உள்ளடக்கத்துக்குச் செல்

உரிமைப் பெண்/ராதா

விக்கிமூலம் இலிருந்து



ராதா

ழக்கம் போல இன்றும் மோதி விழுந்து ரெயிலுக்குள் ஏறினேன். நிற்பதற்கு இடம் கண்டுபிடிப்பதற்குள் காரமடை ஸ்டேஷனைவிட்டு ரெயில் நகர்ந்து விட்டது. அப்பொழுதுதான் அவளுடைய குரல் கணீரென்று ஒலித்து என்னைத் துாக்கி வாரிப்போட்டு ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. ஆமாம், அது அவளுடைய குரலேதான். அதில் சந்தேகமே இல்லை. நான் ஆவலோடு சுற்றிலும் பார்த்தேன். ராதா பாடிக்கொண்டு ஜன நெருக்கத்திற்கிடையிலே ஒரு கோடியிலே நின்றிருந்தாள். அவள் கையை ஒரு தள்ளாத கிழவன் பிடித்துக்கொண்டிருந்தான்.

நான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு, பலருடைய வசவு வார்த்தைகளையும் பொருட்படுத்தாமல் அவளிருக்கும் இடத்தை நோக்கி நடந்தேன். அவள் முகத்தைப் பார்த்ததும் என்னை யறியாமல் ‘ராதா’ என்று வாய் விட்டுக் கத்திவிட்டேன். வருஷக் கணக்காகப் பார்க்காமல் திடீரென்று அவளை அந்த நிலைமையில் கண்ணுற்றால் யார்தான் கத்தமாட்டார்கள் ?

நான் முதல் முதலில் அவளைப் பார்த்தபோது அவள் குழந்தையாக இருந்தாள். சிரித்த முகம், இளமான் பார்வை, துள்ளிக் குதிக்கும் நடை, பிச்சை எடுப்பதாக உணர்ச்சியே ஏற்படாத பச்சிளம் பருவம்.

அந்தக் காலத்தில் அவள் பிச்சை கேட்பதே ஒரு தனிமாதிரி, “ஐயா-” என்று கையை நீட்டுவாள். அவள் குரலில் கெஞ்சுகின்ற பாவனையே இருக்காது. பிரயாணி  களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பாள். குழந்தைத் துடிப்பு அவள் நடையிலும் பேச்சிலும் தென்படும். கொடுத்ததை அநாயாசமாக வாங்கிக்கொண்டு தான் அழைத்து வந்த குருட்டுப் பையனிடம் போவாள். அந்தப் பையன் அவள் திரும்பும் வரை ஒரிடத்தில் நின்று பாடிக் கொண்டிருப்பான்.

இப்படி அந்தச் சிறுமியை ஒரு நாள் போலப் பல நாள் ரெயிலில் கண்டிருக்கிறேன். நான் இருப்பது காரமடையில்; எனக்கு உத்தியோகமோ கோயமுத்துாரில். அதனால் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை ரெயிலில் கோவை செல்வதும், மாலை ரெயிலில் காரமடை திரும்புவதும் எனது வாழ்க்கை விதியாகப் போய்விட்டது. எனவே அப் பிச்சைக்காரச் சிறுமியை நான் அடிக்கடி பார்க்க முடிந்தது.

சில நாட்களுக்குள்ளாகவே எனக்கு அவளிடம் என்னை அறியாமல் ஒரு வாஞ்சை பிறக்கலாயிற்று. நான் அவளைக் காணும்போதெல்லாம் புன்முறுவல் செய்வேன்; காசும் கொடுப்பேனென்று சொல்லத் தேவையில்லை.அதனால் நாளடைவில் அவள் என்னிடம் தாராளமாகப் பேசிப் பழகலானாள்.

கூட வருகின்ற அந்தக் குருட்டுப் பையன் யாரென்று ஒரு நாள் இவளைக் கேட்டேன்.

“அவன் எனக்கு அண்ணன்-மாரியாத்தா வந்து அவனுக்கு ரண்டு கண்ணும் போய்ட்டுது” என்றாள்.

“உங்களுக்குச் சோறு போட ஒருத்தரும் இல்லையா? ஏன் பிச்சை எடுக்கிறீர்கள் ?” “எங்கம்மா செத்துப் போய்ட்டாள்; எங்கப்பா இருக்குறாரு. அவருக்கு வேலை செய்ய முடியாது.”

“ஏன்? வயதாய்விட்டதா?”

“ஆமாம்-இத்தனை நாளாக் கூலிவேலை செய்து சம்பாதிச்சார்; இப்போ கையிலாகாது சும்மா இருக்கிறார்."

