உள்ளடக்கத்துக்குச் செல்

புதியதோர் உலகு செய்வோம்/பெண்கள் பிரச்னைகளும் ஐக்கியமும்

விக்கிமூலம் இலிருந்து
1. பெண்கள் பிரச்னைகளும் ஐக்கியமும்

பெண்களின் பிரச்னைகள், ஐக்கியம் என்ற நோக்கில், மகளிர் சம்பந்தப்பட்ட அவசியமான கருத்தாக இதுகாறும் ஆராயப்பட்டிருக்கவில்லை என்றே கொள்ளலாம். உருட்டிவிடும் கோலிகள், ஆங்காங்கே உரிய பள்ளங்களில் சென்றமருவது போல், பெண்களின் பிரச்னைகள், இதுகாறும் சில நிலைகளை ஒட்டியே நோக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெண்கள் தொடர்பான எந்தப் பிரச்னையும், தனித்த கூறுகளுக்குடையன அல்ல - மொத்த சமுதாயத்துக்கும் தொடர்புடையதாகும். எனவே, பரந்ததொரு பின்புலத்துடன், பெண்களின் பிரச்னைகளை ஆராய வேண்டி இருக்கிறது.

முதலில் பெண்கள் சார்ந்த பிரச்னைகள் எவ்வாறு உண்டாகின்றன என்று பார்ப்போம்.

பெண்கள் ஒவ்வொருவருக்கிடையே, குடும்பம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் நல்லுறவு இல்லை. நல்லுறவு இருக்க முடியாது என்றே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தொன்று தொட்ட மரபாக, அரணாக, பெண்களிடையே நல்லுறவும் ஒருமித்த உணர்வும் கூடாத இயல்பாக நிலையுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமையுணர்வு கொண்டிருப்பது மிக இயல்பாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தகைய பிளவு மனப்பான்மை பல்வேறு கதை, புராணங்கள் வாயிலாகப் பெண்களுக்கு நியாயப்படுத்தப்பட்டு, அவர்கள் மனப்பான்மை பதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது ஏன்?



ஆடவர்களுக்கிடையே குடும்ப ஐக்கியம், சமுதாய உறவுகள் பெரிதாகப் பாராட்டப்பட்டு, கெளரவிக்கப்பட்டிருப்பதுபோல், பெண்களுக்கிடையே நிலைப்படுவது, கூடாது என்று அஞ்சும் வகையில் அந்த உறவுகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலை ஏன்?

கூர்ந்து நோக்கினால், மிகப் பழைய காலத்திருந்தே, குடும்ப அமைப்புக்கள் சார்ந்தும், சமுதாய, சமய அமைப்புக்கள் சார்ந்தும் பெண் ஆணுக்குச் சமமான மதிப்புடையவளாகக் கருதப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகும்.

சொல்லப் போனால், பெண்தான் சமுதாயத்தின் தூலமான வளர்ச்சிக்கோ, அல்லது நலிவுக்கோ காரணியாக இருக்கிறாள். இயற்கையளித்திருக்கும் தாய்மைப் பொறுப்பு, அவளைத் திண்மை, நொய்ம்மை என்ற இரு கூறுகளுக்கும் உடையவளாக்கியிருக்கிறது. உணர்ச்சிமிகு இயல்பினால் உயிர்க்கருவை ஏந்தித் தன்னுள் ஒரு பகுதியாகச் சுமந்து, அதன் ஆக்கத்துக்கும் எதிர்கால வளமைக்கும் தானே முழுதுமாகப் பொறுப்பேற்கிறாள். உலகின் தலையாய நோவை உடற்பரமாகப் பொறுக்கிறாள். அதன் பிரதிபலிப்பாக, உள்ளத்தில் தனக்கென வாழாத் தன்மையை இயல்பாகப் பெற்றுவிடுகிறாள். இவள் இல்லையேல், மனித சமுதாயமே இல்லை. இத்தகைய ஆதாரமான சிறப்பியல்பு பெண்ணை அடைந்திருந்த போதிலும், அதற்குரிய வகையில் அவள் உயர் மதிப்பைப் பெற்றிருக்கவில்லை. மாறாக, அந்தத் தனிப் பொறுப்புக்களே அவளுடைய சுதந்தரமான இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் அவள் ஒரு மானுடப் பிறவி என்ற அடிப்படை நியாய உரிமைகளையும் கூடப் பறித்துவிடக் காரணமாக அமைந்துவிட்டன.

ஒரு மனிதரின் அடிப்படை உரிமை என்று நோக்குங்கால், அவர் உழைக்கவும், உண்டு உறங்கி வாழவும், கல்வி கற்று அதன் வாயிலாக எல்லா வகைகளிலும் தன்னை மேன்மையாக, செம்மைப்படுத்திக் கொண்டு முழு அளவில் முன்னேற்றம் பெறவும், பொருள் சார்ந்தும், எல்லாச் சலுகைகளையும் பெற உரிமையுள்ளவராகிறார். பெண்ணுக்கே உரிய கடமையாக இயற்கை அவளிடம் தாய்மைப் பொறுப்பை அளித்திருக்கிறது. இதையும் அவள் ஏற்று உரிய காலத்தில் இப்பொறுப்பை, தனக்குரிய விருப்பத்துக்கேற்ப நிறைவேற்றத் தேவையான வசதிகள், மற்றும் சலுகைகளைப் பெறவும் உரிமையுள்ளவளாக இருக்கிறாள்.

ஆனால், இத்தகைய உரிமைகள் மகளிருக்கு முழுமையாக எந்தக் காலத்திலும் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஏன், அளிக்கப்பட வேண்டும்? எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்றால், அந்த நிலையிலும் மகளிர் இல்லை.

ஒரு மகவைப் பெறும் தாய், தனது பெயர் முத்திரையை அந்தக் குழந்தைக்கு அளிக்கும் முறை பழைய காலத்தில் இருந்திருப்பதை அறிகிறோம். மக்கள் தாய்வழி அறியப்பட்டார்கள். ஆனால் நாடோடி மக்கள் ஓரிடத்தில் தங்கி, நிலத்தை உடமையாக்கிக் கொண்டு, அரசு, அரசுரிமை என்ற நாகரிகங்களைப் பெற்ற பின், இனப்பெருக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் பெண் ஒரு கருவி என்ற நிலைக்குத் தாழ்ந்தாக வேண்டி வந்தது.

