புதியதோர் உலகு செய்வோம்/செல்லாக் காசாகும் சட்டங்கள்
குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிராக வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைப் பெண்கள் அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டிருக்கின்றன. குடும்பம் சார்ந்து பெண்களுக்கு வன்முறைகள் இழைக்கப்படுவது காலம் காலமாகவே நிகழ்ந்து வருகிறது.
பெற்றோர்கள், புகுந்தவீடு, பிள்ளைகள் ஆகிய அனைத்துச் சார்பும் ஆணாதிக்கக் குடைகள் தாம். பெற்றோர் மகளைக் கை கழுவிய பின் அவள் புகுந்த வீட்டுக்கு அடிமையாகிறாள். பின்னர் மகனைச் சார்ந்து அவள் வாழ வேண்டும். ஒரு கணவனுக்கு மனைவி, அசையும் சொத்து போன்றவளே. அவளை அவன் அடிக்கலாம். துன்புறுத்தலாம். ஆணாதிக்கச் சமுதாயத்தில், குடும்ப வன்முறைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்ணை மேன்மைப்படுத்த சமுதாயத்தில் உரிமையுள்ளவளாக அவளை வாழச் செய்ய இதுவரையில் பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. தேவதாசி ஒழிப்பு, விபசாரத் தடைச் சட்டம், வரதட்சணை ஒழிப்பு, இளம் பருவத்திருமணம் எல்லாமே சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டாலும், பெண்ணின் நிலை முழுவதும் சீரடைந்து விடவில்லை. மணவிலக்கு தொடர்பான சட்டம் ஒன்று மட்டுமே இடைநிலைக் குடும்பங்களில் ஓரளவு பயன்பட்டிருக்கிறது.
வரதட்சணைச்சாவுகள் சட்டபூர்வமாக வழக்கு மன்றத்துக்கு வரும்போது, மாமியார், நாத்திமார் போன்ற பெண்களே குற்றவாளிகளாக முதன்மைப்படுத்தப்படுகின்றனர். குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டம் பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற கருத்தாக்கத்தையே மேலும் தீவிரமாக்கும் அபாயம் இருக்கிறது. ஓர் ஆணைச் சார்ந்து நிற்பதே பெண்ணுக்குச் சமுதாய மதிப்பை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. மகனைச் சார்ந்து பாசம்பொழியும் தாய். அவனுக்கு நல்ல மனைவியைக் கட்டி வைப்பதில் ஆர்வமாக இருந்தாலும், அவள் தன் மகனின் பாசத்தைக் கூறுபோடும் நடப்பைத் தாங்க இயலாத விரோதியாகிறாள். புதிய மனைவியும் அவ்வாறே அவனை முழுவதுமாகச் சார்ந்து மாமியாரை விரோதக் கண் கொண்டு பார்க்கிறாள். இதேபோல் நாத்தி - அண்ணி - மூத்த தாரம் - இளையதாரம் மக்கள் என்று பெண்களுக்குள் ஒற்றுமை கண்டு வலிமை பெற வேண்டிய உறவுகள்-பெண் எத்துணை சுயச்சார்பும் அறிவும் ஆற்றலும் பெற்று மேலோங்கினாலும், பிளவுப்பட்டு, ஆணாதிக்க சாம்ராச்சியத்தை மேலும் வலிமைப்படுத்தவே பயன்பட்டிருக்கின்றன.
மேலும், பல தார மணத் தடைச்சட்டம் இருக்கிறது. விபச்சாரத் தடைச்சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டங்கள் வெறும் செல்லாக் காசுகளாக எங்கெல்லாம் போயிருக்கின்றன என்பதை ஆராய்ந்தால் ரிஷி மூலம் நதி மூலம் கதையாகத்தான் முடியும். ஒரு பெண் கைம் பெண்ணாகும்போது கைம்பெண் வன்முறைகளை, ஒரு பெண்ணே இழைக்கிறாள். 'நீ விதவை விதவை' என்று குத்தும் கொடுமையைப் பெண்வர்க்கமே செய்வதாக, இன்றும் தொலைக்காட்சித் தொடர்கள் மேலும் மேலும் - மறந்து மேடிட்டுப் போன குழிகளைத் தோண்டி வலியுறுத்துகின்றன.
பாலியல் வன்முறை போன்ற கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண், அந்தக் குற்றத்தைச் செய்தவனையே மணந்து வாழ்நாளெல்லாம் கற்பைப் பேணுவதாகவே கருத்தாக்கம் நிலைப்படுத்தப்படுகிறது. விபச்சாரத் தடைச் சட்டம் எந்த ஆணையேனும் குறிப்பாக்கித் தண்டனை தந்திருக்கிறதா? எது நிகழ்ந்தாலும் பெண்ணின் தூய்மையில் தான் கரும்புள்ளி குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறாள். இன்றைய ஆணாதிக்கம் எல்லாச் சட்டங்களையும் செல்லாக்காசுகளாக்கிவிட்டு, பெண்ணுக்கு உயிர் வாழும் நம்பிக்கையையே மாய்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சட்டங்கள் பெரும்பான்மை அடித்தள சமுதாயத்துக்கு எந்த வகையிலும் பயன்படப் போவதில்லை. வறுமையிலும், உழைப்புச் சுரண்டலிலும் அடிப்படைத் தேவைகளை விழுங்கும் மாயக் கவர்ச்சிகளிலும் அலைபாயும் சராசரி, அடிமட்டப்பெண்கள் உய்ய வேண்டுமானால் அறியாமை நீக்கும் கல்வி, பொருளாதார சுயச்சார்பு, தன்மான விழிப்புணர்வு பெறும் நோக்கில் பெண்கள் அமைப்புகள் செயல்பட வேண்டும்.
இலவசக் கல்வி போதிக்கும் அரசு நிறுவனங்கள், ஒருவேளை உணவும், பஸ்ஸில் பயணம் செய்யும் சலுகையும் அளிக்கின்றன. ஆனால் கல்விக்கூடங்கள் எழுத்தறிவின்மைகூட நீங்காத வகையில்தான் இயங்குகின்றன. பெரும்பான்மைப் பிஞ்சுகள் ஆறேழு வகுப்புகளிலேயே உதிர்ந்து குழந்தைத் தொழிலாளியாகின்றனர். பெண் வயதுக்கு வந்ததும், இங்கு அவளுக்கு ஒரே பாதுகாப்பு திருமணம் மட்டுமே! எனவே சட்டங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் பள்ளிக் கல்வியைப் பயனுடையதாக்க, கற்பித்தலை மேலும் தீவிரமாகவும் கூர்மையாகவும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கு நிதி ஒதுக்குவதோடு கடமை, முடிந்துவிடவில்லை. கற்பிப்பவர்களின் உண்மையான ஈடுபாடு வருங்கால சமுதாயத்தினருக்கு ஒரு புதிய அடித்தளத்தை நிறுவுவதாக அமைய வேண்டும். இவற்றுக்கும் மேல் பெண்கள் ஆணாதிக்கக் கூறுகளை இனங்கண்டு விழிப்புணர்வு பெறச் செயல்பட வேண்டும்.
‘பெண்ணே நீ,
ஜூன், 2002