இராக்கெட்டுகள்/வழிகாட்டி அமைப்புக்கள்

விக்கிமூலம் இலிருந்து

9. வழிகாட்டி அமைப்புக்கள்

ரு மாணாக்கன் தான் பயிலும் காலத்தில் பள்ளியில் நல்ல சூழ்நிலை இருந்தால்தான் சிறந்த முறையில் கல்வி பெற இயலும். இத்தகைய நல்லதொரு சூழ்நிலையை நிலவச் செய்வதற்குப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒழுங்கு முறை விதிகளடங்கிய ஏற்பாட்டினை வகுத்து வைத்துள்ளனர். ஆசிரியர்கள் நல்ல முறையில் பணியாற்றுவதற்குப் பள்ளி ஆட்சியாளரும் சில ஒழுங்குமுறை ஏற்பாடுகளைத் திட்டமிட்டுள்ளனர். பள்ளி ஆட்சியாளரும் ஆசிரியர்களும் நன்முறையில் செயற்படுவதற்கு அரசினர் சில விதிகளை வகுத்துள்ளனர். இந்த வகை ஏற்பாடுகளால் பள்ளி நன்முறையில் இயங்கி மாணாக்கர்கட்கு நல்லதொரு சூழ்நிலை அமைகின்றது. இந்த ஏற்பாட்டு விதிகளில் ஏதாவது ஒரு விதியினின்றும் விலகிச் சென்றாலும் சூழ்நிலை கெடுகின்றது. இதனால் தக்கவர் தலையிட்டு அதனைச் சரிப்படுத்த நேரிடுகின்றது.

இங்ஙனம் பள்ளி சரியாகச் செயற்படுவதற்குச் சில ஏற்பாடுகளிருப்பதைப் போலவே இராக்கெட்டுகளும் ஏவுகணைகளும் சரியான முறையில் இயங்குவதற்குச் சில அமைப்புக்கள் உள்ளன. இந்த அமைப்புக்களை ‘வழிகாட்டி, அமைப்புக்கள்’ (Guidance systems) என்று வழங்குவர். விண்வெளியில் பிரயாணம் செய்யும் இராக்கெட்டு வழிவிலகாது செல்லு வதற்குக் கவனமாகத் திட்டமிடப்பெறுதல் வேண்டும்; இத்திட்டத்தில் பல்வேறு கருவிகளடங்கிய விரிவான திட்டம் தேவைப்படுகின்றது. இராக்கெட்டுகளில் சாதாரணமாக இரண்டு வித அமைப்புக்கள் பயன்படுத்தப்பெறுகின்றன. ஒருவகை அமைப்பில் முதன்மையாகவுள்ள இராக்கெட்டுடன் ‘எதிர்-இராக்கெட்டுகள்’ (Retro-rockets) எனப்படும் இராக்கெட்டுகளை அதன் பக்கவாட்டில் அமைக்கின்றனர். இந்த எதிர்-இராக்கெட்டுகள் இயங்கும் பொழுது முதன்மை இராக்கெட்டு செல்லும் திசைக்கு எதிராகச் சுவாலைகளைப் பீச்சி முன்னோக்கிச் செல்லும் இயக்கத்தைக் குறைக்கின்றது. தவிர, முதன்மையாகவுள்ள இராக்கெட்டுடன் வானொலிச் செய்தித் தொடர்பு கொள்ளும் ஏற்பாடுகளும் அமைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் துணையால் பூமியினின்றும் வானொலிச் சைகைச் செய்திகளைப் (Radio signals) பெற்று இராக்கெட்டினைத் தக்கவாறு செலுத்தலாம்.