ஆண் அவளைப் போற்றிக் காக்க, பொருள் தேடிக் கொண்டு வர வெளியில் சென்றான். பெண் இருப்பிடத்தில் ஊன்றி உழைத்தாள். நீர் கொண்டு வந்தாள்; நெருப்பைப் பாதுகாத்தாள், உணவு படைக்கும் பொறுப்பை ஏற்றாள்; கன்று காலிகளைப் பராமரித்துப் பாதுகாத்தாள். ‘துஹித’ என்று மகளைக் குறிப்பிடும் சொல்லே, பெண் பால் கரப்பவள் என்ற பொருளைக் காட்டுகிறது. ஆனால் இவளுடைய உழைப்பு சிறந்ததாக மதிக்கப் பெறாமல், பொருள் தேடி வரும் ஆணுடைய நிலையே, உயர்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?

மக்கட்செல்வம், ஒரு தனி மனிதனின் படைபலத்துக்கு இன்றியமையாததாயிற்று. பொருள் தேடி வந்து பெண்ணுக்கு அளித்துப் போற்றுபவன் ஆதரிப்பவனாக, முதன்மை பெற்றான். தன் இனம் பெருக, வம்ச உரிமையை விரிவாக்கப் பெண் தேவைப்பட்டாள். இந்த நிலையில் ஓர் ஆண் பல பெண்களுடன் வாழ்ந்து மக்களைப் பெறலாம் என்பதும் நியாயமானதாக ஆயிற்று. ஒரு பெண்ணுக்காக ஆடவர் தமக்குள் சண்டையிடுவதும், தோற்றவர் மனைப் பெண்கள் வென்றவருக்கு உரியவராக ஆவதும், சாதாரணமாகக் கருதப்பட்டது. இவ்வாறு தொடர்ந்த காலக்கிரமத்தில் பெண், உயிரும் உணர்வும் உடைய மனிதப்பிறவியின் பெண், நிலத்தைப் போல் கன்று காலிகளைப் போல் தனிமனிதரின் உடமைப் பொருளாகித் தீர்ந்தாள்.

குடும்ப அமைப்புக்கள், இந்தத் தனிப்பொறுப்புகளை அவளுக்குக் கட்டாயமாக்கும் நெறியை வலியுறுத்தின. இது அவள் புற ஒழுக்கம் மட்டுமின்றி, மனஅளவிலும், ஒரு மனிதனுக்குட்பட்டவளாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆணுக்கு ஏகபோகமான உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்கி, பெண்ணை அடிமையாகவே கருதும் நிலையில், அறம் சார்ந்த நெறிகளும்கூட விதிக்கப்பட்டன.

குழந்தை மணம், சதி, கைம்பெண் கொடுமை, போன்ற கூறுகள் அந்த நெறிகளின் விளைவே.

குழந்தை மணத்தின் நோக்கங்கள் இரண்டு : ஒர் ஆடவனின் வாழ்வுக்கு இன்றியமையாத பெண்ணை முன்னதாகவே நிச்சயித்துக் கொள்ளும் வாய்ப்பு; அந்தப் பெண்ணுக்கு விவரம் தெரியாப் பருவமாக இருப்பதனால், இளமையிலேயே மனதைத் திருமணப் பந்தத்திலும், அடங்கிய நெறிகளிலும் பிணித்து விடுவது சாத்தியமாகிறது.

இதனால் ஆணுக்கு எந்தவிதமான இழப்பும் துன்பமும் இல்லை. ஏனெனில் அவன் எப்போதும் சுதந்தரமானவன்; கல்வி கேள்விகளில் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளும் உரிமை பெற்றவன். அவன் கிராமத்திலிருந்து பொருள் தேடவோ, உயர் கல்வி கற்கவோ செல்லும்போது அங்கு தன்னிச்சையாக வாழ்வதில் தடையேதும் இல்லை. இன்பத்துக்காக வேறு மகளிரை நாடலாம்; இன்னொரு மணம் புரிந்தும் வாழ்க்கை நடத்தலாம். ஆனால் கிராமத்தில், திருமண பந்தத்தில் பிணிக்கப் பெற்று, சதி என்ற நெறிகளின் கூட்டுக்குள் உயிர் வாழும் பெண், அந்த நாயகனை நினைந்தே உருக வேண்டும். வடமாநிலங்களில் குழந்தை மணங்களும் அதன் விளைவுகளும் இன்றும் இயல்பாகவே இருக்கின்றன.

கைம்பெண் கொடுமையே, குழந்தை மணங்களின் காரணமாக, வெகு முனைப்பாகச் சமுதாயத்தில் புரையோடியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக சிறுவனான கணவன் இறந்துவிட்டால், கன்னி கழியாத சிறுமி வாழ்நாள் முழுவதும் எதற்கும் ஆகாதவளாக ஒதுக்கப்பட்டாள்; அந்நாட்களில் உயிருடன் எரிக்கப்பட்டாள். இதற்கு அடிப்படைக் காரணம், அவள் வேறொருவனுக்காக மக்களைப் பெற்று, அவன் வமிச ஆற்றலை, உடமைகளைப் பெருக்கிவிடக்கூடாது என்பதுதான்.

இத்தகைய அநியாயங்கள், நியாயமானவை என்று கருதப்படும் வகையில், பெண், சடங்குகளாலும், சம்பிரதாயங்களாலும், வழிவழி மரபுகளாலும் (மூளைச் சலவை செய்யப்பட்டாள்) பதப்படுத்தப்பட்டாள் என்றால் மிகையில்லை.

காந்தியடிகளிலிருந்து, கவியரசர் பாரதி வரையிலும் குழந்தை மணத்தின் தீமைகளைக் கண்டித்துப் பெண் கல்வியை வற்புறுத்தி, பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க முனைந்தனர். கைம்பெண்கள் நிலை மாறி, மறுமலர்ச்சியும் நல்வாழ்வும் பெற, கல்வி கற்று அவர்கள் பொருளாதார சுதந்தரம் பெற வாய்ப்புகளை ஏற்படுத்தியும், மறுமணம் அவர்களுக்கும் உரியதாக வேண்டும் என்றும் முனைப்புடன் அரும்பாடு பட்டனர். சில கொடுமைகளுக்குச் சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்றும் கண்டனர்.

