இராக்கெட்டுகள்/இராக்கெட்டின் கதை
3. இராக்கெட்டின் கதை
இராக்கெட்டைப்பற்றி அறிந்து கொள்ளும் நாம் அதன் வரலாற்றையும் அறிந்து கொள்ளுதல் பொருத்தமாகும். 13 ஆம் நூற்றாண்டில் சீனர்கள் தாம் முதன்முதலாக இராக்கெட்டுகளைக் கண்டறிந்ததாக நம்பப்பெறுகின்றது. வெடிமருந்துகளைப்பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந் தனர். கி. பி. 1232 இல் அவர்கட்கும் மங்கோலியர்கட்கும் நடைபெற்ற போரில் இராக்கெட்டுகளை “நெருப்பு அம்புகளாகப்” பயன்படுத்தினர். அதன் பிறகு நீண்டகாலம்வரை இராக்கெட்டுகள் வாண வேடிக்கைக்காகவே பயன்படுத்தப் பெற்றன. ‘சீன வெடி’ என்று கேள்வியுற்றிருக்கின்றோம் அல்லவா? ‘சீறு வாணம்’ என இன்று வழங்கப்பெறும் இராக்கெட்டும் சீனர்களுடையதுதான்.
கி. பி. 1782 இல் மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த சீரங்கப் பட்டினத்தில் திப்பு சுல்தானுக்கும் ஆங்கில கவர்னர் ஜெனரலாக இருந்த கார்ன் வரலிசு பிரபுக்கும் ஒரு பெரும்போர் நிகழ்ந்தது. இந்தப் போரில் திப்பு சுல்தான் இராக்கெட்டுகளைப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது. பீரங்கிகளும் துப்பாக்கிகளும் போர்க் கருவிகளாக அமைந்த பிறகு இராக்கெட்டுகளைப்பற்றி மக்கள் மறந்தே போயினர். ஒவ்வொன்றும் 12 இராத்தல் எடையுள்ளதும் சுமார், அரை மைல் எல்லைவரை செல்லக் கூடியதுமான இராக்கெட்டுகளைப் பயன்படுத்தினார் திப்பு சுல்தான். ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான இராக்கெட்டுகள் சுடப்பெற்றுத் தற்காலிக வெற்றியையும் அவர் அடைந்தார். இந்நிகழ்ச்சி இங்கிலாந்தில் இராக்கெட்டு பீரங்கிப் படையைப்பற்றிய அக்கறையைத் தூண்டியிருக்கலாம். சற்றேறக்குறைய 1800 இல் சர். வில்லியம் கான்கிரேவ் என்பார் இங்கிலாந்தில் படைத்துறைக்குரிய இராக்கெட்டினை உருவாக்கினார். இது 5800 அடி தூரம் செல்லக்கூடியது. நெப்போலியனுடன் ஆங்கிலேயர்கள் போர் புரிந்த காலத்தில் இந்த இராக்கெட்டு பயன்படுத்தப்பெற்றது.
அதன் பிறகு சுமார் நூறாண்டு காலம்வரை இராக்கெட்டுக்களைப்பற்றி அறிவியலறிஞர்கள் தீவிரமாகச் சிந்திக்கலாயினர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூல்களும் இத்துறையில் வெளிவரலாயின. முதலாவது உலகப்பெரும் போர் நடைபெற்ற காலத்தில் (1914-1918) அமெரிக்காவில் கிளார்க் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த டாக்டர் ராபர்ட் எச். கோடார்டு என்ற அறிவியலறிஞர் இத் துறையில் அதிகக் கவனத்தைச் செலுத்தி உழைத்து வந்தார். அதன் பிறகு சுமார் 20 ஆண்டுக் காலத்தில் இத்துறையில் மிகுதியான ஆராய்ச்சி நடைபெற்றது. இராக்கெட்டுகள் வரவரப் பெரிதாக வளர்ச்சி பெறலாயின; அவற்றின் வேகமும் அதிகரிக்கத் தொடங்கின. அவை மேலும்மேலும் வானத்தில் பறந்து சென்று வான்வெளியை ஆராய்வதற்குத் துணை புரிந்தன. என்றாவது ஒருநாள் இச்சாதனம் சந்திரனுக்கும் அதற்கப்பாலுள்ள கோள்கட்கும் மக்களை ஏற்றிச் செல்வதற்கும் பயன்படும் என்று ஒரு சில சிந்தனையாளர்கள் கூறிவந்தனர்.