மற்றொருவகை வழிகாட்டி அமைப்பில் இராக்கெட்டினை மிகச் சரியான முறையில் குறிவைத்து அனுப்புவதாகும். இராக்கெட்டின் உட்புறத்தில் அமைக்கப்பெற்றுள்ள ஜைராஸ் கோப்பு (Gyroscope) என்ற பொறியமைப்பு ஏற்பாடு இராக்கெட்டு சரியான பாதையில் செலுத்துவ தற்குத் துணைசெய்கின்றது. ஜைராஸ்கோப்பில் மிகப் பளுவான சக்கரம் ஒன்று உள்ளது; அது வேகமாகச் சுழலச் செய்யப்பெறுகின்றது. வேகமாகச் சுழலும் ஜைராஸ் கோப்பு தற்சுழற்சியின் அச்சின் (Axis) திசையில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் எதிர்த்துத் தடுத்து நிறுத்துகின்றது. திட்டப்படுத்திய பாதையை விட்டு இராக்கெட்டு திரும்பிச் சென்றால், ஜைராஸ்கோப்பு ஏற்பாடு கட்டுப்படுத்தும் கருவிகளை இயக்கி அதனைச் சரியான திசைக்குத் திரும்பவும் கொண்டுவந்துவிடும்.

உலகிலேயே மிகச் சிறந்ததும், பல திறப் பயிற்சியுடையதும், மிக இலேசானதுமான வழிகாட்டி அமைப்பு மனிதனுடைய மூளையாகும். போர் விமானத்தில் செல்லும் விமானி தான் தாக்குவதற்காகச் சென்ற குண்டு வீழ்த்தும் விமானம் நண்பருடையதாக இருப்பதாகத் தெரிந்தால் அதனைத் தாக்காது திரும்பிவிடலாம். தான் செல்லும் விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் தானே அதனைப் பழுது பார்த்துச் செப்பனிட்டு விடலாம். அங்ஙனமே, தன்னுடைய கட்டுப்பாட்டு அமைப்பு எதிரி தீயிட்டதால் அழிந்துபட்டாலும், தன்னுடைய விமானத்திலுள்ள வானொலி அமைப்பு செயற்படாது போயினும், அல்லது ஒழுக்கினால் தன்னுடைய விமானத்தின் தொட்டியிலுள்ள எரிபொருளைப் பாதிக்குமேல் இழக்க நேரிட்டாலும், உடனே தான் அவற்றைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானித்து உடனே அதனைச் செய்து கொள்ளலாம்.

ஓர் இராக்கெட்டில், அல்லது ஏவுகணையில் வழிகாட்டி அமைப்பு விமானியின் இடத்தைப் பெறுகின்றது. அந்த அமைப்பு நன்முறையில் அமைந்திருப்பின் அது கிட்டத் தட்ட மனித மூளையைப் போலவே மிகத் திறனுடன் செயற்படும். ஆனால், எந்த வழிகாட்டி அமைப்பும் ஒவ்வொரு முறையிலும் மனிதனைப்போல் செயற்படும் என்று சொல்லுவதற்கில்லை. ஏனென்றால், அதனால் வேறுபடுத்தி அறிய முடியாது ; கருத்தினை மாற்றிக்கொள்ளவும் முடியாது; தூக்கியெறியப்பெற்ற பின்னர் ஏற்படும் கோளாறுகளைச் சரிப்படுத்திக் கொள்ளவும் முடியாது. எனினும், சில உயர்ந்த அமைப்புக்கள் இவற்றையும் சமாளிக்கும் திறனுடன் செயற்படுகின்றன. தவறுதலாக அது நண்பரின் விமானத்தின் மீது செலுத்தப் பெற்றால், அதனைத் தாக்காது திரும்பும் ஏற்பாடு செய்யலாம். இதற்கு அதில் I. F, F.[1] இராடார் அமைப்பு பொருத்தப்பெற்றிருத்தல் வேண்டும். காலநிலையின் காரணமாகவோ அல்லது நேரிட்ட பழுதின் காரணமாகவோ அது சிறிது வழி விலகினாலும் உடனே தானாகவே சரிப்படுத்திக்கொள்ளுமாறு செய்து விடலாம். எதிரியின் வானொலி அமைப்பும், இராடார் அமைப்பும் தன்னுடைய மின்னியல் அமைப்புக்களைத் தடுக்க முனைந்தால் அவற்றை எளிதில் புறக்கணிக்கவும் ஏற்பாடு செய்யலாம்.