இன்னொரு பெரிய தீமை, பெண்ணை விலை பொருளாகக் கணிக்கும் கணிகையர் மரபு. பெண் வெறும் அடித்தள உழைப்பாளி - அடிமையாகக் கருதப்படும்போது அவள் குடும்பத்துக்குரியவளாகிறாள். இன்னொருபுறத்தில், சிற்சில உரிமைகளை அவளுக்குக் கொடுத்து, அவள் அறிவை ஆடல் பாடல் என்ற கலைத்தேர்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர்.இந்த வாய்ப்புகளின் நோக்கமும், ஒர் ஆணின் மகிழ்ச்சிக்கான இன்ப அநுபவங்களின் பொருட்டாகவே இருக்கிறது. இதற்கென்றே ஒரு வகுப்பை நிர்ணயித்து அவளுக்குக் குடும்ப மேன்மை கிடையாது என்று இழிவுக்குரிய நோக்கில் நிலைநிறுத்தியிருக்கின்றனர்.

இந்தத் தேவதாசி முறை, கடவுளின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டாலும், ஒரு போகப் பொருளாக அவளை வாணிபச் சரக்காக்கும் அவலமே நிகழ்ந்து கொண்டு இருந்தது. விலைமகளுடன் தொடர்புகொள்ளும் ஆண், சமூகக் கவுரவம் பெற்றான். ஆனால், அந்த இழிவுக்குத் தள்ளப்பட்ட பெண்ணோ எல்லா வகுப்பினராலும் அவமதிக்கப்பட்டாள். இந்தக் கொடுமையை ஒழிக்க, சட்டம் கொண்டு வர, இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில டாக்டர் முத்துலட்சுமி, மூவலூர் இராமாமிர்தம் போன்றோர் அரும்பாடுபட்டிருக்கின்றனர்.

இவ்வாறு பெண் சமமில்லாத ஒரு சுயாதீனமற்ற வாழ்முறைக்குக் கட்டாயப்படுத்தப்படுவதன் காரணத்தை ஆராயும்போது, சில கூறுகள் தெளிவாகின்றன.

பெண் பிறப்பெடுக்கும் நேரத்திலிருந்தே, உடற் கூறியலை முதன்மைப்படுத்தும் மரபுகளில்தான் வளர்ச்சி பெறுகிறாள். இனப் பெருக்கத் தொழிலுக்காகவே அவள் - பிறப்பெடுத்திருக்கிறாள் என்ற கருத்து, அவளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் அவளுக்கு வலியுறுத்தப்படுகிறது. இதனால் அவள் ஆணின் சார்புக்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் மனப்பாங்கைப் பெறுகிறாள். காது குத்திக் கம்மல் அணிவதும் மூக்கைத் துளைத்துக் கொண்டு பொன்னணி பூணுவதும், பட்டுப் பட்டாடைகளை உடுத்துவதும், உடலழகை மிகைப்படுத்திக் கொள்ளும் நோக்கையே குறிப்பாக்குகிறது. இவ்வாறே, அறிவுமலர்ச்சி என்ற குறிப்பே, பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

திருமண வயதுக்குப் பெண் வருமுன், அவள் அழகு, அடக்கமான இயல்பு, பொறுமை, தியாகத்தன்மை, ஆடவனை மகிழ்விக்கக்கூடிய பல்வேறு கலைகளில் தேர்ச்சி, ஆகிய சிறப்புக்களே கணிக்கப்படுகின்றன. இவள் ஓர் ஆடவனை மகிழ்விக்க வேண்டும்; ஆண் குழந்தைகளைப் பெற வேண்டும். இன்னும் சுமங்கலியாக உயிரையும் விட வேண்டும். இதிலும் ஒரு முரண்பாடு. கணவன் எத்தனை வயதுடையவனாகவும் இருக்கலாம். நோயாளியாக, வறியவனாக, வாழத் தகுதியற்றவனாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இவள் வாழ்நாளில் இவள் அவனைத் தெய்வமாக மதித்து அவனை மகிழ்விப்பதும் போற்றுவதும் இவள் கடமை. இத்துடன் இவள் சுமங்கலியாக இறப்பது மேன்மை!

இவ்வாறு இவளுடைய சொந்தமான அறிவும் திறமைகளும் சுதந்தரமாக மலர வாய்ப்பில்லாத நிலையில், கடமைகள், மரபு அழுத்தும் நெறிகளில் திணிக்கப்படுகின்றன. மிகப் பெரிய அரச குடும்பத்துப் பெண்ணானாலும், வறியநிலையில் ஏவல் செய்து வயிறு வளர்க்கும் வகுப்பிற்பட்டவளானாலும், இந்த அடிப்படையிலேயே அவனது மனம் பதப்படுத்தப்படுகிறது.

ஒரு பெண் தனிப்பட்ட முறையில் அறிவிலும் திறமையிலும் சிறந்து விளங்கினாலும் மேன்மையில்லை. எல்லாச் சிறப்புக்களும் உடைய ஓர் ஆண்மகனைச் சார்ந்து அவனுக்கு உரியவள் என்று வரும்போதுதான் அவள் சமூகத்தில் மதிக்கப் பெறுகிறாள்.

இந்நாள் பெண் கல்வி கற்று வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பொருளாதார அளவில் முன்னேற்றம், பல சலுகைகள் அளிக்கப் பெறுகின்றன. பெண்கள் நலத்துறை என்பது சமூக இயலில் ஒரு முக்கியமான பிரிவாகவே இயங்குகிறது.