கி. பி. 1939 இல் இரண்டாம் உலகப் பெரும்போர் தொடங்கியது. வான்வெளிப் பயணம்பற்றிய கனவு கீழ்த்தரமான போக்கில் செயற்படத் தொடங்கியது. இராக்கெட்டுகள் வெடிப்பொருள்களால் நிரப்பப்பெற்று நீண்ட தூரங்களுக்கு அனுப்பப்பெற்று அழிவு வேலைகட்குப் பயன்படுத்தப்பெற்றன. 46 அடி நீளமுள்ளனவும் 14
டன் கனமுள்ளனவுமான "வி-2" இராக்கெட்டுகள் செருமெனியிலிருந்து உருமிக்கொண்டு கிளம்பின. ஏறக்குறைய மணிக்கு 3,000 மைலுக்கு மேல் வேகமாகச் செல்லும் இவைகள் இங்கிலாந்தின்மீது விழுங்கால் அச்சந்தரும் ஆயுதங்களாக அமைந்தன. ஆனால், இங்கிலாந்திற்கு
படம் 5 : வி-2. இராக்கெட்டு
நல்ல காலம். இந்த இராக்கெட்டுகள் யாவும் மிகச் சரியாக அமையவில்லை; அவற்றிலுள்ள கட்டுப்படுத்தும் அமைப்புகள் அவற்றைத் திட்டமிட்ட இலக்குகட்குக் கொண்டு செல்லவில்லை. ஆகவே, பெரும்பான்மையான இராக்கெட்டுகள் யாதொரு சேதத்தையும் விளைவியாமல் ஆங்கிலக் கால்வாயிலோ அல்லது வெறும் நிலத்திலோ வீழ்ந்து விட்டன.
செருமெனியில் சுமார் எட்டு ஆண்டுகள் நடைபெற்ற ஆராய்ச்சிக்குப் பின்னரே 1942 ஆம் ஆண்டில் வி-2 இராக்கெட்டு கண்டுபிடிக்கப்பெற்றது. இதன் உயரம் 46 அடி; அதன் விட்டம் 5 அடி 5 அங்குலம். எடை 14 டன், முதன் முதலாக இதனை பால்ட்டிக் கடற்கரையிலுள்ள பீனேமுண்டே (Peenemunde) என்ற இடத்திலுள்ள ஒரு பெரிய வட்டமான மேடையின்மீது நிறுத்தினர். சோதனை நாளன்று ஆய்வாளர்கள் சுறுசுறுப்பாகத் தம் செயல்களைக் கவனித்தனர். பணியாளர்கள் யாவரும் சோதனைப் புலத்தினின்றும் தொலைவில் நின்று கொண்டு கவனித்தனர். இராக்கெட்டைச் செலுத்துபவர்கள் தகுந்த பாதுகாப்பான இடங்களில் தங்கினர். இராக்கெட்டைச் செலுத்துவதற்குரிய சைகைக் குறிப்பு அளிக்கப்பெற்றதும் இராக்கெட்டு அதிக தூரத்திற்கு நெருப்பினைக் கக்கிக்கொண்டு கிளம்பியது. வானத்தில் சிறிது தூரம் கிளம்பியபின் திடீரென்று திசை மாறிப் பாய்ந்து பால்டிக் கடலில் 'பல்ட்டி' அடித்துக் கொண்டு விழுந்தது! இம் முயற்சி அறிவியலறிஞர்கட்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அதன்பிறகு இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பெற்ற வி-2 இராக் கெட்டுச் சோதனையும் வெற்றியடையவில்லை. மூன்றாம் தடவையாக 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்ற சோதனை வெற்றி பெற்றது. அப்பொழுது இராக்கெட்டு மணிக்குச் சுமார் 