உள்ளடக்கத்துக்குச் செல்

புது டயரி/குடைப் புராணம்

விக்கிமூலம் இலிருந்து



குடைப்புராணம்

“எத்தனை தடவை சொன்னலும் இந்த வீட்டில் யாரும் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. மழை இல்லாத காலத்தில் இந்தக் குடைகளை ஒக்கப் பண்ணவேனும் என்று தலை தலையாய் அடித்துக் கொண்டேன். யார் கேட்கிறார்கள்?” என்று இரைந்தேன்.

அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று மழை வந்துவிட்டது. மழைக் காலத்தில் மழை வராமல் என்ன செய்யும்? ‘நான் அலுவலகம் போகிற வரைக்கும் நில்’ என்றால் நிற்குமா? கம்பர், யாரோ வேலி என்ற பெண்ணுக்காக ஒரு சுவர் வைத்தாராம். தம்மை மறைத்துக் கொண்டு கூலி வேலை செய்ய முனைந்தபோது கடந்தது இது. எவ்வளவு தண்ணீர் விட்டு மண்ணைக் குழைக்க வேண்டும் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? மண்ணை எடுத்துச் சுவராக வைக்க வைக்க அது சரிந்து கொண்டே வந்தது. ‘வேலி தரும் கூலி, நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ் சுவரே!’ என்று பாடினாராம். சுவர் நின்று விட்டதாம். நான் என்ன கம்பரா? ‘அலுவலகம் போகுமட்டும் நில்லாய் அருமழையே’ என்று பாடத் தெரியும். ஆனால் என் பாட்டுக்கு அது நிற்குமா? அது தன்பாட்டுக்குப் பெய்துகொண்டுதானே இருக்கும்?

எங்கள் வீட்டில் ஐந்து குடைகள் இருந்தன. ஒன்றாவது ஒழுங்கானபடி இல்லை. இரண்டில் ஒரு கம்பி,  இல்லை. ஒன்றில் இரண்டு கம்பிகள் முறிந்து விட்டன. மற்றொன்றில் துணியெல்லாம் பொத்தல். ஐந்தாவது குடையில் துணி, ஒரு கம்பியின் நுனியோடு தைத்த தையல் பிரிந்து மேலே ஏறியிருந்தது. முன்பே குடை ரிப்பேர்க்காரனிடம் கொடுத்து ஒக்கப் பண்ணி வைக்கச் சொல்லியிருந்தேன். யாரும் கவனிக்கவில்லை. அதனால்தான் எனக்குக் கோபம். அலுவலகம் புறப்படும் அவசரத்தில் வெளியே மழை சடசடவென்று பெய்துகொண்டிருக்கிறது; குடையோ சரியில்லை. கோபம் வராமல் என்ன செய்யும்?

அப்போது என் இரைச்சலைக் கேட்டுவிட்டு என் இல்லத்தரசி வேகமாக வந்தாள். அவள் கையில் கரண்டியோடு வந்தாள். “என்ன இரைகிறீர்கள்? யாருக்கு என்ன வந்துவிட்டது?” என்று என்ன விடச் சத்தம் போட்டுக் கேட்டாள். அடுப்பில் ஏதோ கொதித்துக் கொண்டிருக்க வேண்டும். அதை அவளுடைய திருக்கோலமும் குரலும் காட்டின.

“இரையாமல் என்ன செய்வது? ஒரு குடையாவது சரியாக இருக்கிறதா? மழை இல்லாத காலத்தில் சரிப்படுத்தும்படி எத்தனே தடவை சொல்லியிருக்கிறேன்?”

“அதெல்லாம் சரி. குடை ரிப்பேர்க்காரன் நம்மை விடக் கெட்டிக்காரன். மழைக்காலத்தில்தான் அவன் குடை ரிப்பேர் என்று கத்திக்கொண்டு வருகிறான் மற்றச் சமயங்களில் அவன் பூட்டு ரிப்பேர் பண்ணுகிறான். அவசியம் நேர்ந்தபோது எவ்வளவு கேட்டாலும் கொடுப்பார்கள் என்ற இரகசியத்தை அவன் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான். நாங்கள் என்ன செய்வது?”

