உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டு உலகம்/ஒலிம்பிக்கில் ஓடிய இட்லர்!

விக்கிமூலம் இலிருந்து

ஒலிம்பிக்கில் ஓடிய
இட்லர்!


ஒலிம்பிக்கில் ஒடுவது என்றால் புகழுக்காக என்பது நமக்குத் தெரியும். வெட்கப்பட்டுக் கொண்டு ஓடினர் ஒருவர் என்றால் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!

1936ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் ஒலிம்பிக் பந்தயம் நடைபெற இருந்தது. ஆகஸ்டு 1ம் தேதி போட்டிகளைத் தொடங்கி வைத்தவன் இட்லர் தான். கம்பீரமாக பீரங்கிகள் முழங்கின. சமாதானமான தூதுவர்களாக மூவாயிரம் வெண்புறாக்கள் வானிலே பறக்கவிடப்பட்டன.

முதல் போட்டி குண்டெறியும் போட்டி (Shot put). வெற்றி பெற்றவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஹேன்ஸ் உல்க் என்பவர். 1896ம் ஆண்டிலிருந்து ஒரு முறைகூட ஜெர்மனி தங்கப் பதக்கம் ஒன்று கூட வாங்கவில்லை. முதல் முறையாக வெற்றி பெற்றதும், இட்லருக்கும் அவரது கும்பலுக்கும் தலைகால் புரியவில்லை.

“உலகத்தில் எல்லா இனங்களிலும் எங்கள் ஆரிய இனமே உயர்ந்தது. வலிமை மிக்கது. எல்லா ஒலிம்பிக் போட்டிகளிலும் எங்கள் இனமே வெற்றி பெறும்” என்று போட்டிக்கு முன்னே இட்லர் பேசிய பேச்சுக்கள், உலகத்தை அதிர வைத்திருந்தன. அதற்கேற்ப முதல் வெற்றி ஜெர்மனி வீரருக்கு என்றதும், இட்லர் தன்னுடைய பரிசளிப்பு முறையில் ஒரு புதிய செயலைப் புகுத்தினான்.

அலங்கார பீடத்தில் அமர்ந்திருந்த இட்லர் தன் முன்னே வீரனை வரச்செய்தான். வாயார வாழ்த்தினான். பரிசளித் தான். அடுத்த நிகழ்ச்சி 10,000 மீட்டர் போட்டி, வெற்றி பெற்ற வீரன் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இல்மரி சால்மினன். அந்த வீரனேயும் அழைத்துப் பாராட்டிப் பரிசளித்தான் இட்லர்.

‘நிக்ரோக்கள் தாழ்ந்த இனத்தவர்கள். அவர்களேத் தங்களுடைய வெள்ளே வீரர்கள் போட்டியில் வீழ்த்தி விடுவார்கள்’ என்பதுதான் இட்லரின் எண்ணம். ஆகவே, பரபரப்புடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க நீக்ரோ வீரர்களின் வெற்றி வாய்ப்புக்கள் விண்ணோக்கி இருந்தன.

அவர்களிலே ஒரு அற்புத வீரன் இருந்தான். அவன் பெயர் ஜெசி ஒவன்ஸ்.

அமெரிக்க நாட்டில் அலபாமா என்ற மாகாணத்தில் குழந்தைகளில்

ஒருவனாக தோன்றினான் ஜெசி ஓவன்ஸ். வறுமையிலும், வளமில்லாத உடலிலும் வாழ்க்கையைத் தொடங்கிய ஓவன்சுக்கு பிறவியிலேயே, விளையாட்டுத் திறமை நிறைந்திருந்தது.

இல்லாமையும், தேக இயலாமையும், அவனது வேகத்தைத் தடை செய்யமுடியவில்லை. அவன் முதன் முதலாக ஓடிய வேகத்தையும், நேரத்தையும் கண்டு, கடிகாரம் தவறாக நேரம் காட்டுகின்றதா என்று சந்தேகப்பட்டனர் பலர். அத்தகைய பெருவீரன் ஒரே நாளில் ஒரு மணி நேரத்தில் சாதித்த வெற்றிச் சாதனையைப் (RECORDS) பாருங்கள்.

1935 ஆம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி, மிசிகன் என்னுமிடத்தில் சாதித்த ஜெசியின் சாதனையைப் பாருங்கள். மாலை 3-15 மணிக்கு 100 கெஜ தூரத்தை 9.4 வினாடிக்குள் ஓடியது உலக சாதனை

அடுத்து 3-25 மணிக்கு நீளத் தாண்டும் போட்டியில் 26 அடி 8¼ அங்குலம் தாண்டியது உலக சாதனை.

மாலை 3-45 மணிக்கு நடந்த 220 கெஜ தூரத்தை 20.3 வினடிகளில் ஓடி, உலக சாதனை.

