உள்ளடக்கத்துக்குச் செல்

புதியதோர் உலகு செய்வோம்/புள்ளி ராஜா என்ன சொல்கிறார்?

விக்கிமூலம் இலிருந்து
18. புள்ளி ராஜா
என்ன சொல்கிறார்?

புள்ளி ராஜா புதிர் அவிழ்ந்திருக்கிறது.

புள்ளி ராஜா யார், திடுமென்று இவருக்கு ‘அது’ வருமா என்று ஏன் தொலைக்காட்சி வாயிலாகக் கேட்கிறார்கள்? இது விரைவில் வரப் போகும் 'சீரியல்’ விளம்பரம் என்று பல பெண்கள் ஆரூடம் சொன்னார்கள். கடைசியில் ‘என் அப்பாகுதிருக்குள் இல்லை’ என்ற மாதிரி புதிர் தெளிவாகிவிட்டது.

'எய்ட்ஸ்’ என்ற ஆட்கொல்லித் தேய்வு நோயைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வாசம் இது யாருக்கு விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது? தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருக்கும் கூன், கிழடு, அஞ்சும்பிஞ்சுமான குஞ்சுகள், 'இரண்டுங்கெட்டான்கள்’ எல்லாருக்கும் வெறும் கேள்வியாகக் கொக்கிப் போட்ட சுவாரசியம் விளக்கமான பின்னும் பிடிபடவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய இதே பாணியில்தான்அரசு குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

கருக்கலைப்பு, கருத்தரிக்காமலிருக்கும் வழிமுறைகள், பெண்ணுக்கான சாதனங்கள், அறுவைச் சிகிச்சை, ‘மாலாடி' போன்ற மாத்திரைகள் என்ற சொற்கள் மிகப் பரவலாக விளம்பரங்களில் வீசப்பட்டன. அந்தக் காலத்தில் வடநாட்டில் நான் ஒரு பேருந்தில் பயணம் செய்தபோது இடையில் தேநீருக்காகப் பேருந்து நின்றது. அங்கே மிகப் பெரிய விளம்பரத் தட்டி ஒன்று எல்லோருடைய கவனங்களையும் தடுத்து நிறுத்தியது.

ஓர் ஆண், ஒரு பெண் சிவப்பு முக்கோணம் (லூப் ரகியே! தாம்பத்ய ஸாக்கோ ஹானி நஹிஹை!) 'லூப் வைத்துக் கொள்ளுங்கள்! தாம்பத்திய சுகம் குறையாது’ என்பதுதான் வாசகம். ஒரு சிறு கிராமக் குழந்தை அதைப் பார்த்துவிட்டு (அரைகுறைப் படிப்பு) லூப் வேண்டும் என்று கேட்டான்! பிடிவாதம் பிடித்து அழுதான்!

மூடி வைத்திருக்கும் வரையிலும்தான் இரகசியம். ‘ஒழுக்கம்’ என்ற ஒரு கோட்டைப் பரிபாலிக்க, அந்த இரகசியங்கள் தேவைப்பட்டன. ஆண்-பெண் பாலியல் உணர்வுகள், ஒவ்வொரு இன மக்கள் வகுத்துக் கொண்ட கலாச்சார மரபுகள் சார்ந்து ஒழுக்கக் கட்டுப்பாடுகளால் பாதுகாக்கப்பட்டன. மேலைநாடுகளில் திருமண வயதில் ஒரு பெண் இருந்தால் அவள் பல இளைஞர்களுடன் பழக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. வயது வந்த பெண் தன்னோடொத்த இளைஞருடன் பழகாமல் இருந்தால் பெற்றோரே விருந்து, கேளிக்கை என்று ஏற்பாடு செய்வார்கள், கவலைப்படுவார்கள்.

ஆனால், நம் நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மதுவும், ஆண்-பெண் வயது வந்தபின் தனியாகப் பழகுவதும், முத்தமிடுவதும் தகாத செயல்கள். காதல், களவு, திமணம், கற்பு ஆகிய அனைத்துத் தனிமனித ஒழுக்கங்களும் சமுதாய ஒழுங்கோடு, நாகரிகத்தோடு தொடர்பு கொண்டவையாகப் பார்க்கப்படுகிறது; பார்க்கப்பட்டு வருகின்றன (இந்த மரபுகள்தாம் நேர்மை தவறும் மனிதர்களின் கட்டப்பஞ்சாயத்துக் கொடுமைகளாகப் பரிணமித்திருக்கின்றன எனலாம்.)