இதற்குமேல் பேச எனக்கு வாய் இல்லை. பேசாமல் கம்பியோடு ஒட்டாமல் தையல் பிரிந்த குடையைக் கையில்  எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். குடையைப் பிரித்தால் ஒரு கம்பியின் நுனியில் துணி ஒட்டாமல் மேலே போயிருந்தது. குழந்தை தாறுமாறாகத் துண்டை உடுத்துக்கொள்ளுமே, அப்படியிருந்தது. வேறு வழி இல்லாமல் அதைப் பிடித்துக்கொண்டு போனேன். அதாவது கிடைத்ததே! கம்பி உடைந்த குடைகளால் என்ன உபயோகம்? பஸ் அடிவரையில் அந்தக் குடை எனக்குக் கவசமாக உதவியது.

அன்று அலுவலகத்துக்குச் சிறிதுநேரம் கழித்துப் போனேன். ‘கம்பியின் நுனியில் துணியை இழுத்து வைத்து ஊசியால் தைத்து விட்டால் குடை சரியாகிவிடும். இதைப் பார்த்து இவள் செய்யக் கூடாதா?’ என்று கோபம் வந்தது. மாலையில் வீட்டுக்குப் போனவுடன் முதல் காரியமாக இதைத் தைக்கச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன்.

மாலையில் வீட்டுக்குள்ளே நுழையும்போதே அவளைக் கூப்பிட்டேன். “நீ தையல் மிஷின் வைத்திருக்கிறாயே! எதை எதையோ தைக்கிறாயே! இந்தத் துணியைக் கம்பியின் நுனியோடு வைத்துத் தைக்கப்படாது?” என்று கேட்டேன்.

அவள் இடிஇடியென்று சிரித்தாள். காலையில் கையில் கரண்டியோடு, முகத்தில் ஆத்திரத்துடன் நின்ற அவள் கோபத்தையும் இப்போது அவள் முகமெல்லாம் சிரிப்பு வழிய நின்ற கோலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். “இந்தப் பெண்களுக்கு எப்படியெல்லாம் கோலங்களை மாற்றிக்கொள்ளத் தெரிகிறது!” என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டேன்.  “இந்தக் குடை நுனியைத் தையல் மிஷினில் தைக்க வேண்டும் என்று சொன்னிர்களே; அதை நினைத்துக் கொண்டு சிரித்தேன்.”

“இதைத் தைக்க வேண்டும் என்றால், அதற்குச் சிாிப்பானேன்?”

“தைப்பதற்காகச் சொல்லவில்லை. மிஷினில் தைக்க வேண்டும் என்றீர்களே, அதற்காகச் சிரித்தேன். ஊசியினால் தைக்கிறது இது” என்று விளக்கினாள்.

“சரி சரி, நீ ஊசியினால் தைப்பாயோ, உலக்கையினால் தைப்பாயோ, எனக்குத் தெரியாது. நாளைக்கு ஆபீஸ் போகிறபோது இது சரியாக இருக்க வேண்டும்.”

“உத்தரவுப்படியே எசமான்! இப்போது டிபன் ஆறிப் போகிறது. சாப்பிடலாம் அல்லவா?” என்று கேலிச் சிரிப்போடு அவள் கூறினாள்.

நான் சட்டையைக் கழற்றிவிட்டு அவள் போட்ட உத்தரவுக்குப் பணிந்து சிற்றுண்டி உண்ணப் புறப்பட்டேன்.