சுதந்தரம் பெற்ற நாள் முதலாக வயது வந்தோர் அனைவரும் வாக்குறுதி பெற்று அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகளைப் பெற்றபின், தூலமான இந்தக் குடியரசு அமைப்பில், உயர்நிலை மாளிகைவாழ் மக்களும், அடித்தள ஆண்டியும் ஒரே மாதிரியான உரிமைகளைப் பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது. நாகரிகமடைந்த மேலை நாடுகளில் கூடப் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத நிலை உண்டு. ஆனால், இங்கே ஒரே கோட்டில் இந்தச் சமத்துவம் வந்துவிட்டது. எனினும் பெண் இன்னமும் பழைய பிரச்னைகளை முற்றிலும் வெற்றி கொள்ளவில்லை; புதிய பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன் தனது கூட்டுக்குள்ளிருந்து தூலமாக வெளியே வந்து புதிய அறைகூவல்களை எதிர்நோக்கும்போது மனஅளவில் விடுபடாத நிலையிலேயே பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறாள்.

பாரத நாட்டின் பல கோடி மக்களில் இன்று பொருளாதாரம் சார்ந்து வாழ்க்கைத் தேவைகளைக்கூடப் பெற இயலாத அடித்தளப் பிரிவில் பாதிக்கு மேற்பட்ட சதவிகிதத்தினர் நெருங்குகின்றனர். கல்வி மற்றும் சமுதாயம் சார்ந்த நாகரிகப் பிரக்ஞை செம்மைப்படாமல் அந்தப் பழைய அடிமைப்படுத்தும் கோட்பாட்டிலேயே பெண்களை நிலைநிறுத்தும் மனப்பாங்கு மேல்தளத்திலும் கீழ்நிலையிலும் அகன்றிருக்கவில்லை. வரதட்சணை போன்ற அவலங்கள் அகலவில்லை; மாறாக, பல்வேறு பரிமாணங்களில் கோரங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

உயர்மட்டத்தில், பெண் வெறும் அலங்காரப் பொருளாக, கணவனின் வாணிப வெற்றிக்கு மதுவார்க்கும் அடிமையாகச் செயல்படுவதும்,

இடை மட்டத்தில் பெண் அலுவலகத்திலும் வீட்டிலும் கொத்தடிமைபோல் செயல்பட வாழ்வைப் பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் நிலையில் இருப்பதும், அடித்தளத்தில் எல்லா வகைகளிலும் எந்த மறுமலர்ச்சிக்கும் வழியின்றி அழுத்தப்படுவதும் இத்துணை சட்டங்களும் திட்டங்களும் வந்த பின்னரும் ஏன் மாறவில்லை?

அடித்தளத்தில் சட்டங்களைப் பற்றிய உணர்வோ, மீறுவது பற்றிய அச்சமோகூட இல்லை. இதனால் பெண்ணின் உரிமைகள் அன்றாடச் சட்டமீறலில் பறிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

பெண் குழந்தைகள் அதிகமாக உழைக்கிறார்கள்; கல்வி மறுக்கப்படுகிறது. வயது வந்ததும் வராததுமாக ஓர் ஆடவனின் உரிமைப் பொருளாவதற்குத் தடையில்லை. தாய்மை திணிக்கப் பெறுகிறது. உடல் நலம் அலட்சியமாக்கப்படுகிறது. இந்தப் படியில் சிசு மரணங்கள், பெண் மரணங்கள் அதிகம்.

இந்த நிலை ஏன்?

வரதட்சணைக் கொடுமையை எடுத்துக் கொண்டால் நேராக, எதிர்க்கேள்வி வரும் தாய்மார்தான் குற்றவாளிகள். கணவனின் சகோதரியும் தாயுமே புதிய மணப்பெண்ணைக் கொடுமைப்படுத்துவதில் இணைந்து நிற்கின்றனர்.

நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர் மக்கள் ஒற்றுமையைக் கூறு போட்டால் எளிதாகத் தாம் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கண்டிருந்தனர். அந்நாள் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட, மக்கள் சக்தியை ஒன்று திரட்ட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளுக்கு அப்பால் ஒன்றுபட்ட உணர்வை, நமது தேசப்பிதா காந்தியடிகள் தூண்டிவிட முன்நின்றார். சர்வாதிகார வெறியை எதிர்த்து, புதிய பொருள் முதல் கொள்கையை அமுலாக்கி, சமத்துவக் குடியரசை நிலைநிறுத்த, ஏழைப்பாட்டாளிகள், உழவர், பெண்கள் ஆகியோரை ஒன்று திரட்ட, பிளவுகளைத் தாண்டி லெனின் அழைத்துச் சென்றார்.

சாதியில்லை, சமயமில்லை, ஒன்றுபடுவோம் வாருங்கள்; ஒன்றுபடுவோம், உரிமைக்குப் போராடுவோம் என்றெல்லாம் தாராளமாகக் கோஷங்கள் இன்றும் ஒலிக்கின்றன. ஆனால் இதெல்லாம் ஆண்களுக்குத்தான் பெண்களுக்கு இல்லை என்ற பொதுக்கருத்து இன்னமும் தகர்க்கப்பட்டிருக்கவில்லை. சொல்லப் போனால், பெண்களுக்குள் ஏது சாதி? ஏது சமயம்? ஏது பிரிவு? பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் மாளிகையில் பிறந்தாலும் கணவனுக்குக் குற்றேவல் செய்கிறாள். அவன் உடலநலிவுற்றபோது, அவள் எல்லாப் பணிகளையும் செய்பவளாக இருக்கிறாள். ஒரு மகவுக்குத் தாயென்றால் அவள் எல்லா அழுக்குகளையும் கழிவுமலங்களையும் பொறுக்கிறாள். இதனாலேயே காந்தியடிகள், துப்புரவுப் பணி செய்யும் தோட்டி வருக்கத்தினரை, சமுதாயத்தின் தாய்க்குலத்தினர் என்றார்.

துப்புரவுக்காரி, சலவைக்காரி, வீடு சுத்தம் செய்து குற்றேவல் செய்பவள், சமையற்காரி, செவிலி என்று அவள் செய்யாத வேலை என்ன இருக்கிறது?

