இராக்கெட்டுகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

கழக வெளியீடு: ௧௧௮௫


இராக்கெட்குகள்

 


o


 

ஆக்கியோன் :

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார், எம் ஏ, பி எஸ் சி, எல் டி,

தமிழ்த்துறைத் தலைவர்,

திருவேங்கடவன் பல்கலைக் கழகம், திருப்பதி.

 

o

 

திருநெல்வேலித் தென்னிந்திய

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,

திருநெல்வேலி-6. சென்னை-1.

1964

நல்லப்ப, ரெட்டியார் சுப்பு ரெட்டியார் (1917)


© THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,




Ed 1 Aug 1964




D54

K4



IROCKETTUKAL

(Rockets)



Appar Achakam, Madras -1.

பதிப்புரை

லக முன்னேற்றத்திற்கு அறிவியல் மிகமிக இன்றி யமையாதது. அது பல துறைகளாகப் பரந்து உள்ளது. அவற்றுள் மனிதன் விண்வெளியினை ஊடுருவித் திங்கள் மண்டிலத்தை நோக்கி விரைந்து செல்லும் முயற்சியும் ஒன்றாகும். இத்துறையில் மேலைநாடுகள் ஒன்றையொன்று போட்டியிட்டுக் கொண்டு முன்னேறிக்கொண்டு வருகின்றன. அறிவியலின் இத்தகைய விரைந்த போக்கினை ஆராயுங்கால் திங்கள் மண்டிலப் பயணம் விரைவில் கைகூடுவ தொன்றே எனத் தோன்றுகின்றது.

இம்முயற்சிக்கு அடிப்படையாயிருப்பது இராக்கெட்டுகள், இராக்கெட்டு எனினும் சீறுவாணம் எனினும் ஒக்கும். சீறுவாணமுறையை அடிப்படையாக வைத்துப் பெரிய அளவில் இயக்கப்படும் ஒரு கருவியே இராக்கெட்டு. இஃது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? இதன் கதை என்ன? இதனை இயக்குவது எங்கனம்? இதன் அமைப்பு என்ன? ஏவுகணைகள் என்றால் என்ன ? இன்ன பிற செய்திகளைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறுகின்றார் இந்நூலாசிரியர். அவருக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இளைஞர் வானொலி, அதிசய மின்னணு ஆகிய இந் நூலாசிரியரின் நூல்களை வாங்கிக் கற்றுப் பயனடைந்தது போல் தமிழகம் இதனையும் ஏற்றுக் கற்றுப் பயனடையு மென நம்புகின்றோம்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

அன்புப் படையல்

செந்தமிழ்த்தாய் மலரடியை மறவாச் சிலர்;
சீர்திருத்தக் கொடிவளர்க்கும் சீர்மை மிக்கார்;
சந்தஇளம் பிறையணிந்த மூர்த்திக் கன்பர் :
தயாமூல தத்துவத்தை நன்கு ணர்ந்தோர்;
சிந்தனைக்கு விருந்தளிக்கும் பண்புச் செல்வர்;
தேன்மொழியால் தமிழகத்திற் குயிர்அ ளிக்கும்
அந்தணர்;நல் குன்றைநகர் வாழ வந்த
அடிகளார்க் கிச்சிறுநூல் உரிய தாமே.

நூல் முகம்

காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்லவினைகள் செய்துன்

கோலை மனமெனும் காட்டின் கிறுத்தல் குறியெனக்கே.[1]
-பாரதியார்

"பறக்கச் சிறகிருந்தால் வெண்ணிலாவே-உன்றன்

பக்கம் வந்து சேருவேனே வெண்ணிலாவே...”[2]