நல்ல வேளையாக மறுநாள் பொழுது விடிந்ததும், ‘குடைரிப்பேர்’ என்ற குரல் அமுதம் போல் என் காதில் விழுந்தது. வாசலில் பார்த்தேன். ஒரு முஸ்லிம் கிழவன் கையில் ஒரு கட்டுக் குடைக் கம்பி, பையில் ஏதோ கருவிகள் இவற்றுடன் பிரசன்னமானன். “இங்கே வா அப்பா” என்று அவனை அழைத்தேன். அவன் என் வீட்டு வாசலில் தன்னுடைய,சாமான்களை இறக்கி வைத்தான். உள்ளே போய் ஐந்து குடைகளையும் எடுத்தேன். நேற்றுக் கொண்டு போன குடையை என் மனைவி தைத்து விடுவாள் என்று எண்ணி, அதை மட்டும் வைத்துவிட்டு நாலு குடைகளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தேன். கிழவன், “இவ்  வள்வுதானுங்களா?” என்றான். என்னிடமிருந்து ஒரு மலையளவு குடைகள் ரிப்பேருக்கு வருமென்று அவன் எதிர் பார்த்தானா என்ன?

“நாலு குடைகள்” என்றேன்.

“கீழே போடுங்கள்” என்றான்.

ஒவ்வொரு குடையாகப் பிரித்துப் பார்த்தான். “எல்லாம் படுமோசங்க. ரொம்ப வேலை கொள்ளுமுங்க” என்று பீடிகை போட்டான்.

“எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டேன்.

“அதை இப்ப எப்படிச் சொல்லலாமுங்க? கம்பி ஒடிசல், துணி கிழிசல், காம்பு ஒடிசல்—இப்படி இருந்தா ஒவ்வொண்ணையும் கவனிச்சுச் செஞ்சாத்தானே முடியும்? சரியாச் செஞ்சாத்தானே நாளைக்கு மறுபடியும் கூப்பிடுவீங்க.”

அவன் என்ன சொல்கிறான்? நாளைக்கு மறுபடியும் கூப்பிடுவதா? இவற்றை ஒக்கப் பண்ணினால் நாளைக்கே ஒடிந்து போய் மறுபடியும் இவனைக் கூப்பிட வேண்டுமா?

அவன் சொன்னதைப் பார்த்தால் ஏதோ மலையைப் புரட்டுகிற காரியம் போல இருந்தது. எவ்வளவு நேரம் ஆகுமோ? நான் அலுவலகம் போக வேண்டும். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருக்க முடியுமா? இப்போதைக்கு இரண்டு குடைகளை ஒக்கப் பண்ணச் சொல்லலாம். இந்த எண்ணத்தின்மேல், “சரி, சரி; ஒவ்வொரு குடையாக ரிப்பேர் பண்ணு; நேரம் இருந்தால் எல்லாவற்றையும் சரி பண்ணலாம். நான் ஆபீஸ் போகவேணும்” என்றேன்.

“ஐயா அவசரம் எனக்குத் தெரியாதுங்களா? இதோ ஜல்தி வேலை செய்து தர்ரேன். ஒரு அவர் போதும்.”  முன்பு அவன் சொன்னதைப் பார்த்தால் ஒரு நாள் முழுவதும் இதே வேலையாக இருக்க வேண்டும் போலத் தோன்றியது. இப்போது ஒரு மணியில் செய்து தருகிறேன் என்கிறானே!

“அதெல்லாம் சரி. முன்பே கூலி பேசிக்கொண்டால் உனக்கும் நல்லது; எனக்கும் நல்லது.”

“நாலு கொடையிலும் புதுசாக் கம்பி போடணும். கம்பிகளைக் கோத்த ஒயர் ஒடிஞ்சு கெடக்குது. எல்லாத்தையும் களட்டிட்டுச் சரிப்படுத்திக் கோத்து வச்சுத் தைக்கணும். கிளிசலுக்கு ஒட்டுப் போடணும். இப்ப கம்பி விக்கிற வெலை எசமானுக்குத் தெரியாதா? கொடைத் துணி ஸ்பெஷல் துணியுங்க. நான் கடைலே வாங்கித் தான் வரதுங்க. பழைய கொடைத் துணியை வச்சுக்கறதில்லைங்க.”