‘மலையில் வளர்ந்தாலும் உரலில் மசிய வேண்டும்’ என்ற பழமொழிக்கே உரித்தானவள் பெண். பெண்ணின் இந்த உழைப்புக்குச் சமூக மதிப்புக் கிடையாது என்ற கருத்துக்கு நல்ல விளக்கம்கூடக் கூறலாம். அவளுக்கே என்று உரியதாக்கபட்ட சமையற்பணி, சமுதாயத்தில் கடை நிலை ஊழியமாகக் கருதப்படுகிறதே!

இதில் எந்த ஒரு பணியைச் செய்யாமல் ஒரு பெண் வாழ்நாளைக் கழிக்க முடியும் ஒரு செல்வனான ஆண், உடல் வருந்த, அசையக்கூட வேண்டாம். தன் படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டாம். தன் உணவுத் தாலம் கூடக் கழுவ வேண்டாம். ஆனால் மாளிகையில் வாழ்ந்த பெண்ணானாலும், தனது மகவு மடியில் அசுத்தம் செய்யும்போது மகிழ்வுடன் ஏற்றுத் துப்புரவு செய்கிறாள். அதற்காக இரவு பகல் பாராது உழைக்கிறாள்.

இவருக்குச் சாதி இருக்கிறதா? சாதி தொழிலைச் சார்ந்துதான் அமைகிறது என்றால், பெண் எந்த சாதிக்கு உரியவள்? இவள் இயக்கத்தில் எந்தத் தொழிற்கூறும் விலக்கில்லையே? இந்த சாதிக்குரியவள் என்று தன்னைக் கூறிக் கொள்ள இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

சமயம்... என்று எடுத்துக் கொண்டால், எந்த ஒரு சமயமும் பெண்ணை ஆணுக்குச் சமமாக ஒப்பிடவில்லை. கோயில் குருமார் என்ற உரிமையை எந்த உயர்ந்த சாதிப் பெண் பெறுகிறாள்?

எல்லாச் சமயங்களும், பெண்ணை இரண்டாம்பட்ச நிலையில் ஆணைச் சார்ந்து வாழும் கோட்பாட்டில் வைப்பதில் முதன்மை பெற்றிருக்கின்றன.

பால் சார்ந்த குற்றங்கள் இருவருக்கும் பொது வென்றாலும், பெண்ணுக்குக் கல்லெறியும் கசையடியும் நியாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆண் குற்றம் புரிய உரிமை கொண்டவனைப் போல் விடப்படுகிறான். பெண் சுமையும் சுமக்கிறாள்; ஏச்சுக்கும் பேச்சுக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் ஆளாகிறாள். அவளுடைய உயிரையே குடிக்கும் விளைவுகளும்கூட, சமயம் சார்ந்து அவள் மனம் மிகவும் நொய்ம்மைப்படுவதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சமயம் என்று சார்ந்து அவள் பெருமை கொண்டாடுவதும்கூட தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் செயல்தான்.

ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு பெண்ணுக்குப் பூரணமாக வர இயலாதபடி, அவள் அறிவுக்கண்கள், ‘கலாசார’ மரபுகள் என்ற திரைகளால் மூடப்படுகின்றன. சமயநெறிகள் என்ற கோட்பாடுகள் இறுக்கமாக அவளைத்தான் பிணிக்கின்றன.

அடுத்து, பெண்களின் உறவுகள், குடும்பம் சார்ந்தும் , சமூகம் சார்ந்தும் எவ்வாறு நிலைப்படுத்தப் பட்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

தாய்-மகள், சகோதரி-சகோதரி மாமி-மருமகள்; அண்ணி நாத்தி, இவை முக்கியமான உறவுகள். இவைதவிர, ஒரே ஆணை மணந்து கொண்ட பெண்களுக்கிடையே உறவுகள்; சகோதரர்களை மணந்த பெண்களுக்கிடையே உறவுகள் - என்றும் வகைப்படுத்தலாம்.

தாய்-மகள் உறவு, பற்றும் பாசமும் உடைய உறவு.

இந்த உறவு, தாய்க்கும் மகனுக்குமிடையே உள்ள உறவுபோல் நெறிப்படுத்தப்படவில்லை.

என்ன இருந்தாலும் மகள் - இவள் பிறந்த வீட்டைத் துடைத்துக் கொண்டு போகிறவள்; இவளால் புகுந்த வீட்டுக்குத்தான் ஆதாயங்கள்; இவளிடமிருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்க இயலாது; இவருக்கு வண்ணம் வரிசைகள் செய்யும் போதுதான் சமூகக் கவுரவமும் மதிப்பும் உண்டாகிறது.

மகளின் நோக்கிலோ, தாய் இவருக்காக உடலாலும் பொருளாலும் கடமைப்பட்டிருப்பதாக நினைக்கும் வண்ணம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தாய் உடல் நலமில்லாமல் சாகும் மூச்சை விட்டுக் கொண்டிருந்தாலும் , கணவன் போகக்கூடாது என்று சொன்னால் அந்த வாக்கைக் கடைப்பிடிப்பதுதான் அவளுக்கு மேன்மை. உத்தமமான தாயன்பும் எவ்வாறு மகள் விஷயத்தில் பிரித்து நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது! கணவனின் தாயாதி பங்காளி இறந்தால்கூட இவள் பத்துநாள்-கருமாதிச் சோகச் சடங்குகளைக் கொண்டாட உரிமையுள்ளவள். ஆனால் சொந்தத் தாய்க்கு மூன்றே நாட்கள்தாம் துட்டி நாட்கள்.

தாயின் இடத்தில் சிற்றன்னை என்று வந்து விட்டாலோ, நிச்சயமாக அவள் ஒரு கொடியவளாகவே நெறிப்படுத்தப்படுகிறாள். மறுதாரம் எத்துணை அன்புடனும் ஆதரவுடனும் முதல் தார மக்களைப் பேணினாலும், சுற்றியுள்ள பெண்களே அவளைச் சந்தேகக் கண்கொண்டுதான் துருவுவார்கள். அந்த மக்களிடையே அவள் காட்டாத வேற்றுமையை சாடைமாடையாக ஏற்றி நஞ்சை ஊட்டுவார்கள். இதனாலெல்லாம் அந்தப் பெண்களுக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா? கிடையாது. பெண்கள் தங்கள் குடும்ப - சமூக உறவுகளை ஒருவருக்கொருவர் குதறிக் கொள்வது இயல்புக்குரியதாக நிலைப்படுத்தப்பட்டு, காலம் காலமாக, இதிகாச, புராண ரீதியாக வலுவிக்கப் பெற்று, பின்பற்றப்படுகிறது.