இப்போது 'புள்ளிராஜா' என்ன சொல்கிறார்? இந்த விளக்கக் காட்சி தொலைக்காட்சிகளில், பிள்ளைகள் பார்க்கக்கூடிய எல்லா நேரங்களிலும் ஒளிபரப்பாகின்றன. ‘புள்ளிராஜா' சாராயக்கடையில் குடிக்கிறார். 'குடிச்ச மப்பில். அதாவது மது அருந்திய வெறியில் பொம்பளக் கிட்டப் போனா'. என்று முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.

‘மது' இந்தக் கேட்டுக்குப் பிள்ளையார் சுழி.

‘பெண்' அடுத்தப் படி

இப்போது முதல் செய்தியாகிய மதுவைப் பற்றி யோசிக்கலாம்.

‘மதுப்' பழக்கம் ஒரு மனிதரை மெல்ல மெல்ல நலமழித்து, உற்றார், உறவினர், பெண்டு பிள்ளை எல்லோரும் வெறுக்க, வாழ்வையே சிதைத்து அழிக்கும் என்ற உண்மையை எல்லோரும் அறிவார்கள். மதுவின் தீமைகள் ஒன்றல்ல; இரண்டல்ல. ஒரு சமுதாயத்தின் பொருளாதார வளமையை ஆன்மீக வலிமையை, இந்தத் தீமை உறிஞ்சி விடுகிறது. எல்லாச் சமயங்களிலும் சான்றோரும், ஆன்றோரும் ‘மதுவருந்துதலைத் தீமை’ என்றே மனித குலத்துக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இந்தத் தீமை சினிமா, தொலைக்காட்சிகளில் குடிப்பதற்கான பிரச்சாரம்போல் மனித உழைப்பு, குடும்பம், பெண் பிள்ளைகள் என்று வாழ வைக்கவில்லை. சாராயமாகக் குடும்பத் தலைவரின் உழைப்பாளியின் உடலை அரித்து நடுத்தெருவில் புரள வைக்கிறது. இது இன்றைய நடப்பியல் உண்மை. ஆனால் இதெல்லாம் பார்ப்பவர் மனதில் படிவதில்லை.

சுதந்திரப் போராட்டத்தின் முதல் கட்டமாக, தலைவர்கள் மதுவிலக்கையே நெறிப்படுத்த முயன்றார்கள். 1937-ல் முதல் காங்கிரஸ் சட்டசபை ஆட்சிக்கு வந்தபோது இராஜாஜி சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கைக் கொண்டு வந்தார். அந்நாட்களில் பேராசிரியர் கல்கியின் விமோசனக்கதைகளும், இராஜாஜி அவர்களின் முனைப்பான பிரச்சாரங்களும் மதுவிலக்கையே மக்களின் பொருளாதார சுயச்சார்புக்கு முதல்படியாக வழிகாட்டின. அக்காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குடும்பம் என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி மதுவிலக்குப் பிரச்சாரத்துக்கே முன் வந்தார்கள். கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி எரிப்பு என்பவையே பெண்கள் பங்கெடுத்த ‘அத்துமீறல்'கள். வீராங்கனையாகத் திகழ்ந்த மணலூர் மணியம்மா, ஒடுக்கப்ப்டட மக்களின் சிறுவர்-சிறுமியருக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து தென்னை மரங்களில் கட்டிய கலயங்களைக் கூரிய கல் கொண்டு குறி தப்பாமல் அடித்து உடைக்கும் விளையாட்டில் ஈடுபடுத் தினார். ருக்மணி அம்மாளும் இன்னும் சில சகோதரிகளும் மரங்களில் யாரும் கள் கலயங்கள் கட்டக்கூடாதென்று இரவு பகலாகக் காவல் இருந்தார்களாம். ஓரிரவில் நாலைந்துபேர் கலயங்கள் கொண்டு வருவதைக் கண்ணுற்று எழுந்து தடுக்க முன்வந்தபோது மலசலங்கள் நிறைந்த சட்டியை அவர்கள் மீது கவிழ்த்துவிட்டு ஓடினார்களாம்.

மனிதர்கள் அனைவரிடமும் உள்ளுணர்வு என்ற மனசாட்சி இருக்கிறது. அது எப்போதும் அவர்களைத் தீயவழியில் செல்லாமல் விழிப்புணர்வுடன் பாதுகாக்கிறது. ஆனால், மது அறிவை மறைத்து மனசாட்சியைக் குருடாக்குகிறது. எனவேதான் தீய வழிகளில் துணியுமுன், மதுவை அருந்துகிறார்கள்.

சுதந்தரம் பெற்று, இருபத்தைந்தாண்டுகளுக்கு மது தீமை என்ற உணர்வு பாதுகாக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர், நடுத்தர வர்க்கம் ஆகியோருக்கு ‘மது' ஆகாது என்ற அக்கினி வளையம் இருந்தது. கதை எழுதுபவர்கள் நாயகனின் அறையில் ஒரு காலி மதுப்புட்டியை வைத்தாலே, அவன் ‘வில்லன்' என்ற குணச்சித்திரமாகி விடுவான். சினிமாக்களிலும் இந்த நெறி இருந்தது.