அவனேப் பேசவிட்டால் நான் குடையையும் சரிபண்ண முடியாது, அலுவலகத்துக்கும் போக முடியாது என்றெண்ணி, “சரி, சரி, அந்தக் கதையெல்லாம் எனக்கு வேண்டாம். இந்த நாலு குடையும் ரிப்பேர் பண்ண என்ன கேட்கிறாய்” என்று கேட்டேன்.

“எசமான் கோவிச்சுக்கப்படாதுங்க, வேலையோட கஸ்டம், சாமான்களோட வெலை நெலவரம் எல்லாம் பாத்துத்தானே கூலி சொல்லனுமுங்க நான் என்ன ஆன வெலயா கேக்கப் போறேனுங்க?”

“நீ ராமாயணம் அளக்கிறதாக இருந்தால் அதைக் கேட்க எனக்கு நேரம் இல்லை. இப்போதைக்கு இரண்டு குடைகளை மட்டும் சரி பண்ணித் தா” என்று சொல்லி இரண்டு குடைகளை எடுத்து வைத்துக் கொண்டேன்.

“அதையும் இப்படிக் குடுங்க. இதோ ஆரை அவாிலே எல்லாம் முடிச்சுத் தர்ரேன்.” “வேண்டாம், வேண்டாம். அந்த இரண்டு குடையை ரிப்பேர் பண்ணு. நாளைக்கு வந்து மற்றவற்றைப் பார்க்கலாம்” என்று சற்றுக் கடுமையான தொனியோடு சொன்னேன்.

அவன் பேசாமல் ஒரு குடையை எடுத்துப் பிரித்தான். “இங்க பாருங்க, இதிலே ரெண்டு கம்பி ஒடைஞ்சிருக்குங்க. ஒடைஞ்ச கம்பி குத்தித் துணி கிளிஞ்சிருக்குங்க, மத்தக் கம்பிக எப்படியோ?” என்று சொல்லி ஒரு கம்பியை இழுத்தான் அது படக்கென்று உடைந்துவிட்டது.

“என்னப்பா இது இன்னொரு கம்பியையும் உடைத்து விட்டாயே! உன்னை ரிப்பேர் பண்ணச் சொன்னேனா? ஒடிக்கச் சொன்னேனா?” என்று கத்தினேன். என் குரலைக் கேட்டுவிட்டு உள்ளிருந்து என் மனைவி வந்து விட்டாள். “என்ன என்ன?”என்று கேட்டாள்.

“இங்க பாருங்கம்மா. அடாஸ் கொடை இது. ஒரு கம்பியைத் தொடறபோதே ஒடிஞ்சு போச்சு. ஏற்கனவே ஒடிஞ்ச கம்பி ரெண்டு. அதை ரிப்பேர் பண்ணிக் குடுத்த பெறகு எசமான் எடுத்துப் பிரிச்சா இந்தக் கம்பி ஒடைஞ்சுடும். அப்ப என்ன சொல்வாரு இந்தப் பாவிப் பய நம்ம ஏமாத்திட்டாம்பாரு. நல்ல வேளை! நான் தொட்டேன். ஒடிஞ்சுட்டுது. இப்ப மூணு கம்பியையும் போட்டுத் துணியைத் தைக்கணும்.”

என்னிடமிருந்து பொறுமை ஓடிவிட்டது. “ஏ கிழவா நீ ரிப்பேர் பண்ணினது போதும். எல்லாவற்றையும் வைத்துவிட்டுப் போ” என்று இரைந்தேன்.

“ஐயாவுக்குக் கோபம் ரொம்ப வருது. சரி, இந்தக் கொடையை ரிப்பேர் பண்ணித் தர்ரேன். துணி தைக்கனும் கம்பி வெலை ஏறிப் போச்சு, இரும்பு ஜாமானெல்லாம் ஆகாசமட்டும் வெலை ஏறிடுத்துங்க.”  “மறுபடியும் உன் கதையை அவிழ்க்காதே. சட்டுப் புட்டென்று சொல். இதற்கு எவ்வளவு வேணும்?”