3000 மைல் வேகத்தை. எட்டியது ; சுமார் ' 100 மைலுக்குமேல் பிரயாணமும் செய்தது. | ஆனால் மிகப் பெரிய, மிகச் சரியான, மிகவும் அதிகமான நாசத்தை விளைவிக்கக்கூடிய, இராக்கெட்டு ஆயுதங்கள் திட்டமிடப்பெற்றிருந்தன. இந்நிலையில் போர் முடிவு பெற்றது. செருமெனி 1945 இல் இரண்டாவது உலகப் பெரும்போரில் தோல்வியுற்றதும் னேமுண்டே (Peenemunde) இராக்கெட்டுச் சோதனைகளும் முடிவுக்கு வந்தன. இவ் ஆராய்ச்சிகளைக் கண்டு பிறநாடுகள் வியப்பு எய்தின. இங்கு ஆய்வுகளில் பங்குபெற்ற அறிவியலறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும் நாலா திசைகளிலும் பிரிந்து சென்றனர். சிலர் இரஷ்யாவிற்கும், சிலர் ஃபிரான்ஸிற்கும், மற்றும் சிலர் இங்கிலாந்திற்கும் சென்றனர். முக்கிய மானவர்களில் சிலர் அமெரிக்காவை அடைந்தனர்.
இதன்பிறகு இராக்கெட்டு ஆராய்ச்சிக்கு அமெரிக்கா நிலைக்களமாக அமைந்தது. இரஷ்யர்களும் இத்துறையில் தீவிரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளும் இத்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுள் அமெரிக்காவில் மெக்ஸிகோ பாலைவனத்தில் வெள்ளை மணல் வெளியில் (White Sands) நடைபெறும் ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கது. வாழ்வதற்குப் பயனற்ற இப்பகுதி 125 மைல் நீளமும் 41 மைல் அகலமும் உள்ளது. இந்த இடத்தில் நல்ல பருவ நிலையும் அமைந்துள்ளது. இங்கிருந்து இராக்கெட்டு செல்லுவதைச் சுமார் 100 மைல் எல்லைவரை நன்கு காணுதல் கூடும். இந்நிலப் பகுதி முழுவதிலும் உற்று நோக்கிப் பரிசீலிக்கும் நிலையங்களும், தொலை ஒலிப்பான் (Tele matering), இராடார் (Radar) இவற்றின் பொறியமைப்புக்களும் பிறவும் உள்ளன. இந்த இடத்திலிருந்துகொண்டு இராக்கெட்டுகள் செல்வதைக் கவனிப்பதுடன் பல வகையான தகவல்களை வானொலி மூலம் சேகரிக்கவும் இங்கு வசதிகள் உள்ளன.காங்கிரீட்டு தளங்களும், இராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கு ஏற்ற மிகப் பெரிய நிலையங்களும் உள்ளன. இராக்கெட்டுகள் எதிர்பாராத வண்ணம் போக்குமாறிச் சென்று நொறுங்கி விழுந்தாலும் இக்கட்டடம் தாங்கக்கூடிய உறுதியுடன் கட்டப்பெற்றுள்ளது. கட்டடத்தின் கூரை மட்டும் 25 அடி கனமுள்ளது ; சுவர்கள் 10 அடி கன
படம் 6 : இராக்கெட்டில் அமைக்கப்பெற்றுள்ள கருவிகளினின்றும்
தகவல்கள் ஏற்புக் கருவிகளை அடைதல்