உள்ளடக்கத்துக்குச் செல்

இராக்கெட்டுகள்/ஏவுகணைகள்

விக்கிமூலம் இலிருந்து

8. ஏவுகணைகள்

ர் ஏவுகணையையும் (Missile) ஓர் இராக்கெட்டையும் பொதுமக்கள் ஒன்று எனக் கருதுகின்றனர். அது தவறு. ஏவுகணை என்பதற்குப் பகைவன்மீது எறியப்பெறுவது, அல்லது உத்தரவுப்படி பகைவன் மீது பாய்வது என்பது பொருள். அது துப்பாக்கியினின்றும் சுடப்பெறுவதன்று. அது தானாகவே இயங்கவல்லது. பெரும்பாலும் ஓர் ஏவுகணை இராக்கெட்டினைக்கொண்டே செலுத்தப் பெறுகின்றது. ஆனால், அஃது ஒரு ஜெட் இயந்திரமாகவும் இருக்கலாம்; அல்லது முன் தள்ளியுடன்கூடிய ஒரு சாதாரண விமான இயந்திரமாகவும் இருக்கலாம். ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணை (Guided missile) என்பது, விமானம் பறக்கும்பொழுது செலுத்தப்பெறக் கூடிய ஏவுகணையாகும். ஓர் உந்து ஏவுகணை (Ballistic missile) என்பது அது வானத்தில் செல்லும் முதல்நிலையில் விசையினால் எதிர்த்து வீசியெறியப்பெறுவதாகவும், அதன் பிறகு அது வீசி யெறியப்பெறும் பாறைபோல் பிரயாணம் செய்வதாகவும் உள்ள ஓர் ஏவுகணையாகும்.

முதன் முதலாகச் செருமானியர் அமைத்த வி - 2 போன்ற இராக்கெட்டுகள் ஒருவகை பீரங்கிப்படையாகவே கருதப்பெற்றன. அவை தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்குவதில் துப்பாக்கிகளைவிட நீண்ட எல்லையிலும், அதிக மான திருத்தத்திலும் இயங்கக் கூடியவை என்று மக்கள் நம்பினர். பிறகு எதிர்-விமான-ஏவுகணைகள் (Anti-aircraft-missile) வந்தன. இவை விமானத் தற்காப்புப் பணிகளில் துப்பாக்கிகள் இருந்த இடத்தைப் பெறத் தொடங்கின. விமானத்தின் மூலம் வீசியெறியப்பெறும் சிறு ஏவுகணைகள் நவீனப் போர் விமானங்களில் பீரங்கிகள், பொறித் துப்பாக்கிகள் இவற்றின் இடங்களைப் பெற்று வருகின்றன. இன்று போர் விமானங்கள், விமானிகளுடன் சென்று குண்டு வீழ்த்தும் விமானங்கள் இவற்றிற்குப் பதிலாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஒரு சில பணிகளுக்காகப் பயன்படுத்தப்பெற்றுவருகின்றன. இதன் விளைவாக எல்லா வகை உருவங்களிலும் பருமன்களிலும் எண்ணற்ற வகை ஏவுகணைகள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டன. ஆனால், அவற்றை அவை ஆற்றும் பணியினுக்கேற்ப அடியிற் கண்டவாறு ஒன்பது அடிப்படை வகைகளாகப் பாகுபடுத்தப்பெறுகின்றன. அவையாவன :

1. வானத்தினின்றும் வானத்தில் சுடப்பெறும் ஏவுகணைகள்.

2. வானினின்றும் தரையில் சுடப்பெறும் ஏவுகணைகள்.

3. வானினின்றும் நீரின்கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணைகள்.

4. தரையினின்றும் வானத்திற்குச் சுடப்பெறும் ஏவுகணைகள்.

5. தரையினின்றும் தரையில் சுடப்பெறும் ஏவுகணைகள்.

6. தரையினின்றும் நீருக்குக்கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணைகள்.

7. நீரின்கீழினின்றும் வானிற்கு எறியப்பெறும் ஏவுகணைகள்.

8. நீரின்கீழினின்றும் தரைக்கு எறியப்பெறும் ஏவுகணைகள்.

9. நீரின்கீழினின்றும் நீரின் கீழுக்கு எறியப்பெறும் ஏவுகணைகள்.

இவை ஆற்றும் பல்வேறு பணிகளை ஈண்டு அறிந்து கொள்வது மிகவும் பொருத்தமாகும்.

