தாய்மொழி காப்போம்/தமிழோடிணைந்தாய்!
10. தமிழோ டிணைந்தாய்!
விறலிமலை தருமகனே, வீரமிகு
சண்முகனே, 'வெருட்டி வந்த
பிறமொழியை ஆளவிடேன் பெற்றெடுத்த
தாய்மொழியைப் பேணி நிற்பேன்
திறலுடைய தமிழகத்தில் தீமனத்தர்
இந்தியினைத் திணிக்க வந்தால்
மறலியுல கடைவதையும் மகிழ்வுடனே
வரவேற்பேன் மானங் கொள்வேன்'
எனவெகுண்டு சூளுரைத்தாய், இனமானப்
போர்தொடுத்தாய், எடுத்த நஞ்சை
'எனதுயிரின் மேலான இனியதமிழ்
காத்திடநான் இதனை யுண்பேன்'
எனவெழுதி அவ்வாறே இனிதுண்டாய்,
எமைப்பிரிந்தாய் இறந்துவிட்டாய்
எனமொழிய மாட்டேன் நான் எனது தமிழ்
மொழியுடன்நீ இணைந்தாய் என்பேன்.
இனமானங் காத்திடுவோம் எரிநஞ்சும்
எடுத்துண்போம் என்று கூறிப்
புனலாடி எழுவதுபோல் அனலோடு
விளையாடிப் புகுந்த இந்திக்
கனலோடு சமராடிக் களங்கண்டு
புகழ்கொண்ட காளை நீவிர்
நனவோடு நனவாக எமதுயிர்ப்பு
மூச்சாக நாளும் வாழ்வீர்!
(இந்தி எதிர்ப்பின் போது நஞ்சுண்டு மாண்ட விறலிமலை சண்முகனைப் பாடியது)