இவற்றுடன், பல வழிகாட்டி அமைப்புக்கள் முடுக்கங்கள், அதிகவெப்பங்கள், அதிகக் குளிர்கள், விமானியைக் கொல்லக்கூடிய பிற நிலைமைகள் இவற்றை எதிர்த்து நிற்றலும் கூடும். திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லாத செய்தி அறியும் ஏற்பாடுகளிலும் (Missions) அவை அனுப்பப்பெறுவது தான் எல்லாவற்றிலும் முக்கியமானதாகும்.

இன்றுவரை பதினொரு வழிகாட்டி அமைப்புக்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு சில ஏவுகணைகள் அடுத்தடுத்துப் பறந்து செல்லும் நிலைகளில் இரண்டு வெவ்வேறு வழிகாட்டி அமைப்புக்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி ஈண்டு ஒரு சிறிது அறிந்து கொள்வோம்.

1. பின்தொடரும் காந்த வழிகாட்டி : இது தரையினின்றும் தரைக்கு ஏவப்பெறும் கணைகளிலுள்ள ஓர் எளிய அமைப்பு. இதற்கு நிலத்தில் தளவாட அமைப்புத் தேவை இல்லை. இஃது இரண்டாம் உலகப் பெரும்போரில் 1944-5 இல் இங்கிலாந்துமேல் ஏவப்பெற்ற சில 'வி-1 பறக்கும் குண்டுகளில்' பயன்படுத்தப்பெற்றது. ஏவப்பெறுவதற்கு முன்னர், ஏவுகணை ஒரு திட்டமான வழியில் இலக்கினை நோக்கி வைக்கப்பெறுகின்றது; தானாக இயங்கும் பொறியமைப்பினால் (Automatic pilot) அந்த வழியிலேயே இருக்குமாறு செய்யப்பெறுகின்றது. வழியில் எந்தவிதக் குறுக்கீடும் நிகழ்வது கடினமாக இருப்பதற்காக ஒரு 'திட்டமாக்கும்' ('Programming')பொறியமைப்பு அதில் சேர்க்கப்பெறலாம். இதனால் அது நேராகப் பறந்து செல்வதற்குப் பதிலாகப் பறக்குங்கால் பின்தொடர்வது ஒன்று அல்லது பல தடவைகளில் மாற்றப்பெறுகின்றது. முன்னரே கணிக்கப்பெற்ற ஒரு காலத்திற்குப் பிறகு கடிகார அமைப்புப் போன்ற ஒரு பொறியமைப்பு' ஏவுகணையின் எரிபொருள் எரியும் இடத்திற்குச் செல்லாமல் தடுக்கின்றது. இப்பொழுது கணை பூமியை நோக்கி முக்குளிக்கின்றது (dives).

2. கம்பி ஆணை வழிகாட்டி : எல்லா வழிகாட்டி அமைப்புக்களிலும் இது மிகவும் எளிதானது. இன்று இது தரையிலிருந்து தரைக்கும், அல்லது வானிலிருந்து தரைக்கும் ஏவப்பெறும் மிகச் சிறிய வகை டாங்கி எதிர்ப்புப் போர்க்கருவிகளில் பயன்படுத்தப் பெறுகின்றது. ஏவுகணை, ஏவப் பெறும் கருவியினை விட்டு இலக்கினை நோக்கிச் செல்லுங்கால் அது பின்புறமாக ஒன்று அல்லது இரண்டு மெல்லிய கம்பிகளை விட்டுச் செல்லுகின்றது. இக்கம்பி துடிக்கட்டைகளினின்றும் (Bobbins) பிரிந்து இயக்குவோரின் கட்டுப்படுத்தும் பெட்டியினின்றும் தொடர்புவைத்துக்கொள்ளத் துணைசெய்கின்றது.