1. வானத்தினின்றும் வானத்தில் சுடப்பெறும் ஏவுகணைகள் : இவை சாதாரணமாக மிகச் சிறியவை. இந்த வகை ஏவுகணைகள் ஒரு விமானத்தினின்றும் மற்றொரு விமானத்தை நோக்கிச் சுடப்பெறுகின்றன. இவையும் இவற்றின் இலக்குகளைத் தாக்கும் முறைகளையொட்டிப் பாகுபாடு செய்யப்பெறுகின்றன. சில ஏவுகணைகள் தாமே சென்று தாக்கவல்ல (Homing) ஏவுகணைகளாகும். இவை எதிரி விமானத்தின் திசையை நோக்கிச் சுடப்பெற்றதும் இலக்கை நோக்கித் தாமே சென்று தாக்கும். இவை எதிரி விமானம் உண்டாக்கக்கூடிய இயந்திர ஒலியினுக்கோ அல்லது அது வெளிவிடும் வெப்பத்திற்கோ ஏற்றவாறு இயங்கி அந்த விமானத்தைத் தாக்கவல்லவை என்பதே. homing என்ற சொல்லின் பொருளாகும். இந்தப் பிரிவில்

படம் 22: வானத்தினின்றும் வானத்தில் சுடப்பெறும் ஏவுகணை

வேட்டைப் பருந்து (Falcon),பக்க ஊடுருவி (Side winder} என்னும் இரண்டு ஏவுகணைகள் உள்ளன. ஆனால், சிட்டுக் குருவி (Sparrow) என்னும் ஏவுகணை வேறொரு வகையானது. அஃது இராடார் ஒலிக்கற்றையில் செல்லுமாறு அமைக்கப்பெற்றுள்ளது. அஃது அதனைவிட்டு விலகிச் சென்றாலும் மீண்டும் அந்தக் கற்றைக்குள் வந்துவிடுமாறு' அமைக்கப்பெற்றுள்ளது. எனவே, இராடார் ஒலிக்கற்றை இலக்கைப் பின்தொடர்வது போலவே இந்த ஏவுகணையும். அந்த இலக்கைப் பின்தொடர்கின்றது.

2. வானினின்றும் தரையில் சுடப்பெறும் ஏவுகணைகள் : இவை ஓர் இராக்கெட்டு அல்லது ஜெட்டினால் ஏவப்பெறுகின்றன. இவற்றுள் மிகச் சிறியவை ஹெலிகாப்டர்களாலும் (Helicopters) இலேசாகவுள்ள வேறு வானூர்திகளாலும் சுடப்பெறும் டாங்கிப்படையின்மீது எதிர்த்துச் சுடப்பெறும் மிகச் சிறிய இராக்கெட்டுகளாகும். இவற்றுள் பெரியவை ஒரு விமானம் போலவே தோன்றும். இவை பெரிய விமானத்தால் மேலே கொண்டு செல்லப்பெற்று இலக்கிற்குச் சுமார் 100 மைல் தொலைவில் விடுவிக்கப்பெறுகின்றன. இவை இராக்கெட்டின் திரவ எரிபொரு

படம் 23: வானத்தினின்றும் தரையை நோக்கிச்
சுடப்பெறும் எவுகணை

ளால் இயக்கப்பெற்று வேறெதுவும் தம்மைத் தொடர முடியாத வேகத்தில் உயர்ந்து சென்று பிறகு கீழ்நோக்கி இலக்கின் மீது பாய்கின்றன.

3. வானினின்றும் நீரின் கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணைகள் : இவை மேற்குறிப்பிட்ட தரையை நோக்கிச் சுடப்பெறும் ஏவுகணைகளைப் போன்றவையே. இவை கப்பலை நோக்கி, சிறப்பாக நீர் மூழ்கிக் கப்பலை நோக்கிச் சுடப்பெறுகின்றன. சாதாரணமான டார்ப்பிடோக்களில் கழற்றப்பெறக்கூடிய இறக்கைகள், பொறி, வழிகாட்டி அமைப்பு இவை அமைந்தவையே இந்த வகை ஏவுகணைகளாகும். வளி மண்டலத்தினின்றும் வீசியெறியப்பெறும் இவை குண்டுகளைப்

(Bombs) போலவே இலக்குகளை நோக்கிப் பாய்கின்றன.. முன்னதாகவே அறுதியிடப்பெற்ற ஓர் எல்லையில் அவை தம்முடைய இறக்கைகளையும் பொறிகளையும் கழற்றிவிடுகின்றன ; அதன் பின்னர் அவை குதிகொடைகள் மூலம்

படம் 24: வானினின்றும் நீரின்கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணை

நீரினுள் இறக்கப்பெறுகின்றன ; பின்னர்க் குதிகொடைகளையும் கழற்றிக் கொண்டு டார்ப்பிடோக்களைப்போலவே இலக்குகளைத் தாக்குகின்றன. (படம் 24 ஐப் பார்க்க.)