பிறகு 4 மணிக்கு நடைபெற்ற 220 கெஜ தடை தாண்டி ஓடும்போட்டியில் 22.6 வினாடிகளில் ஓடி உலக சாதனை.

இவ்வாறு ஒரு மணி நேரத்திற்குள்ளாக 4 உலக சாதனைகளை சாதித்த மாவீரன் ஜெசி ஓவன்ஸ்தான், 1936ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும் வந்திருந்தான். ஆனால், ஒவன்ஸ் மேல் அளவு கடந்த வெறுப்பினை வளர்த்துக் கொண்டிருந்தான் இட்லர்.

ஜெசி ஓவன்ஸ் என்ற அமெரிக்க வீரன் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் உலக சாதனையை ஏற்படுத்தி விட்டான். அவனுக்குப் பரிசு தரவேண்டியது இட்லர் தானே! நீக்ரோ வெற்றி பெறுவதை அவனால் சகிக்கவும்
வி. உ.-6 முடியவில்லை. வெற்றி பெறாதே என்று தடுக்கவும் முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பான இட்லர், பரிசு தரவேண்டுமே! பாராட்ட வேண்டுமே! தன்னம்பிக்கை மிக்கத் தன் கொள்கைக்கு கொள்ளி வைத்த நீக்ரோ வீரர்கள் முன்னே நிற்க கூச்சப்பட்டான் இட்லர்.

400 மீட்டர், 800 மீட்டர், உயரத்தாண்டும் போட்டிகளில் தொடர்ந்து அமெரிக்க நீக்ரோ வீரர்களே வெற்றி பெற்றனர். அவர்களை அழைக்க முடியாத தர்மசங்கடமான நிலையில் தலை கவிழ்ந்து யோசித்தான் இட்லர். பார்வையாளர்கள் பார்வை முழுதும் இட்லர் அமர்ந்திருந்த இடம் நோக்கியே இருந்தன. பரபரப்புடன் எழுந்து புறப்பட்டுவிட்டான் இட்லர்.

‘பொழுது சாயும் நேரமாகிவிட்டது. வெளியே தூறலாகவும் இருக்கிறது’ என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது. இவ்வாறு முதல் நாள் போட்டிக்கு பரிசு தராமல் புறங்காட்டி மறைத்துக் கொண்டு சமாளித்தாகிவிட்டது. என்ன செய்வது?

மறுநாள் போட்டிகள் தொடங்கின. இரும்புக் குண்டு சுற்றி எறியும் போட்டி (Hammer Throw) நடந்ததில் ஜெர்மனி வீரன் காரல் ஹெயின் வெற்றி பெற்றான். இட்லருக்கோ ஆனந்தம் தாங்க முடியவில்லை. ஆனால் வெளிப்படையாகப் பாராட்டிப் பரிசு தர முடியவில்லை.

தனியாக அமர்ந்திருந்த ஒரு பாதுகாப்பான அறைக்குத் தன் நாட்டு வெற்றி வீரனை வரச் செய்து பாராட்டி மகிழ்ந்தான். அதற்குப் பிறகு போட்டிகளை பொதுமக்கள் பார்வையில் இருந்தபடிப் பார்த்து ரசித்து வந்த இட்லர், தான் உட்கார்ந்து பார்க்கும் இடத்தை அந்தரங்க அறைக்கு மாற்றிக் கொண்டான்.

அதற்குப் பிறகும், அமெரிக்க வீரர்களின் ஆதிக்கமே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு யாருக்குமே பரிசளிக்க இட்லர் முன் வரவில்லை. ஒலிம்பிக் போட்டியில் ஒரு போட்டி நடந்து முடிந்தால், இட்லர் வெட்கப்பட்டுக் கொண்டு வேதனையுடன் வெளியே ஓடினான்.

இட்லர் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து, அங்கு அமர்ந்திருந்த விளையாட்டு ரசிகர்கள் மட்டும் நகைக்க வில்லை. உலகமே சிரித்தது. ஆமாம், இட்லரின் அகம் பாவம்தான் அவமானப்படுத்தி இட்லரை விரட்டியது.

இனவெறி இட்லரை ஓட வைத்தது. அந்த ஓட்டம்தான், அவனது அரசியல் வாழ்வின் வாட்டத்துக்கும் அடித்தளமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஜெசி ஓவன்ஸ் ஒலிம்பிக் பந்தயத்திற்குள் வெற்றி வீரனாக ஓடினான். இட்லரும் ஓடினான். ஒலிம்பிக் போட்டியில் அல்ல—தன் கொள்கைப் போட்டியில் தலைகுனிந்த படி வெளியே ஓடினான். அதுவே வரலாறாக அமைந்து விட்டது.