ஓர் எளிய விரல் அமுக்குப் பொத்தானைக்கொண்டு இயக்குவோர் மின்சாரச் சைகைக் குறிப்புக்களை அனுப்பி ஏவுகணை இலக்கினை நோக்கி வழிகண்டு செல்லுமாறு செய்யலாம். அதிக நீளமான கம்பிகளைச் சிறிய ஏவுகணையில் நிரப்புவது கடினமாதலால் இந்த வகை வழிகாட்டியை இரண்டுமைல் எல்லைவரையிலுமே பயன்படுத்தலாம்; இலக்கு கண்ணிற்குப் புலனாகும் எல்லை வரையிலும் இது பயன்படுத்தப்பெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட எல்லைவரை இது திறனாகச் செயற்படுகின்றது : இதனைச் செயற்படாது சிதைத்தல் இயலாது (Immune to jamming).

3. வானொலி ஆணை வழிகாட்டி : இது மேற்குறிப்பிட்ட கம்பி ஆணை வழிகாட்டியைப் போன்றதே. இதில் சைகைக் குறிப்புக்கள் கம்பிகளின் வழியாக அனுப்பப்பெறுவதற்குப் பதிலாக வானொலி மூலம் அனுப்பப்பெறு கின்றன. ஆகவே, இது நீண்ட எல்லைகட்குப் பயன்படுத்தப் பெறலாம். இதனை இயக்குவோர் இஃது எறியப்பெறும் இடத்தில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை: இந்த இடம் சாதாரணமாகப் போர் நிகழும் இடத்திற்குப் பின்புறத்திலிருக்கும். ஆயின், இவர் முன் எல்லையிலேயே இருந்து கொண்டு ஏவுகணையைச் சுட்டு அதனைக் கட்டுப்படுத்துவார். இலக்கின் சரியான இடத்தை அவர் அறிந்திருந்தால் போதும் ; இலக்கினைக் கண்ணால் பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. காரணம், அவர் இராடார் திரையில் காணும் சுவட்டினைக்கொண்டு இலக்கின் இடத்தை அறுதியிட்டு அஃது இலக்கினை நோக்கி வழி கண்டு செல்லுமாறு செய்யலாம்.

வானொலி வழிகாட்டி செயற்படாமல் செய்யப் பெறுவது எளிது. அதனைப் பயன்படுத்தும் ஏவுகணைகள் பல்வேறுவகை வானொலி அதிர்வு-எண்களில் செயற்படு மாறு அமைக்கப்பெறுகின்றன. ஏவுகணையைச் சுடுவதற்கு முன்னர் அனுப்பும் கருவியிலும் ஏற்கும் கருவியிலும் ஓர் அதிர்வு-எண்ணுக்குத் திருப்பி, அந்த அதிர்வு-எண்ணை எதிரி கண்டறிவதற்குக் காலந்தராமல் அதனைச் சுட்டுவிட வேண்டும்.

வானொலி ஆணை வழிகாட்டி அமைக்கப்பெற்றுள்ள ஒரு சில ஏவுகணைகள் தம்முடைய மூக்கில் ஒரு தொலைக்

காட்சிக் காமிராவையும் கொண்டுள்ளன. இஃது ஏவுகணைக்கு முன்னதாகவுள்ள காட்சியை நிலத்திலுள்ள ஒரு திரைக்கு அனுப்புகின்றது. திரையில் இலக்கு நடுவிலிருக்குமாறு செய்து, ஏவுகணை காணும் எல்லையினின்று மறைந்த பிறகும் அதனைச் செல்லும்வழியில் செலுத்தலாம். இதனால் இந்த அமைப்பு, மிக நீண்ட எல்லைகட்குப் பயன்படுகின்றது.

4. இராடார் ஆணை வழிகாட்டி : இராடார் ஆணைக்கு ஏவுகணையில் அதிகக் கருவியமைப்பு இருக்கத் தேவை

படம் 29 : இராடார் ஆணை வழிகாட்டி

1. மோதல் நிகழும் முனை ; 2. ஏவுகணையின் சுவடறியும் இராடார் ; 3. இலக்கின் சுவடறியும் இராடார்; 4. கணக்கிடும் கருவியும், ஆணை அனுப்பும் கருவியும்; 5. பணியாளர்களுடன் தொடர்புகள் ; 6. முன்னதாகவே எச்சரிக்கும் இராடாருடன் தொடர்பு.