4. தரையினின்றும் வானத்திற்குச் சுடப்பெறும் ஏவுகணைகள் ; இவை சாதாரணமாக இராம்ஜெட் (Ram jet) என்ற ஒருவகை ஊர்திகளால் தரையின்மீது அல்லது கப்பல்களின் மீது வீசியெறியப்பெறுகின்றன. இன்று நடைமுறையிலுள்ளவை யாவும் 100 மைல்களுக்குட்பட்ட எல்லையையுடையவைகளாகவே உள்ளன. பெரும்பாலும் இவை விமானத் தற்காப்புப் படையினின்றும் நழுவித் தப்பித்த விமானங்களின்மீது பயன்படுத்தப்பெறுகின்றன. இறுதி

படம் 25 : தரையினினின்றும் வானத்திற்குச் சுடப்பெறும் ஏவுகணை

யாக, பல நூறு மைல்கள் தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள ஒரு கண்டம் தாண்டும் உந்து ஏவுகணையையும் (I.C.B.M.)1 அழிப்பதற்குப் பயன்படுத்தப்பெறும் ஏவுகணைக்கெதிர் ஏவுகணைகளும் இவ்வகையுள் அடங்கும்.

5. தரையினின்றும் தரையில் சுடப்பெறும் ஏவுகணைகள் : இவ்வகை ஏவுகணைகள் துப்பாக்கிகள், தரையைத் தாக்கும் விமானியுள்ள விமானம் இவற்றின் இடத்தைப் பெறுகின்றன. இவை தரையினின்றோ அல்லது கப்பலிலிருந்தோ தரை அல்லது கடலிலுள்ள எந்தவகை இலக்கின் மீதும் சுடப்பெறுகின்றன. இந்த வகையுள் ஒரு தனிப் போர்வீரனால் அமர்ந்து செல்லப்பெற்று டாங்கிகளின் மீதும் எதிரியின் பலமான போர்த்தளங்களையும் சுடப்பெறும் சிறிய இராக்கெட்டுகள், 10 லிருந்து 1000 மைல்கள்
1. I. C. B. M.-- Inter Continental Ballistic Missile.

படம் 26: அட்லாஸ் என்னும் கண்டம் தாண்டு உந்து ஏவுகணை

வரை செல்லக்கூடிய பெரிய நயத்திறம் வாய்ந்த (Tactical) ஏவுகணைகள், 1500 மைல்கள் வரை செல்லக்கூடிய இடை நிலை எல்லை உந்து ஏவுகணைகள் (I. R. B. Ms.),[1] 9000 மைல்கள் வரை செல்லக்கூடிய கண்டம் தாண்டும் உந்து ஏவுகணைகள் ஆகியவை யாவும் அடங்கும்.

பெரும்பாலான தரையினின்றும் தரைக்குச் சுடப் பெறும் ஏவுகணைகள் யாவும் இராக்கெட்டுகள் அன்று; விமானி இல்லாத விமானங்கள் போல் காணப்பெறும் அவை 'பறக்கும் குண்டுகள்' (Flying bombs) ஆகும். இவை ஜெட்பொறிகளால் சக்தி தரப்பெறுகின்றன. பெரும்பாலும் அவை 'சுற்றித் திரியும் ஏவுகணைகள்' (“Cruise missiles') அல்லது ‘காற்று - வாங்கும் ஏவுகணைகள்' (‘Air-breathing missiles') என வழங்கப்பெறுகின்றன. காரணம், அவை வளிமண்டலத்தில் 65,000 அடிக்குக்கீழ் உந்து உந்து எவுகணை வெடிகுண்டுபோல் பின்பற்றிச்-

 செல்வதற்குப் பதிலாகக் காற்று மண்டலத்தில் சுற்றித் திரிகின்றன.

படம் 27: தரையினின்று தரைக்கு டாங்கிகளுக்கு எதிராகச்
சுடப்பெறும் ஏவுகணைகள் ஜீப்பினின்றும் வீசியெறியப்படுகின்றன.

6. தரையினின்றும் நீருக்குக்கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணைகள் ; இவை கப்பல்களிலிருந்து வேறு கப்பல்களையோ அன்றி நீர்மூழ்கிக் கப்பல்களையோ தாக்கும் பொருட்டு ஏவப்பெறுபவை. இந்த வகைக் கணைகள் பொதுவாக வானினின்றும் நீருக்குள் அனுப்பப்பெறும் ஏவுகணைகளைப் போன்றவை. ஒரு கப்பல் தன்னுடைய சாதாரணமான துப்பாக்கிகள், டார்ப்பிடோக்கள் ஆழிடக் குண்டுகள் இவற்றின் வீச்சிற்கு அப்பாற்பட்ட இலக்குகளைத் தாக்குவதற்கு அதற்குத் துணைசெய்வதே இதன் நோக்கமாகும்.