இப்போதோ தண்ணியடிப்பது என்ற சொற்றொடரின் நேர்ப்பொருள் பெண்ணுக்கு உரியதாக அவள் நாள்தோறும் 'பம்ப்' அடிக்கிறாள். ஆண் சம்பாதித்தாலும் சம்பாதிக்காவிட்டாலும் தண்ணியடிக்க எத்துணை அக்கிரமங்களும் செய்யலாம்.

இதையே 'புள்ளிராஜா' தெரிவிக்கிறார்.இந்நாட்களில் பள்ளி மாணவர்கள் தண்ணியடித்துவிட்டு வகுப்புகளுக்கு வருவது சாதாரண நடப்பாக இருக்கிறது. அண்மையில் ஓர் ஆசிரியர் இதைக் கண்டித்து காவல்துறையினரை அழைத்தது கண்டனம் செய்யப்பட்டது. இது பத்திரிகைச் செய்தி. பாலியல் வன்முறைகளுக்கும் தெருவோர பெண் சீண்டல்களுக்கும் மூலகாரணம் இதுவே.

ஆக புள்ளிராஜா, தண்ணியடிப்பதும், பொம்பள தேடிச் செல்வதும் தடுக்கப்படலாகாது. ஆனால் அவர் தம்மைக் காத்துக்கொள்ள ஒரு கவசம் அணிந்து கொள்ள வேண்டும். ஆம்; ஒவ்வொரு முறையும். இது (அ)நியாயம்!

இதிலிருந்து இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகளைப் பெண்களே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பெண்கள் பலிகடாவாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் தொண்ணுறு சதவிகிதம் இந்த ஆட்கொல்லி நோய்க்கான கிருமிகள் பெண்களிடத்தி லிருந்துதான் பரப்பப்படுவதாக புள்ளிராஜா அறிவிக் கிறாரா? தேசிய அளவில் இது எண்பது சதவிகிதம் என்றும், எழுபத்தெட்டு சதவிகிதம் பெண் வாணிபப் பாலுறவினால் தொற்றுகிறது என்றும் ஒரு கணக்கு தெரிவிக்கிறது.

ஆனால், பெண் வானுலகில் இருந்து வரம் வேண்டி எச்.ஐ.வி. கிருமிகளைப் பெற்றாளா? மஹாராஷ்டிர மாநிலத்தில், இத்தகைய வாணிபத்துக்குத் தள்ளி விடப்பட்ட பெண்களுக்குத் தன்னார்வக் குழுக்கள் அவனிடம் இருந்து இவளுக்கும், இவனிடம் இருந்து அவளுக்கும் கிருமிகள் பரவாமல் இருக்க ஆணுக்கான கவசங்கள் வழங்கிய செய்தியும் வெளியாயிற்று.

ஆனால், தண்ணியடித்த ‘மப்'பில் இவன் ‘கவசம்’ அணிய மறுக்கிறான். பாதுகாப்பில்லாத மூர்க்கவெறியை அவள் மீது செலுத்துகிறான். காசு அதிகம் தருவதாக ஆசை காட்டுவதாலும் பாதுகாப்பு பறி போகிறது. பெண்கள் இத்தொழிலுக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் கட்டாயத்துக்கே 'மது'தான் காரணம். இது இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் கண்ணிர்க் கதை.

குடும்பக்கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, அவள் உடலுக்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும்.அனைத்து மருந்து, மாத்திரை, தடுப்பு சாதனங்கள் எல்லாவற்றையும் பிரயோகிக்க, மூன்றாம் உலக நாடுகளின் பெண்கள் சோதனைச்சாலை எலிகளானார்கள்; முயல்களானார்கள்.

இப்போதோ அதே பாணியில் பெண்களின் மீதே பழி சுமத்தப்படுகிறது. இந்தப் 'புள்ளிராஜா' பிரச்சாரம், பெண்களின் இருத்தல் உரிமையிலேயே பாய்ச்சப்படும் அம்பு. ஆணுக்கு மேலும் மேலும் ஆதிக்க வெறியை நியாயப்படுத்தும் தந்திரம். ஆனால் பெண் இயற்கையின் பிரதிநிதி. அவளைப் பலிகடாவாக்குவது விபரீதமாக முடியும். எல்லா ஒழுக்க வரைகளையும் ஆண்தான் மீறுகிறான். ஆனால் பெண் பழி சுமக்கிறாள். இந்தக் கொடுமைக்கு விரைந்து முடிவு கட்ட வேண்டும்.


‘பெண்ணே நீ', நவம்பர் - 2003