இல்லை. ஆனால், நிலத்தில் அந்த அமைப்பு மிக அதிகமாகத் தேவை. இதில் இரண்டு இராடாரின் அனுப்பும் கருவிகள் பங்கு பெறுகின்றன. அவற்றுள் ஒன்று இலக்கினைத் தேடியறிந்து அதன் வேகம், இருப்பிடம் இவற்றிற்கேற்ப அதனை விட்டு விலகாதிருக்கின்றது. மற்றொன்று ஏவுகணையின் இடம், வேகம் இவற்றிற்கேற்ப அதனை வழி நடத்தப் பயன்படுகின்றது. இந்த இரண்டு இராடார் அமைப்புக்களி னின்றும் கிடைக்கும் தகவல்கள் (data) கணக்கிடும் அமைப்பிற்கு அனுப்பப்பெறுகின்றன. கணக்கிடும் கருவி ஏவுகணை செல்ல வேண்டிய சரியான வழியினை மிக விரைவாகக் கணக்கிடுகின்றது. இதனால் ஏவுகணை இலக்கினைத் தடுத்து அழிக்க முடிகின்றது. மிகத்திறனுடன் செயற்படும் வழி காட்டி அமைப்புக்களில் இது சிறந்தது.

5. வானொலி நேவிகேஷன்' : இதில் இரண்டு அனுப்புங் கருவிகள் நிலத்தில் தெரிந்த இடங்களில் இருக்கவேண்டும். ஆனால், இஃது இராடார் வழிகாட்டி அடைப்பினை விட எளிய அமைப்பினைக் கொண்டது. ஏவுகணையினுள்ள ஓர் ஏற்குங்கருவி நிலத்தின் இரண்டு நிலையங்களினின்றும் ஒழுங்கான இடை வேளைகளில் அனுப்பப்பெறும் சைகைச் செய்திகளை ஏற்கின்றன. செய்திகள் ஏற்கப்பெறும் காலங்களின் வேற்றுமையை அளந்து அதிலிருந்து அனுப்பும் கருவிகளிலிருந்து அந்த ஏவுகணை எவ்வளவு தொலைவிலுள்ளது என்பதைக் கணக்கிடலாம். இந்தத் தகவலையும் அது வானத்தில் இருந்த காலத்தையும் சேர்த்து அதனுடைய சரியான இருப்பிடத்தைக் கண்டறியலாம். இஃது இலக்கின் சரியான வழியில் இராவிட்டால் அது தானாக இலக்கினை நோக்கிச் செல்லுமாறு திருப்பிவிடப்பெறுகின்றது.

6. கற்றைச் சவாரி வழிகாட்டி: இந்த அமைப்பில் ஏவுகணை இலக்குடன் விலகா திருக்குமாறு செய்யப்பெற்றுள்ள ஒளி அல்லது வானொலிச் சைகைச் செய்திகளின்

படம் 30 : கற்றைச் சவாரி வழிகாட்டி

1. இலக்கு இராடார் ; 2. பணியாளருடன் தொடர்பு:
3. இலக்கின் சுவட்டினை அறியும் இராடார் ;

4. முன்ன தாகவே எச்சரிக்கை தரும் இராடாரினின்றும் இணைப்பு.
ஒரு குறுகிய 'பென்சில் கற்றை'யின் வழியாகப் பறந்து செல்லுகின்றது. பெரும்பாலும் இது வானத்திலிருந்து-வானத்திற்கு அல்லது தரையிலிருந்து - வானத்திற்குச்