7. நீரின்கீழினின்றும் வானிற்கு எறியப்பெறும் ஏவுகணைகள் : இவை நீர்மூழ்கிக் கப்பலினின்றும் விமானத்தை நோக்கி எறியப்பெறும் ஏவுகணைகளாகும். இன்றைய நிலையில் இவை நடைமுறையில் பயன்படுத்தப்பெறவில்லை.

8. நீரின் நீரினின்றும் தரைக்கு எரியப்பெறும் ஏவுகணைகள் : இன்றுவரை இவ்வகை ஏவுகணைகளில் ஒன்றே ஒன்று தான் வெளியாகியுள்ளது. இது போலேரிஸ் (Polaris) எனப் படும் கடற்படையின் இடைநிலை எல்லை உந்து ஏவுகணையாகும் (I. K. B.M.). இது பிரத்தியேகமாக அமைக்கப் பெற்ற அணுவாற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலால் ஏற்றிச் செல்லப்பெறுகின்றது. ஒரு நீர்மூழ்கிக் கப்பலால் பதினாறு இவ்வகை ஏவுகணைகள் ஏற்றிச் செல்லப்பெறுகின்றன. இவற்றை இயக்கும்பொழுது முதலில் அவை மேற்பரப்பிற்கு அமுக்கப் பெற்ற காற்றினால் (Compressed air) உந்தித் தள்ளப்பெறுகின்றன. அதன் பிறகு இராக்கெட்டுகள் தீப்பற்றிச் சாதாரண ஓர் இடைநிலை எல்லை உந்து ஏவுகணைபோல் (I. R. B.M.) இலக்கினை நோக்கிக் காற்றில் பிரயாணம் செய்கின்றன. போலேரிஸ் ஏவுகணைகள் தற்காப்பு இராணுவப் படைத்துறைக்கு ஒரு மிகப் பெரிய பிரச்சினையைத் தருகின்றன. ஏனெனில், இவற்றின் தரை ஏவுகணைகள் போலன்றி இவை எளிதில் இயங்கும் (Mobile) கண்டறிய முடியாத மூலதளத்தினின்றும் (Unknown base) கிளம்புகின்றன.

9. நீரின்கீழினின்றும் நீரின்கழுக்கு எறியப்பெறும் ஏவு கணைகள் ; இவை எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பல்களையும், கப்பல்களையும் தாக்குவதற்கு நீர் மூழ்கிக் கப்பல்கட்குத் துணையாக உள்ளன. இத்தகைய ஏவுகணைகள் இன்னும் அதிகமாக வளர்ச்சிபெறவில்லை. ஆகவே, இவற்றைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. நீர் மூழ்கிக் கப்பலின் சாதாரண டார்ப்பிடோக் குழல்களின் வழியாகச் சுடப்

படம் 28 : நீரின் கீழினின்றும் தரைக்கு ஏவப்பெறும் கணை

பெற்று நீர்ப்பரப்பிற்கு எழுந்து அங்கிருந்து இலக்கினை நோக்கித் தாமாகச் செல்லுவதைத் தவிர, இவை தரையினின்றும் நீரின் கீழிடத்திற்கு எறியப்பெறும் ஏவுகணைகள் போலிருக்கலாம்.

ஒரு முழுமையான ஆயுத அமைப்பில் ஏவுகணை ஓர் உறுப்பாகும் என்ற விஷயம் ஈண்டு நினைவிலிருத்தத் தக்கது. எடுத்துக்காட்டாக, டூக்லாஸ் தோர் இடைநிலை உந்துகணை (The Douglas Thor IRBM) அமைப்பில் 14 பெரிய இழுத்துச் செல்லப்பெறும் வண்டி ஏற்பாடுகள் உள்ளன. இக்கணை இயங்குவதற்கு இவை இன்றியமையாதவை. இவற்றில் ஆற்றலை உற்பத்தி செய்யும் அமைப்புக்கள், மின்சாரக் கருவி யமைப்புக்களைக் கொண்ட வண்டி, சீதள அமைப்பு வண்டி, எரிபொருள் தொட்டிகளை ஏற்றிச்செல்லும் வண்டிகள், எரிபொருள்களைப் பம்பு மூலம் அனுப்புவதற்குரிய வாயுநிலையிலுள்ள ஆக்ஸிஜன், நைட்ரஜன் இவற்றைக் கொண்ட கொள்கலன்கள், தூக்கியெறியும் அமைப்பு முதலியவை அடங்கும். இவையும் 65 அடி நீளமுள்ள ஏவுகணையும் சாமான்களை ஏற்றிச் செல்லும் மிகப் பெரிய விமானத்தில் ஏற்றிச் செல்லப்பெறும்.

  1. R. B. M.–Intermediate Range Ballistic Missile.