“கம்பி ஒண்னுக்கு ஒரு ரூபா ஆகும். கொடைத் துணி ஒரு ரூபா. கூலி ஒங்க மனசு போலத் தாங்க.”

எப்படியோ பேரம் பண்ணி மூன்று ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டேன். கால் மணியில் குடையை ஒக்கப் பண்ணிவிட்டான்.

“என் அப்பா, இந்தக் கால் மணி வேலைக்கா மூன்று ரூபாய்?” என்று கேட்டேன்.

“என்ன எசமான் அப்படிச் சொல்றீங்க? எனக்குக் கூலியே இல்லிங்களே. ஜாமான் வெலையே நாலு ரூவா. அதிலே ஒரு ரூவா கொறைச்சுட்டீங்க. என் கூலியிலே மண்ணைப் போட்டீங்க!”

எனக்குக் கோபம் வந்துவிட்டது. “என்ன, பேசாத வார்த்தைகளைச் சொல்கிறாய் மண்ணப் போடுகிறதாவது! உன்னைக் கூப்பிட்டதே பிசகு” என்று சொல்லி அவனிடம் மூன்று ரூபாய் எடுத்து வீசி எறிந்துவிட்டுக் குடைகளையெல்லாம் எடுத்துக்கொண்டேன்.

“நாளைக்கு வரட்டுமுங்களா?” என்று அவன் கேட்டதற்கு நான் பதிலே சொல்லவில்லை.

விரைவில் நீராடினேன். உணவு உண்டேன். ஒக்கப் பண்ணின குடையை எடுத்துக் கொண்டேன். அப்போது ஓர் எண்ணம் உண்டாயிற்று. ஒருகால் இந்தக் குடை இடையிலே கம்பி முறிந்தால் என்ன செய்வது? நேற்றுக் கொண்டு போனதையும் பாதுகாப்பாகக் கொண்டு போகலாம் என்று அதை எடுத்தேன். அதன் துணி முன் போலவே தூக்கிக்கொண்டுதான் இருந்தது. “ஏய் என்ன இது இதைத் தைக்கவில்லையா?” என்று கூச்சல் போட்டேன். அவள் வந்தாள். நேற்றுக் கைக்காரியம் ஒழியவில்லை. இது என்ன, அஞ்சு நிமிஷ வேலை. நீங்கள் வைத்து விட்டுப் போங்கள். தைத்து வைக்கிறேன்” என்றாள்.

“நான் இதையும் எடுத்துக்கொண்டு போகிறேன். சாயங்காலம் வந்து கொடுக்கிறேன்; தைத்துவிடு” என்று சொல்லி இரண்டு குடைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

அன்றைக்கென்று மழையே இல்லை. அலுவலகத்துக்குப் போனேன். க்ண்பர்கள், “இது என்ன ஸார், இரண்டு குடை?” என்று கேட்டார்கள். “ஒன்று ஸ்டெப்னி” என்று சொல்லிவைத்தேன்.

மாலையில் வீடு திரும்பியபோது இரண்டு குடைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். சிறிது துாற்றல் வந்தது. ஒக்கப் பண்ணின குடையை விரித்தேன். மளுக்கென்று சத்தம் கேட்டது. ஒரு கம்பி உடைந்துவிட்டது. கிழவன் சொன்னது சரியென்று பட்டது. இது நாலாவது கம்பி. கடவுளே என்று அதை மடக்கித் துணி தூக்கிக் கொண்ட குடையைப் பிடித்துக் கொண்டு பஸ்ஸைப் பிடித்து வீட்டை அடைந்தேன்.

“இந்தா, இதை இப்போதே தைத்துக் கொடு” என்று என் மனைவியிடம் சொன்னேன்.

“ஏன்? ரிப்பேரான குடை என்ன ஆயிற்று” என்று கேட்டாள் அவள்.