8. Beam Riding Guidance. செலுத்தப்பெறும் போர்க்கருவிகளில் பயன்படுகின்றது... இதற்கு இராடார் ஆணை வழிகாட்டியைவிட. அதிகத் தளவாடம் தேவையில்லை. ஒரே சமயத்தில் இஃது ஒன்றுக்கு மேற்பட்ட பல ஏவுகணைகளைக் கட்டுப்படுத்துதல் கூடும்தொலைவிற் கேற்றவாறு கற்றையின் அகலம் அதிகரிக்கக் கூடுமாதலால், அனுப்பும் கருவியில் இஃது எவ்வளவுக் கெவ்வளவு குறுகலாக அனுப்பப்பெறக் கூடுமோ அவ்வளவுக்கவ்வளவு குறுகலாக அனுப்பப்பெறுதல் வேண்டும். ஏவுகணை சுடப்பெற்றவுடன் அதே சமயத்தில் அதனைப் பற்றுவதற்காகவும், பற்றின பின்னர் அதனைப் பெருங் கற்றையினுள் (Main beam) நெறிப்படுத்துவதற்காகவும் மிக அகன்ற ஒரு 'சேகரிக்கும்' கற்றை அதே சமயத்தில் அனுப்பப்பெறுகின்றது. இந்தப் பெருங்கற்றையினுள் வானொலிக் கருவித் தொகுதியினால் ஏவுகணை நிலைநிறுத்தப் பெறுகின்றது.

வானத்தினின்றும் - வானத்திற்கு அனுப்பப்பெறும் அமைப்பில் போரிடும் விமானம் தன்னுடைய மூக்கில் ஓர் 'துருவி ஆராயும் இராடார் கருவி'யைக் கொண்டுள்ளதுஅது தனக்கு முன்னாலுள்ள வானத்தையெல்லாம் துலக்கி இலக்கினைக் கண்டறிந்து அதனைவிட்டு விலகாதிருக்கச் செய்கின்றது. போர் விமானம் தனது எல்லைக்குள் வந்தவுடன், ஏவுகணை சுடப்பெற்று இராடார்க் கற்றையின் மையத்தில் வைக்கப்பெறுகின்றது ; உடனே அஃது அங்கிருந்து இலக்கினை நோக்கிப் பறந்து செல்லுகின்றது. அது பகைவனை அழிக்கக்கூடிய அளவு நெருங்கி அண்மையில் வந்ததும் அதனுடைய போரிடும் முனை (War head) அண்மையிலுள்ள ஒரு மருந்து வத்தியால் (Fuse) வெடிக்கப் பெறுகின்றது.

7. பாதி - சுறுசுறுப்பு வழிகாட்டி: இந்த அமைப்பு ஓர் ஆற்றல் வாய்ந்த நில இராடாரைப் பயன் படுத்துகின்றது. இஃது இலக்கினைக் கண்டறிந்து அதனைவிட்டு விலகா திருந்து மிக வன்மையான இராடார்க்கற்றைகளைக்கொண்டு அதனை ஒளிபெறச் செய்கின்றது. இந்த இராடார்க் கற்றைகள் இலக்கினின்றும் பின்னோக்கித் திருப்பி அனுப்பப்பெறு

படம் 31: பாதி - சுறுசுறுப்பு வழிகாட்டி

1. தடுக்கும் அமைப்பு;

2. ஏவுகணை ;

3. விறிபடுங்காலத்தில் இராடார்க் கற்றையின் திருப்பம் ;

4. தாக்கும் இறுதிநிலையில் இலக்கினின்றும் வரும் கற்றையின்
திருப்பம் (திருப்பக் கோணத்தின் மாற்றம் ஏவுகணையின்
தடுத்தல் வழியினை மாற்றுகின்றது.);

5. இலக்கு.
4. Semi - Active Homing. 

கின்றன. இவை ஏவுகணையின் மூக்கிலுள்ள ஏற்புக் கருவியால் ஏற்கப்பெறுகின்றன. அதன் பிறகு ஏவுகணை திருப்பங்கள் (Reflections) அடையும் மூலத்தை நோக்கிப்பறந்து சென்று, தானாக இலக்கினை நோக்கிப் பாய்ந்து ('homes') அதனை மோதுவதனாலோ அல்லது அண்மையிலுள்ள மருந்து வத்தியினைப் பயன்படுத்தியோ அழிக்கின்றது.

