தமிழ் இலக்கியக் கதைகள்/அழியாக் கலை
18. அழியாக் கலை
திருவோலக்க மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார் ஒளவையார். பல காத தூரம் பயணம் செய்த களைப்பில் உடல் சோர்வுற்றிருந்தது. குலோத்துங்க சோழனைக் காண்பதற்காக வந்திருந்த அவர் வாயில் காவலனிடம் உள்ளே செல்ல ஏற்ற சமயமறிந்து, தம் வரவைத் தெரிவித்துவிட்டு வருமாறு கூறி, மண்டபத்திற்குள் அனுப்பியிருந்தார். அவன் மீண்டு வந்து மறுமொழி அளித்ததும், உள்ளே செல்லலாம் என்ற கருத்துடனேயே அவர் சபா மண்டபத்திற்கு வெளியே காத்திருந்தார்.
பொழுது விரைவாகச் சென்று கொண்டிருந்தது. உள்ளே சென்ற காவலன் இன்னும் வரக்காணோம். கால் கடுக்க நின்று கொண்டிருந்தார் தமிழ் மூதாட்டியார்.வெகு நேரத்திற்குப் பிறகு காவலன் கையில் ஒரு புத்தம் புதிய நூற்சேலையுடன் வெளியே வந்தான்.
"தாயே தாங்கள் கூறியபடி ‘பெண்பாற் புலவர் ஒருவர் காண வந்திருக்கிறார், உள்ளே வர அனுமதி நோக்கிக் காத்திருக்கின்றார், திருவுள்ளம் எப்படியோ?’ என்று மன்னர் பிரானிடம் சென்று உரைத்தேன். அவர் இப்போது இன்றியமையாத வேலையாக அமைச்சர்களுடன் கலந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால், இந்தப் புதிய நூல் புடவையைத் தங்களுக்குப் பரிசிலாகக் கொடுத்து அனுப்புமாறு எளியேனுக்கு ஆணையிட்டார்” என்று கூறிக் கொண்டே அந்த நூற்சேலையுடன் ஒளவையாரை நெருங்கினான் காவலன்.
ஒளவையாரின் புலமை நெஞ்சம் புண்பட்டது. ‘பிச்சை கொடுப்பது போல முகங் காணாமல் காவலனிடம் புடைவையைக் கொடுத்து விட்டா கவிஞரை மனமகிழச் செய்ய முடியும்? சோழன் மனத்திலா இந்த நினைவு? நம்ப முடியாத சிறுமை!’
“உன்னைப் பார்க்க வந்தேன்; பாட வந்தேன். பார்க்கவும் பாடவும் விலை கேட்கவா வந்தேன்? விலையாகக் கருதி நீ பரிசில் கொடுத்தாலும் இந்தக் கிழிந்துபோகும் நூற்சேலையா என் அழியாத பாட்டிற்கு ஈடு? அழியாக் கலைக்கு அழியும் விலை கொடுக்கும் பேதைமை நிறைந்த பித்தன்தானோ இந்தக் குலோத்துங்கன்” வரவழைத்துப் பாடல் கேட்க விருப்பமில்லை என்றாலும் உடுக்கத்துணி தேடி உலவும் யாரோ ஒரு பேதைப் பெண் பாடி வயிறு வளர்ப்பவள் என்ற நினைவில்தான் இவன் இவ்வாறு செய்திருக்கிறான்.
ஒளவையார் அமைதியாக நின்றுகொண்டே இருந்தார். அவர் மனத்தில் இந்த எண்ணங்கள் ஒடிக்கொண்டிருந்தன.
எதிரே கையில் நூற்சேலையுடன் நின்றிருந்த காவலன் பொறுமையிழந்து “என்ன பாட்டி? இப்படியே நின்று கொண்டிருந்தால்? உங்களுக்கு இந்தச் சேலை வேண்டாமா?” என்று கேட்டான்.
ஒளவையார் அவனைக் கையமர்த்திச் சைகை செய்து சற்று அமைதியாக இருக்குமாறு வேண்டிக்கொண்டு தோளிலிருந்த முடிப்பை அவிழ்த்து ஒலை நறுக்கையும் எழுத்தாணியையும் எடுத்தார். சில நொடி நேரத்தில் ஒலை நறுக்கில் ஏதோ எழுதிக் காவலன் கையிலிருக்கும் நூற்சேலையின் மேல் வைத்து “இதை இந்தச் சேலையோடு உங்கள் மன்னரிடம் காட்டு நான் அதுவரை இங்கிருக்கிறேன். எனக்காக நீ இதைச்செய்ய வேண்டும்” என்று அவனை வேண்டிக் கொண்டார். அவன் ஒலை நறுக்கையும் சேலையையும் கொண்டு உள்ளே சென்றான்.
அரை நாழிகை சென்றது. காவலனும் அமைச்சர்களும் பின்தொடரப் பதறியடித்துக்கொண்டு வாசலுக்கு ஓடி வந்தான் குலோத்துங்கன். வாசலில் அவனுடைய கண்கள் தேடிய உருவம் காணப்படவில்லை. வாசல் சூன்யமாக விளங்கிற்று. தொலைவில் நான்காம் கோட்டையின் பிரம்மாண்டமான வாயிலுக்குஅடியில் ஒரு வயதான கிழவி கோலூன்றித் திரும்பி நடந்து கொண்டிருந்தாள். கிழப்பருவத்திலும் புலமைக்குரிய தேஜஸ், எடுப்பான நடை எல்லாமிருந்தன அவளிடம். இங்கே குலோத்துங்கன் கையில் இருந்த ஒலை நறுக்கு அவனைப் பார்த்து நகைத்தது.
“நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறினும் நூற் சீலை
நாற்றிங்கள் தன்னிற் கிழிந்துபோம்-மாற்றவரைப்
பொன்றப் புறங்கண்ட போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாது என்பாட்டு”
திங்கள் = மாதம், பொன்ற = சாகும்படியாக, அகளங்கன் = குலோத்துங்கன்.
என்ற பாடல் அந்த ஓலை நறுக்கில் காட்சியளித்தது.