உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கியக் கதைகள்/வயிற்றுப் பசி

விக்கிமூலம் இலிருந்து

21. வயிற்றுப் பசி

ங்கூரில் அன்று சிவன் கோவிலில் உற்சவம். அலங்காரமான தோற்றத்துடன் ரிஷப வாகனருடராய்த் திருவீதி உலா வந்து கொண்டிருந்தார் சுவாமி. கொட்டுமேளம், நாயனம் முதலிய வாத்தியங்களின் இனிய ஒலி ஒருபுறம். சங்கு, திருச்சின்னம், மத்தளம், எக்காளம் முதலிய இசைக் கருவிகளின் பேராரவாரம் மற்றொருபுறம், பக்தர்களின் ஆரவாரமும் இந்த ஆரவாரத்தோடு கலந்து கோலாகலமாக விளங்கியது.

உலா வரும் சுவாமி பொன்னம்பலத்தார் மடத்தின் பக்கம் நெருங்கவும், முடங்கிக் கிடந்த இரட்டையர்கள் விழித்துக் கொண்டனர். பசியால் உடல் சோர்ந்து மடத்துத் திண்ணையில் இடத்தை நாடி ஒதுங்கிய அவர்கள், நான்கு நாட்களாகச் சோற்றைக் கண்ணால் கூடக் காணவில்லை. அடி வயிறு காய்ந்து கிடந்தனர். மயக்கமடைந்தவர்கள் போலத் தளர்ந்து விழுந்து கிடந்த அவர்களைக் கொட்டும் மேளமுமாகச் செய்த ஒலிகள் எழுப்பின. அவர்களுக்கு இருந்த பசியில் சங்கு ஒலியும் எக்காள சப்தமும்கூட அதிர்வேட்டுப் போலக் காதில் பட்டு உடலை ஒர் உலுக்கு உலுக்கி நடுங்கச் செய்தது. வயிற்றுப்பசி வாட்டும்போது நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்யவா முடிகிறது? அப்படியே மடத்துத் தூணில் சாய்ந்துகொண்டு வீதியில் எழுந்தருளும் சுவாமியை நோக்கி,

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளி யப்பா
நாங்கள் பசித்திருத்தல் ஞாயமோ?...”

ஞாயம் = நியாயம்

என்று குருடர் பாடத்தொடங்கவும், பசி வேதனை பொறுக்க முடியாத நொண்டியான மற்றொருவர்,

—போங்காணும்!
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளியார் சொல்?”

தோல் முரசு = தோல் போர்த்த முரசு.

என்று வார்த்தைகளை அள்ளி ஆத்திரத்தோடு தெளித்தார். கூட்டத்தோடு கூட்டமாகச் “சுவாமியைப் பின்பற்றிச் செல்லும் அத்தனை பேரில் கொட்டும் மேளமும் கேட்டவரின்றிச் சோற்றைக் கண்டவர் யார்?’ என்று கேட்டுப் பசி நேரத்திலும் அந்தக் குறும்புத்தனமான காரியத்தால் கொஞ்சம் மனமகிழ்ச்சி அடைந்தார் முடவர். குருடர் கூற்றில் இரக்கம் தொனிக்கிறது. முடவர் கூற்றிலோ வயிற்றுப் பசியையும் மறந்த பரிகாசம் தொனிக்கிறது. பாடுவது அவர்களுக்குப் பொழுதுபோக்கு, பசியால் மட்டும் அது நின்றுவிடுமா என்ன?