சகோதரி - சகோதரி உறவுகளில், போட்டியும் பொறாமையுமே முதன்மை பெறுகின்றன. இந்தப் போட்டியில், அறிவு மற்றும் திறமைகளுக்கிடமில்லை. அழகு - ஆபரணங்கள் உடைமை, கணவர் பெருமை, தாய்வீட்டிலிருந்து பெற்றுச் செல்லும் வண்மை வரிசைகளின் சிறப்பு என்றுதான் அமைகின்றன. தனது மகனோ மகளோ சிறப்பாக இல்லாமல் சகோதரி மக்கள் சிறப்படைந்தனர் என்ற மாதிரியான கூறுகளில்கூட, எரிச்சலும் பகைமை உணர்வும் இயல்பானதாகப் பாதுகாக்கப்படுகிறது. சகோதரர்களை மணந்த பெண்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலையிலேயே கூட்டுக் குடும்பங்கள் கலகலத்துப் போய் பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் உள்ளாகின்றன என்பதே உலகுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

‘ஆண்பிள்ளைகள் ஒண்ணு சேர்ந்திடுவாங்க! பொம்பிளங்க சேராது’ என்பது பிரசித்தம்.

ஓர் ஆணைச் சார்ந்து அவனுக்கே தனியுடமையாக வாழும் வாழ்வில் இன்னொரு பெண் பங்கு கொள்ள வருகிறாள் என்ற பெருமையிலும்கூட, சார்புநிலையே ஆதாரமாக நிற்கிறது.

இந்தக் காரணங்களைக் காட்டியே, பெண்களை வெறும் அடிமைகளாக, வெளி உலகம் தெரியாதவர்களாக, கணவனின் நடவடிக்கைகளில் சம்பந்தம் இல்லாதவர்களாக, பொருளாதார உரிமைகளில், குடும்ப இயக்கம் மற்றும் சிறப்பம்சங்களில் பங்கு மறுக்கப்பட்டு, உழைப்பாளிகளாகவே சுரண்டிக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்புக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்ணின் கல்வித்திறமைகளும், பொருளாதாரப் பங்கேற்புக்களும், குடும்ப அமைப்புகளை மேலும் வளமுடையதாக உயர்த்திவிடவில்லை.

இன்னமும் பாரதத் திருநாட்டில், பின்தங்கிய வடமாநிலங்களில், பெண் ஏழு வயசு மகளுக்குத் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறாள். மாமியார் அதட்டலும், கணவனுடன் மைத்துனர் அடிப்பதும்கூட நிகழ்கின்றன.

கிராமங்களில், கூட்டுக் குடும்பங்களில் ஆடவர் வயலிலோ கொட்டிலிலே வரும் வருமானத்தைக் கள்ளிலும் சூதிலும் செலவு செய்ய ஒற்றுமையாக இருப்பார்கள். ஆனால் பெண்கள், தங்கள் புழுக்கங்களை ஒருவர் மீது ஒருவர் வசைபாடிக் கொண்டும் ஏசிக் கொண்டும், பேசிக் கொண்டும் அழுது கொண்டும் உழைப்பில் அழுந்திக் கொண்டும் அன்பும் இதமும் மேன்மையும் அறியாத பாழ்குழியில் விழுந்த நிலையில் காலம் கழிக்கின்றனர். நாம் ஏன் இந்த நிலைக்கு ஆளானோம் என்று நினைத்துப் பார்க்க, அவர்களைப் பிரித்து வைத்திருக்கும் சக்திகள் இடம் கொடுப்பதில்லை.

‘எனக்கொன்னும் மறுப்பு இல்லை. என் மனைவிதான் சம்பிரதாயம் குறையக்கூடாது என்கிறாள்’ என்று தந்தை நழுவுவார்.

‘அம்மா சொல்கிறபடி தான் எல்லாம்’ என்பான் பையன்.

ஆக, தாயாராகிய பெண்மணி மகனுக்குப் பெண்ணைக் கொடுக்க வரும் வீட்டாரிடம் பேரம் பேசுவதிலும் கறப்பதிலும் பெருமை கொள்கிறாள்.

நாம் நம் இனமான ஒரு பெண்ணின் நல்வாழ்விலும் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்கிறோம். அவளை வருந்தச் செய்யலாகாது என்ற உணர்வே சிறிதும் அவளிடம் தலைகாட்டுவதில்லை.

பொருளாதார உரிமை பெற்று உழைக்கும் மகளிரிடமும், உரிமை பெயருக்குத்தான் இருக்கிறது. உண்மையில் ஆணே கோலோச்சுகிறான். தனது ஊதியத்தைக் கொண்டவனுக்குக் காட்டாமல் இவள் விருப்பப்படி எதுவும் செய்ய இயலாது.

தன் பெற்றோருக்கு ஓர் அவசியம் என்று இவள் பெறும் ஊதியத்தில் ஒரு பங்கை அளிப்பதற்கும் அவனுடைய அநுமதி பெறுவது உசிதமாகக் கருதப்படுகிறது. ஏன்? அவளுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தக் கணவன், இல்லாவிட்டால் அவனைச் சார்ந்த மக்களுக்கு உரிமை.

பீடி சுருட்டுதல், மற்றும் பாய் முடைதல் போன்று தொழில் செய்யும் பெண்கள், தங்கள் ஊதியம் பதிவு செய்யப்படும் அட்டைகளில் கணவன் அல்லது தந்தை பெயர்களே இருப்பதைப் பல பெண்கள் முறையிட்டிருக்கின்றனர். பெண்களின் உரிமைகளுக்குப் போராடும் கூட்டங்களில் ஊதியம் பதிவு செய்யும் பாஸ்புக்குகள் அவரவர் பெயர்களிலேயே இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதும் புதிதல்ல.