என்பது புதுமைகளைக் கண்டு களிப்பெய்தத் துடிக்கும் மனிதன் காணும் கனவுகளைக் காட்டும் கவிஞனின் குரல். கவிஞர்களைப் போலவே அறிஞர்களும் கற்பனை ஓவியங்களைத் தீட்டிச் சுவை மிக்க புதினங்கள் பலவற்றைப் படைத்து மகிழ்கின்றனர். நம்மையும் மகிழ்விக்கின்றனர். இங்ஙனம் கி. பி. 160இல் எழுதப்பெற்ற கதையொன்றில் கதைத்தலைவன் வானக் கப்பலில் செல்லுகின்றான் பல இடையூறுகளைத் தாண்டி, விபத்துமிக்க பகுதிகள் பலவற்றைக் கடந்து, எட்டு நாட்கள் கழித்து விண்வெளியில் ஒளிமிக்க தீவு ஒன்றினைக் கண்ணுறுகின்றான். இதுவே மதிமண்டலமாகும். இன்னெரு கதையில் கதையாசிரியர் கதைத் தலைவனுக்குச் சிறகுகளைப் படைத்துவிடுகின்றார். மதிமண்டலத்தை எட்டிய இவன் கதிரவன் மண்டலத்தையும் அடைய முயல்கின்றான். இதனைக் கண்ட வானுலகத்தோர் சீற்றங்கொண்டு அவனைத் தரைக்கு அனுப்பிவிடுகின்றனர். மீண்டும் அவன் விண்வெளிக்கு வர இயலாதிருக்க அவனது இறக்கைகளையும் களைந்து விடுகின்றனர்!’ இதற்குப் பல நூற்றாண்டுகட்குப் பிறகு (17 ஆவது நூற்றாண்டில்) கெப்ளர் எழுதிய கதையிலும், அவருக்குப் பின்னர் காட்வின் என்பாரும், பிறரும் எழுதிய நூல்களிலும் மதிமண்டலச் செலவு பற்றிய கருத்துக்கள் வருகின்றன. கெப்ளர் காலத்தில் சமயக் கோட்பாடுகட்கும் அரசியல் கொள்கைகட்கும் புறம்பான கருத்துக்களை எடுத்துரைப்பவர்கள் கடுந்தண்டனைக்குள்ளானதால் அவர் கள் தம் கருத்துக்களைக் கதைவடிவில் கற்பனைக் கூற்றுகள் போல் எடுத்துரைக்க வேண்டியதாயிற்று. இருபதாவது நூற்றாண்டில் வாழ்ந்த எச். ஜி. வெல்ஸ் என்ற புகழ்பெற்ற அறிஞரும் "மதியை அடைந்த மாந்தர்கள்” (First men in the Moon) என்னும் புதினத்தில் பல கற்பனைக் கருத்துக்களை உருவாக்கியுள்ளார்.

இங்ஙனம் கற்பனையாக இருந்து வந்த எண்ணங்கள் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் செயற்பட்டன. பல அறிவியலறிஞர்கள், கனவாக இருந்து வந்த மதிமண்டலச் செலவினை நனவாக்க முயன்றனர். காடார்டு, ஒபெர்த் போன்ற அறிஞர்கள் இராக்கெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்தனர். நாளடைவில் இத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்தன. இன்று இராக்கெட்டின் துணையால் மதியினையே தொட்டு விட்டனர்! ஐந்தாண்டுகட்கு முன்னரே (1959 இல்) இரஷ்யர்கள் இதில் வெற்றி கண்டனர். இந்த ஆண்டுதான் (ஆகஸ்டு - 1964) அமெரிக்கர்கட்கு இதில் வெற்றி கிட்டியது. இப்பொழுது மதிமண்டலத்திற்கு மனிதனே சென்று திரும்பிவர வேண்டுமென்ற முயற்சி நடைபெற்று வருகின்றது. இன்னும் ஆறாண்டுகளில் இதில் வெற்றிகிடைக்கும் என்ற நம்பிக்கை அறிஞர்களிடையே இருந்து வருகின்றது.

இந்த விண்வெளிச் செலவுக்கு உறுதுணையாக இருப்பது இராக்கெட்டு. இந்தப் பயணம் தொடங்கப்பெறுவதற்கு முன்னர் வானவெளியில் எடையின்மை அனுபவம், வானவெளியின் வெப்பம், அமுக்கம் இவைபோன்ற செய்திகள் இவற்றை அறிவதற்கு இராக்கெட்டு துணைசெய்கின்றது. இராக்கெட்டின் துணையால் தொலைக்காட்சி அமைப்பு, இராடார் அமைப்பு, தொலை ஒலிப்பான் அமைப்பு போன்ற அமைப்புக்களடங்கிய சிறிய துணைக் கோள்களை விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான மைல் உயரங்கட்கு அனுப்பிப் பல செய்திகளை அறிகின்றனர். அன்றியும், போர்த்துறையிலும் பல்வேறு செயல்களில் இராக்கெட்டு பயன்படுகின்றது. இங்ஙனம் பலதுறைகளிலும் சேவை புரியும் இராக்கெட்டினைப் பற்றி இந்நூல் ஒரளவு விளங்க உரைக்கின்றது. இந்த விளக்கத்திற்கு ஆங்காங்கு 41 படங்கள் துணைசெய்கின்றன. இந்நூலும் இந்தவரிசையில் வரும் என்னுடைய ஏனைய நூல்களும் இவற்றைப் பயிலும் மாணாக்கர்களிடமும் பிறரிடமும் அறிவியல் பசியைத் தூண்டக் கூடுமானல் அதுவே யான்பெறும் பேறு எனக் கருதுவேன்; மகிழ்வேன்.

இலக்கியத் துறையிலும் சமயத் துறையிலும் பல்லாண்டுகளாகப் பணியாற்றிப் பெரும் புகழ்பெற்ற சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இந்த அறிவியல் நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்டமைக்குக் கழகத்தினருக்கும், சிறப்பாகக் கழகத்தின் உயிர் நாடியாக இயங்கும் இளமைத் துடிப்பு மிக்க கழக ஆட்சியர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கட்கும், என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது.