“நாலாவது கம்பி உடைந்து போயிற்று; கிழவன் சொன்னது சரி” என்றேன்.  அவள் பாவம், எனக்குச் சிற்றுண்டி அளித்துவிட்டு என் முன்னாலே உட்கார்ந்து தைத்துக் கொடுத்தாள். ‘நாளைப் போதுக்குச் சங்கடம் இல்லை’ என்று எண்ணிக் கொண்டேன்.

மறுநாள் அந்தக் கிழவன் வந்தால் நயமாகப் பேசி மற்றக் குடைகளை ஒக்கப் பண்ணலாம் என்று நினைத்தேன். அடுத்த நாள் அவன் வரவில்லை. என் மனைவி தைத்த குடையோடு அலுவலகம் போனேன்.

அலுவலகத்திலிருந்து திரும்புகாலில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. பஸ்ஸில் ஏகக் கூட்டம்; ஏற முடியவில்லை. அடுத்த நிறுத்தத்தில் பலர் இறங்குவார்கள். அங்கே போய் ஏறலாம். கையில்தான் குடையிருக்கிறதே! மழை பெய்துகொண்டிருந்தது. மெல்ல அடுத்த நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.

திடீரென்று மழை அதிகமாயிற்று. எங்கிருந்தோ ஒரு காற்று அடித்தது பாருங்கள். என் குடை என் கையை விட்டுப் போய்விடும்போல் இருந்தது. அப்படியும் இப்படியும் திசை மாற்றிப் பிடித்தேன். சடக்கென்று குடை அப்படியே விரிந்துவிட்டது. காம்புப் பக்கத்துக்கு எதிரே, திரும்பி விரிந்துவிட்டது. கம்பிகளெல்லாம் விட்டுப் போயின. புயலில் அகப்பட்டவன் தலைக்கேசம் அலங்கோலமாக இருப்பதுபோல் கம்பிகள் ஒவ்வொரு திசையில் கால் பரப்பிக்கொண்டு நிற்கக் குடைத்துணி, எதிர்ப்புறத்தில் மாறி விரிந்து நின்றது. என்மேல் வருணன் அபிஷேகம் செய்து கொண்டிருந்தான்.

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கம்பிகளைச் சேர்த்துக் குடைத் துணியைக் கொண்டு தலையை மறைத்துக் கொண்டேன். அடுத்த  பஸ்ஸில் ஏறி வீடு வந்தேன். உடம்பெல்லாம் சொத சொத வென்று நனைந்திருந்தது.

என் அற்புதக் கோலத்தைக் கண்டு என் வாழ்க்கைத் துணைவி பயந்து போனாள். “என்ன இது?” என்று அலறினாள்.

“ஒன்றும் இல்லை, உடையை மாற்றிக்கொண்டு சொல்கிறேன்” என்று உள்ளே ஒடினேன். மாற்றிக் கொண்டேன்.

“ஏன் இப்படி ஆயிற்று?”

“இந்தக் குடை சதி செய்துவிட்டது. மழைக்குப் பாதுகாப்பாக இருப்பதற்குப் பதிலாகத் திருப்பிக் கொண்டு மழையை ஏந்தும் கிண்ணமாகி விட்டது” என்று சொல்லி, எல்லாவற்றையும் விவரித்தேன்.

“சரி, சரி; நாளைக்குக் குடை ரிப்பேர்க்காரன் வந்தால் எவ்வளவு கேட்டாலும் சரியென்று எல்லாக் குடைகளையும் ரிப்பேர் பண்ணிவிட்டு மறு காரியம் பார்க்க வேண்டும்” என்றாள் அவள்.

“அதை விட வேறு காரியம் செய்யப் போகிறேன். நாளைக்குச் சம்பளம் வரும், முதல் காரியமாக ஒன்றுக்கு இரண்டாகப் புதுக்குடை வாங்கி வரப் போகிறேன்.”

அவள் யோசனையில் ஆழ்ந்தாள். எந்த விசேஷச் செலவுக்காக அவள் அதிகப் பணம் என்னிடம் கேட்க இருந்தாளோ, தெரியவில்லை!