இன்னமும் பெண் பள்ளிக்கூடங்களில், பெண் குழந்தைகளைச் சேர்ப்பதற்கும்கூடத் தந்தை வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்ற விதிகள் கூர்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆணைச் சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை, பத்திரமின்மை பெண்ணை விட்டு அகலாமல் நிலைத்திருக்கும் வண்ணம், எல்லாப் பழைய நெறிகளும் ஆழமாகப் பேணப்படுகின்றன. மாற்றங்கள், முற்போக்கு நாகரிகங்கள் எல்லாம் மேல் எழுந்த வாரியான கண்துடைப்புக்களே.

எனவே அவளுடைய உணர்வுகள் அனைத்தும் அந்த ஆதாரத்திலேயே பிறக்கின்றன.

ஆணைச் சார்ந்து வாழவேண்டிய சமூக மதிப்பின் காரணமாக, பெண்களின் உறவுகளிடையே பிளவு மனப்பான்மை தோன்றுகின்றன.

ஒரு மாமியார் இதன் காரணமாகவே மருமகளை விரோதமாகப் பார்க்கிறாள். ஒரு சகோதரி தன் சகோதரன் மனைவியை எதிரி போல் பாவிக்கிறாள். தாய்-மகன் பாசம் கட்டுப்படுத்தும் உடமைக்குரிய மூடப்பாசமாக உருவாவதற்கும் இந்த ஆழ்ந்த உணர்வே காரணமாகிறது.

ஒரு பையன் திருடுவது, குடிப்பது போன்ற தீய பழக்கங்களில் விழும்போதுகூட, அவனைத் திருத்திக் கண்டிக்கும் துணிவு ஒரு தாயிடம் தோன்றுவதில்லை. ஏன் இந்தக் கண்மூடிப் பாசம்?

இதே சமயம், மகள் தவறாக நடந்தால், அவளுக்கு மட்டும் கடும் தண்டனை கொடுக்கிறாளே, அது ஏன்?

உண்மையில் மோசம் போகும் மகளே, சமுதாயக் குற்றம் செய்யும் மகனைவிடப் பரிதாபத்துக்குரியவள். ஆனால் மகனை மறைத்து வைக்கும் தாய் மகளை நாலு பேரறியக் கொடுமைப்படுத்துகிறாள். ஏன்?

அடுத்து, பெண்களைப் பிளவுபடுத்தும் இன்னொரு முக்கியமான கூறு, பெண்ணைப் பற்றிய ஒழுக்க விமரிசனங்கள்.

ஒழுக்க அவதூறு, பெண்ணுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய கொடுமை. அவள் நல்வாழ்வையும் எதிர்கால மேன்மையையும் குலைக்க ஒரு சிறு அவதூறு போதுமானதாக இருக்கிறது. ஏன்? மிகச்சிறந்த தொழில் புரிபவளை, திறமைசாலியை ஒன்றுக்கும் உதவாமல் மழுங்கடிக்கச் செய்யவும் இந்த ஒழுக்கப் பழியே காரணமாகிறது. இதையும் பெண்ணே பெண்ணுக்கு இழைக்கிறாள்.

பழைய காலங்களில் பெண்களின் உணர்வுகளுக்கு எந்த வடிகாலும் இல்லாமலே கல்வி - சமூக உணர்வும் முடக்கப்பட்டு அழுத்தப்பட்ட நிலையில் இது போன்ற பொறுப்பற்ற அவதூறு பேசுவது தவிர்க்கப்படாதபடி இருக்கலாம்.

ஆனால் இந்நாளிலோ

வாணிபரீதியாக இது மிகக் கேவலமான பரிமாணங்களைப் பெற்று, சினிமா நடிகைகளைப் பற்றிய தகவல்களாகப் பத்திரிகை பக்கங்களை நிரப்புகின்றன.

இந்தப் போக்கு ஆண்களிடம் இருந்தாலும், பெண்களே இந்த வகைச் செய்திகளை எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஆதரிக்கின்றனர்.

ஒரு பெண்ணின் நடத்தை ஒழுக்கம் பற்றி இன்னொரு பெண் விமரிசிக்கும்போது, தம்மினத்தின் மீதே சேற்றை வாரி இரைப்பதாக உணர வேண்டும்.

எந்தப் பெண்ணும் சமூகம் புறக்கணிக்கும் ஒழுக்கக் கேட்டைத் தானாக ஏற்கத் துணியமாட்டாள். அவள் தூண்டப்படுகிறாள்; தள்ளப்படுகிறாள்.

சமுதாயக் குற்றங்கள் பெரும்பாலும் பொருளாதார வறுமையிலும் மிதமிஞ்சிய செல்வ - அதிகாரக்குவிப்பின் ஆணவத்திலும்தான் நிகழ்கின்றன.

குறைந்தபட்சம் ஒர் ஆணைத் திட்டும்போதுகூட, அவன் தாயின் ஒழுக்கக் கேட்டைக் குறிக்கும் சொல்லால் குத்தி வாங்குகிறார்கள். இன்னார் மகனை - என்று தாயைத் தாக்குகிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு அங்கீகரிக்கப்படாத தாய்த் தன்மை உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கொடுமையானதாக சமூகப் புறக்கணிப்பை விளைவிக்கிறது. எனவே அவள் மனமொப்பி அந்தக் குற்றம் புரிய மாட்டாள்.

ஆனால் அவள் வஞ்சிக்கப்படுகிறாள்; உடலியல் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் தண்டனைகள் ஏற்கிறாள். எனவே விழிப்பும் மலர்ச்சியும் பண்பும் உடைய எந்தப் பெண்ணும் பொறுப்பற்ற அவதூறுகளை வீசமாட்டாள்.

இப்போது, இந்தக் கூறுகளை வகைப்படுத்தித் தீர்வுகளைச் சிந்திப்போம்.

பெண், தன் காலால் நிற்கும் உரிமையைப் பெறுவதுடன், தான் எந்த நிலையிலும் பத்திரமற்றவள் என்ற உணர்வைக் கெல்லி எறிந்துவிட்டுத் தன்னம்பிக்கையைக் கொள்ள வேண்டும்.