படம் 32 : சுறுசுறுப்பு வழிகாட்டி

8. சுறுசுறுப்பு வழிகாட்டி': இதுகாறும் கூறப்பெற்ற அமைப்புக்களைப் போலன்றி, இஃது எல்லா ஏற்பாடுகளையும் தானே கொண்டுள்ளது. இதற்கு நிலத்தில் கருவித் தொகுதிகள் ஒன்றும் இல்லை. இதனால் இஃது எளிதில் இயங்கக்கூடியது; ஆனால் மிகச் சிக்கலானதாகவும் பருமனுள்ள தாகவும் உள்ளது.

இந்த ஏவுகணை தன்னுடைய இராடார் ஏற்புக் கருவியினையும் அனுப்பும் கருவியினையும் சுமந்து செல்வதைத்

5. Active Homing:

தவிர, மற்ற வகையில் இது மேற்குறிப்பிட்ட பாதி சுறுசுறுப்பு வழிகாட்டி அமைப்பினைப் போலவே செயற்படுகின்றது. இது சுடப்பெறும்பொழுது இதிலுள்ள அனுப்பும் கருவி சைகைச் செய்திகளை அனுப்புகின்றது. இச்செய்திகள் இலக்கினின்றும் பிரதிபலிக்கப்பெற்றுத் திரும்புகின்றன. இவற்றை ஏற்குங் கருவி ஏற்கின்றது. இது திருப்பம் செய்யப்பெற்ற மூலத்தை நோக்கி எங்கனம் ஏவுகணையைச் செலுத்துவது என்பதைக் கட்டுப்படுத்தும் அமைப்பிற்கு அறிவிக்கின்றது.

படம் 38: செயலற்ற வழிகாட்டி

9. செயலற்ற வழிகாட்டி: போர்க் கருவி அமைப்பினின்றும் எந்த வகையான சைகைச் செய்திகளும் அனுப்பப் பெறாததால் இஃது இப்பெயரினைப் பெறுகின்றது. இதற்

6. Passive Homing. குப் பதிலாக ஏவுகணையில் பொருத்தப்பெற்றுள்ள ஒரு பொறியமைப்பு இலக்கினின்று வெளிவரும் அல்லது இலக்கினால் உண்டாக்கப்பெறும் ஏதாவது ஒருவகை ஆற்றலுக் கேற்றபடி இயங்கி அந்த இலக்கினை நோக்கி ஏவுகணையைச் செலுத்துகின்றது. தாமாகச் சென்று தாக்கும் டார்ப்பி டோக்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். இவற்றில் பொருத்தப்பெற்றுள்ள ஒலிசார்ந்த அமைப்பு (Acoustic system) கப்பல் இயந்திரம் உண்டாக்கும் ஒலிகளைக் கொண்டு அதனை நோக்கிச் சென்று தாக்குகின்றது.

ஏவுகணைகளில் பொருத்தப்பெறும் தாமாகச் சென்று தாக்குவதற்கேற்ற அமைப்பு அகச் சிவப்பு அல்லது வெப்பத்தை நாடும் பகுதியாகும். இந்த அமைப்பு ஏவுகணையின் மூக்கில் பொருத்தப்பெற்றுள்ளது. இந்த அமைப்பு இலக்கு வெளிவிடும் வெப்பத்தை, குறிப்பாக அதன் பொறிகளினின்றும் வெளிப்படும் வெப்ப வாயுக்களை, நாடிச் சென்று ஏவுகணை இலக்கினைத் தாக்க வழிசெய்கின்றது. இந்த அமைப்பு மிகவும் நுட்ப உணர்வுடையது; ஒரு மைலுக்கப்பாலிருப்பினும் இது சாதாரண மின்சார வீட்டடுப்பினையும் கண்டறிய வல்லது. இதனைச் சிதைத்து விட முடியாது. ஆனால், இந்த அகச் சிவப்புக் "கண்" அடர்ந்த மேகங்களினூடே பார்க்க முடியாது. இதனால் அகச் சிவப்பு ஏவுகணைகளைக்கொண்ட போர் விமானத்தில் வழிகாட்டப் பெறாத இராடார்-அமைப்பு ஏவுகணைகளின் மின்கலங்களைச் சுமந்து செல்லுகின்றன.

