணமக்களை வாழ்த்திப் பின்வரும் திருப்பாடல்களை ஓதுதல்.

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியர் எல்லாம்.


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.

17. கண்ணேறு கழித்தல்

பெரியோர்கள் அரிசி சொரிந்து மணமக்களை வாழ்த்துதல். மங்கல அணியணிந்த மகளிர் ஆலத்தி எடுத்தல்.

18. மணமக்கள் மணவறையை விட்டு எழுந்து வேற்றிடம் சென்று அமர்தல். பால்பழம் உண்டல்.

குறிப்பு

மணமக்கள் திரும்பவும் மணமேடைக்கு வந்து அமர்தல்.

1. மணமக்களுக்கு அன்பளிப்பு அளித்தல்

2. வாழ்த்துரை கூறல்

3. வாழ்த்திதழ் படித்தல்

4. மணமக்கள் நன்றிகூறல் (அல்லது) பெற்றோர் நன்றிகூறல்
19. காப்புக்களைதல்

தட்டில் தேங்காய்,பழம், வெற்றிலை, பாக்கு வைத்து மணமகனை அழைத்து வரச்செய்து, ஆசிரியர் மணமகனின் கையில் கட்டப்பட்டுள்ள காப்புநாணை அவிழ்த்தல்.மணமகளை அழைத்து வரச்செய்து மணமகள் கையில் கட்டப்பட்டுள்ள காப்புநாணை மணமகன் அவிழ்த்தல்.இந்நிகழ்ச்சியுடன் திருமணம் நிறைவுறுகிறது.

வைணவ சமயத்தவர் திருமணத்திற்குப் பொருத்தமான பாடல்கள்

பச்சைமா மலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே !
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே ! 1
கங்கையின் புனித மாய
காவிரி நடுவு பாட்டுப்
பொங்குநீர் பரிந்து பாயும்
பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன்
கிடந்ததோர் கிடக் கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ?
ஏழையேன் ஏழை யேனே. 2
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுது யராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள் விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். 3

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்.
எம்பெருமான் ! நந்த கோபாலா ! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே !
எம்பெருமாட்டி யசோதாய் ! அறிவுறாய்.
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே ! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.4

வாரண மாயிரம் குழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றுஎதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்.5

இந்திர னுள்ளிட்ட தேவர்குழா மெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்.6

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்து டைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி! நான்.7

<poem>வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய்சின மாகளி றன்னான்என் கைப்பற்றி
தீவலஞ் செய்யக் கனாக்கண்டேன் தோழி! நான்.8

ஆயனுக் காகத் தான்கண்ட கனாவினை
வேயர் புகழ்வில்லி புத்துார்க்கோன் கோதை சொல்
தூயதமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும்நன் மக்களைப் பெற்று மகிழ்வரே.9

தருதுயரம் தாடயேல் உன் சரணலல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்ப் பொழில்சூழ் வித்துவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்தே யழும்குழவி யதுவேபோன் றிருந்தேனே.10


வந்தாய்என் மனம்புகுந்தாய் மன்னி நின்றாய் !
நந்தாத கொழுஞ்சுடரே !எங்கள் நம்பி !
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் ! இனியான் உன்னை என்றும்விடேனே.11

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத் தோர்தொழு தேத்தும்
ஆதியை அமுதை என்னை யாளுடை
யப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத்
திருவல்லிக்கேணி கண்டேனே.12

வாழக் கண்டோம் வந்துகாண்மின் தொண்டீர்காள் !
கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்கால் இன்துணை நாரைக்கு இரைதேடி
கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே.13

பாருருவி நீரெரிகால் விசும்பு மாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
இமையவர்தம் திருவுருவே றெண்ணும்போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம்மடிக ளுருவந் தானே.14

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கைகூடும் - புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி
தாம்தொழா நிற்பார் தமர். 15

நல்ல கோட்பாட் டுலகங்கள்
    மூன்றி னுள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
    அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள்
    இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனைவாழ்வர்
    கொண்ட பெண்டிர் மக்களே. 16

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் - வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்.17