இந்நாள் படித்துப் பொருளாதார சுதந்தரம் பெற்ற பல லட்சக்கணக்கான பெண்கள் இதை நிச்சயமாக உணர்ந்து செயல்பட வேண்டும்.

இன்றைய உழைக்கும் மகளிரிடையும் குடும்ப வேற்றுமைகள் - சுமுகமற்ற உறவுகள் பிளவுகளைப் போக்க முனைய வேண்டும்.

வசதிகளும் சலுகைகளும் வாய்ப்புகளும் பெற்ற இடைநிலைக் குடும்ப மகளிர் ஆசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் அலுவலக ஊழியர்களாகவும் பல நிலைகளிலும் பணிபுரிகின்றனர். அவர்களும் மாமியார் - மருமகள், அண்ணி - நாத்தி பிளவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மாமியார்களாக இருக்கும் மூத்த தலைமுறையினர் இளைய தலைமுறையினர் அலுவலகப் பொறுப்புக்களை ஏற்க வேண்டியிருக்கும் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு வீட்டுப் பொறுப்புக்களில் இணக்கமாக உதவுவதற்கு முன் வர வேண்டும். ஆனால் அதேசமயத்தில், அலுவலகம் செல்லும் இளைய தலைமுறையினர், புதிய பொருளாதார சுதந்தரம் காரணமாக, ஊதியம் தேடிவரும் உரிமையில் உடுத்தவும், உண்ணவும், உல்லாச யாத்திரை செல்லவும் சுயநலம் பேணுவதும் நியாயம் என்றும், மூத்த தலைமுறை உறவினர், அவ்வழியில் உழைக்கவும் மக்களைப் பார்க்கவும் கடமைப்பட்டவர்கள் என்று கருதுவதும் மிகத் தவறு.

மூத்த தலைமுறையினரிடையே புதிய விழிப்பை உணர்த்தி மூடக் கருத்துக்களைப் போக்கவும், அன்பும் ஆதரவுமாக அவர்களின் ஒத்துழைப்பைப் பெறவும் இளைய தலைமுறைப் பெண்டிர் கடமையாகக் கருதி நடக்க வேண்டும். குடும்பங்களிடையே ஆணாதிக்கக் குவிப்பைக்கரைத்து, சமத்துவமான மனித சுதந்தரங்களைக் கொண்டு வர, ஆரவாரமற்ற புரட்சி மனமாற்றங்களாலேயே இயலும். குடும்பம் என்ற அமைப்பு மிகப் பழமையானது. அது ஒரு நாட்டை வலியுறுத்தும் சிறுசிறு தொகுதிகள். இத்தொகுதிகளின் இணையங்களே, நமது சமுதாயம். எனவே, ஒவ்வொரு பெண்ணும் அமைப்புக்களைப் பலப்படுத்துவதன் வாயிலாக, சமுதாய - நாட்டு ஒற்றுமையைக் குலைக்கும் பிளவுச்சக்திகளையே விரட்டியடிக்கும் நோக்கில், சமுதாய உணர்வையும் பொறுப்பையும் ஏற்கிறாள்.

அடுத்து, பொருளாதார அடிப்படையில் பற்றாக் குறையுடன் போராடும் வாழ்வில் எந்த ஒரு உரிமையும் சுகமும் காணாத நிலையில் பல கோடி பெண்கள் நலிகின்றனர்.

மேற்படியில் உள்ள பெண்கள், தங்கள் சுயநலங்களே, உரிமைகள் எனக் கருதுவது பரிதாபத்துக்குரியது. அவர்களுக்குச் சமுதாயக் கடமைகள் உண்டு.

நாம் கல்வி பெறவும், இந்த முன்னேற்றத்தை அடையவும் நமது மூத்த தலைமுறைப் பெண்கள் எத்துணை போராடியிருக்கின்றனர் என்பதை மறக்க இயலாது. நாம் சமுதாயத்தில் இன்று பெற்றிருக்கும் சலுகைகள் அனைத்தும், ஏனைய பெண்களும் பெற வேண்டும்; அதற்காக நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறக்கலாகாது. இன்னும் நாம் பல காதம் கடக்க வேண்டும்.

இந்நாள் வசதியற்றோர், முதியோர், ஊனமுற்றோர், கைம்பெண்கள் என்று அரசு கருணைக்கரம் கொண்டு படியளக்கிறது. மனைவியை இழந்த ஆண் நலிந்தவனாகக் கருதப்படுவதில்லை. ஆனால் பெண் மட்டும் துணையை இழந்தால், சகல வகைகளிலும் ஊனமானவளாகக் கருதப்படும் நிலை ஏன்? எனவே, மகளிர் புறச்சலுகைகள் வெறும் ஊன்றுகோல் என்பதை உணர்ந்து அகத்தின் தாழ்மையுணர்வைப் போக்கிக் கொள்ள நிமிர வேண்டும்.

பெண்கள் எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந்த உணர்வுடன் செயல்படும்போது, தங்களைப் பிணிக்கும் தடைகளை உண்மையாக அடையாளம் கண்டு கொள்வர். அப்போது, தாம் இரண்டாந்தரப் பிறவியல்ல என்ற விழிப்புணர்வு பெற முடியும். சமுதாயத்தில் சரிபாதி எண்ணிக்கையினர் என்பது மட்டுமின்றி ஆக்க சக்திக்கே உறைவிடமாகத் திகழுபவர் பெண்கள்.

எனவே குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் அவர்களுக்குள் ஆக்கபூர்வமான அடிப்படை அறிவு மலர்ச்சியிலும், தளையற்ற இயக்கங்களிலும் ஒழுங்கு பெறும்போது சீரான சமுதாய வளர்ச்சியைக் காண முடியும்.

இந்நாள் சமுதாய மேம்பாடுகளைக் குலைக்கும் பல்வேறு தீயசக்திகளை ஒடுக்க வேண்டுமானால், பெண்களின் ஒருங்கிணைந்த மனமாற்றமும், செயல்பாடும் இன்றியமையாதவை. அந்த இலட்சியத்தை நாம் செயற்படுத்துவோம்.

- மகளிர் தினக் கருத்தரங்கு
உளுந்தூர் பேட்டை - 1988.