இந்நூலை வெளியிட இசைவுதந்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தினருக்கு-சிறப்பாக அப் பல்கலைக் கழகத்தை நன்முறையில் இயக்கிவரும் அதன் துணைவேந்தர் டாக்டர் V. C. வாமனராவ் அவர்கட்கு- என் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அறிவாலும் ஆற்றலாலும் உயர்ந்த சீலத்தாலும் அத்தனைக்கும் மேலாகச் செயலாற்றும் திறனுலும் என் உள்ளத்தைக் கவர்ந்தவர்கள்-தமிழ் கூறு நல்லுலகத்தின் தந்தை போன்றவர்கள்-தவத்திரு. குன்றக்குடி அடிகளார். அடிகளார் சின்னப்பட் மாக இருந்த காலத்திலேயே வேண்டாத சில மடத்துச் சம்பிர தாயங்களைக் கைவிட்டதனால் பொதுமக்கள் உள்ளத்கைக் கவர்ந்தவர்கள். எவருடனும் இன்முகத்துடன் பழகும் பண்புடையவர்கள்; ’பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என்ற வாய் மொழிக்கு எடுத்துக்காட்டாக நின்று நிலவுபவர்கள். பட்டம் ஏற்று மடத்துப் பொறுப்புக்கள் யாவும் அவர்களை வந்தடைந்த பிறகு பலதுறைகளிலும் அவர்களது அருள் நோக்கம் சென்றது. அறங்கள்யாவினும் "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்” என்பதை உணர்ந்து பல பள்ளிகளையும் இலவச உணவு விடுதிகளையும் நிறுவினார்கள். “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி, பேணி வளர்த்திடும் ஈசன்” என்பதையுணர்ந்த அடிகள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி, “பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம், பேதைமையற்றிடும் காணிர்' என்ற குறிக்கோளைப் பறையறைவித்தனர். தம் பார்வையின் கீழுள்ள திருக்கோயில்களைப் புதுக்கி அவற்றில் தமிழ் அருச்சனை வழிபாட்டைச் செயற்படுத்தினர்கள். இதனால் பாடிய வாய் தேனூறும் பால்வாய்ப் பசுந்தமிழ் ஏற்றம் பெற்றது. தமிழ் கூறு நல்லுலகமெல்லாம் அருள் நெறிக் கழகங்களைத் தோற்றுவித்துச் சமயப்பணி ஆற்றிவருகின்றார்கள். ஏனைய மடாதிபதிகள் போல் ‘மூலவராக’ இராமல், அடிகளார் ‘உற்சவராக’ எங்கும் சென்று தமிழ் முழக்கம் செய்து சமயநெறியையும் தமிழ்நெறியையும் பரப்பி வருகின்றார்கள். அடிகளாரின் திருவாயினின்றும் அருவிபோல் பொங்கிவரும் அமுத வெள்ளமாகிய பேச்சில் புலமை மணங்கமழும் ஆராய்ச்சித் திறன் ஒளிரும். சிந்தனைச் சுடர் தெறிக்கும். இவர்களுடைய கருத்துக்களில் ஆழ்கடலைப் போன்ற ஆழமும் உண்டு; அதனைப்போல் அவை அகன்றும் காணப்பெறும் அனைத்தையும் துறந்து தமிழைத் துறக்க முடியாத அடிகளார் ஆசிரியர்களின் தோன்றாத்துணையாக இருப்பவர்கள்; புலவர்களிடம் பெருமதிப்புக் கொண்டவர்கள். வருங்கால மானிடப் பயிர்கள்-மாணாக்கர்கள் உய்யவேண்டும் எனத் துடித்து நிற்பவர்கள். தம்மிடம் சுரக்கும் அருள் காரணமாக இங்ஙனம் பல்லாற்றானும் சேவை புரிந்துவரும் தவத்திரு அடிகளாரின்மீது அடியேன் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக இச்சிறுநூலை அவர்கள் திருவடிகளில் அன்புப் படையலாக்குகின்றேன். இவர்கள் ஆசியால் இந்நூல் தமிழ் கூறு நல்லுலகத்தில் பெருமிதத்துடன் உலவும் என்பது என் திடமான நம்பிக்கை.

என்னிடம் இயல்பான குறைகளிருந்தும் என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு என்னுளே நின்று என்னை இயக்கி இந்நூலை எழுதி வெளியிடுவதற்கு யான் மேற்கொண்ட முயற்சியை நிறைவேற்றி வைத்த எல்லாம் வல்ல திருவருளை மனம்மொழி மெய்களால் நினைந்து வாழ்த்தி வணங்குகின்றேன்.

திருப்பதி,
ஆகஸ்ட் 10, 1964
அன்புடன்,
ந. சுப்புரெட்டியார்.

  1. கவிதைகள் : விநாயகர் நான்மணிமாலை - செய்-6.
  2. கவிமணி: மலரும் மாலையும். வெண்ணிலா-15.
"https://ta.wikisource.org/w/index.php?title=இராக்கெட்டுகள்&oldid=1548041" இலிருந்து மீள்விக்கப்பட்டது