10. வானத்திற்குரிய வழிகாட்டி' : இது 'விண்மீன் அடிச்சுவடறி கருவி' என்றும் வழங்கப்பெறுகின்றது ; பன்னெடுங் காலமாக மாலுமிகட்கும் விமானிகட்கும் துணை யாக இருந்த 'வானியல் - நேவிகேஷன்' (Astro - navigation) என்பதன் தானாக இயங்கவல்ல நகலாகும். இதில் இரண்டு அல்லது மூன்று வேறுபாடான அமைப்புக்கள் உள்ளன. ஆனால், அடிப்படையில் ஏவுகணையிலுள்ள தொலைநோக்கி ஒரு தேர்ந்தெடுத்த விண்மீனுடன் தொடர்புறுகின்றது. இதனால் அந்த விண்மீனுக்கு முன்னரே கணிக்கப்பெற்ற கோணத்தில் ஏவுகணையை வைக்கின்றது. கோணம் சதா மாறிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், ஏவுகணை இலக்கினை நோக்கி நெருங்கும் பொழுது அந்தக் கோணம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிடல் எளிது. இதன் காரணமாக, ஏவுகணைத் தொடர்புடன் விண்மீன் இந்தக் கோணநிலையில் தான் இருக்கவேண்டும் என்பதைத் தொலைநோக்கி காட்டுகின்றபொழுது ஏவுகணை முக்குளிக்குமாறு வழிகாட்டி அமைப்பினைத் திருப்பி வைத்தல் கூடும்.

11. இயங்காத் தன்மையுள்ள வழிகாட்டி : எல்லாவகை வழிகாட்டிகளிலும் இது தான் மிகவும் முன்னேற்ற மடைந்துள்ள அமைப்பாகும். இஃது ஏவுகணையிலேயே இருப்பது. இதனை எளிதில் சிதைக்க முடியாது. இது மிகத் திருத்தமாக அமைந்துள்ளது. இஃது ஓர் எளிய வடிவில் போர்க் காலத்து ஒருவகை வி-2 இல் பயன்படுத்தப் பெற்றது; இந் நவீன நீண்ட எல்லைத் தாக்கு ஏவுகணைகளில் பயன்படுத்தப் பெறுகின்றது.

இதன் அடிப்படைக் கருத்து மிகவும் எளிதானது. ஏவுகணை பறந்து செல்லும்பொழுது அது செல்லும் திசையில் ஏற்படும் ஒவ்வொரு மிகச் சிறிய மாற்றத்தையும் அளக்கவல்ல ஆக்செலரோமீட்டர்கள் (Accelerometers)

8. Inertial Guidance. அல்லது ஜைராஸ்கோப்புகள் இதில் பயன்படுத்தப்பெறுகின்றன. இலக்கினை நோக்கிச் செல்லும் பாதையினின்றும் ஏவுகணை விலகிச் செல்லுவதாக ஏதாவது திசை மாற்றம் அமைந்தால் வழிகாட்டி அமைப்பு தானாகக் கட்டுப்படுத்தும் கருவிகளை இயக்கி அதனைச் சரியாக வைக்கின்றது. இதிலுள்ள பொறியமைப்பு மிகச் சிக்கலாக உள்ளதால், அதனை ஈண்டு விளக்குதல் இயலாது.

இங்ஙனம் பல்வேறு வழிகாட்டி அமைப்புக்களும் பகுதிகளும் இணைந்து செயற்பட்டு ஏவுகணைகள் இலக்கினை அடையத் துணைபுரிகின்றன.

  1. 1. I, F. F. (Identification, Friend or Foe Radar.)