இப்படிச் சொல்லிக்கொண்டே அவள் போய் விட்டாள். அதிகம் பேசிக்கொண்டிருந்தால் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் எல்லோரிடமும் காசு கேட்க முடியுமா?

ஆனால் நான் அவளைக் காணும் போதெல்லாம் இப்படிச் சில வார்த்தைகளாவது பேசாமல் இருப்பதில்லை. நாங்கள் பேசும்போது அந்தப் பையன் குரல் கேட்கும் திசைப் பக்கமாகக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பான்.

அந்தச் சிறுமிக்கு ராதா என்று பெயரிட்டதும் நான் தான். ஒரு நாள் அவளும், நேத்திரமற்ற அவள் அண்ணனும் துடியலூர் ஸ்டேஷனில் நான் இருந்த ரெயில் வண்டிக்குள் ஏறினார்கள். ரெயில் நகர ஆரம்பித்ததும் அந்தப் பையன், “கண்ணே யிழந்தவன் நீயாே நானோ?” என்று சோகங் கலந்த குரலில் பாட ஆாம்பித்தான். சிந்தாமணி என்ற பேசும் படம் மாதக் கணக்கில் காண்பிக்கப்பட்ட காலம் அது. அன்று நான் வேடிக்கையாக அச் சிறுமியை ராதாவென்று கூப்பிட்டேன். அது முதல் அந்தப் பெயராலேயே அவளை அழைப்பது எனக்கு சகஜமாய்விட்டது.

அவளுக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் என்னவோ நான் கேட்டுக்கொள்ளவே இல்லை. ராதாஎன்ற பெயர் எனக்கும் அவளுக்கும் திருப்தியளித்தது.  அதையே நிலைக்கச் செய்துவிட்டோம். கொஞ்ச நாட்களில் அந்தக் குருட்டுப் பையனுங்கூட அவளை ராதா என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டான்.

இப்படி நான்கு வருஷங்கள் சென்று விட்டன. ரெயில் வண்டி எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகப் போய்விட்டது. காலையிலும் மாலையிலும் காப்பி யில்லாவிட்டால் எப்படியோ அதுபோல எனக்கு இந்த ரெயில் பிரயாணம் இல்லாவிட்டால் இப்பொழுது என்னவோ மாதிரி இருக்கிறது. மேலும் ராதாவைக் கண்டு பேசுவதும் நான் தினமும் ஆவலோடு எதிர் பார்க்கும் ஒரு செய்கையாய் மாறிவிட்டது.

ஆனால் ராதா இப்பொழுது முன்போலத் தாராளமாக வந்து காசு கேட்பதில்லை. அவள் அந்தக் குருட்டுப் பையன் கையைப் பிடித்துக்கொண்டு வருவாள். அவன் தான் எல்லோரிடமும் காசுக்காகக் கையை நீட்டுவான். அவன் ஒரு குட்டிப் பிரசங்கம் ஒன்றையும் கற்றுக்கொண்டிருக்கிறான். “ஐயா, எனக்கு மாரியாத்தா வந்து ரெண்டு கண்ணும் போய்விட்டது. என்னால் கூலி செய்து பிழைக்க முடியாது. பகவான் என்னை இப்படி என்ன பாவத்திற்காகவோ செய்துவிட்டார். ஆகையால் தாய்மார்களே, தகப்பன்மார்களே, இந்த ஏழைக் கண்ணில்லாத கபோதிக்குத் தருமம் செய்யவேணும். உங்கள் வாய்க்கு வெற்றிலை என் வயிற்றுக்குச் சோறு” என்று சொல்லிவிட்டுக் கும்பிடுவான். மக்கள் மனமிரங்கிக் காசு கொடுப்பார்கள்.

எனக்கு மட்டும் ராதா கையில் காசு கொடுப்பதில் தான் திருப்தி. எவ்வளவு சங்கோஜப்பட்டாலும் என்னிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் அவளும் போவாள்.  இப்படி ஒரு வருஷம் கழித்துவிட்டது. மகா பயங்கரமான யுத்தம் உலகத்தைப் பிடிக்கத் தொடங்கிற்று. ரெயில்கள் பல நிறுத்தப்பட்டன. இப்பொழுது கோவை செல்லுவதற்குப் பகலில் ஒரே ரெயில்தான் உண்டு. அதனால் அதில் கூட்டம் சொல்லி முடியாது. பிச்சைக்காரர்களும் கூட்டத்திற்கு ஏற்றவாறு பெருகி விட்டார்கள். சில சமயங்களில் இரண்டு மூன்று பேர் ஒரே வண்டியில் ஏறிவிடுவார்கள். தடிப் பையன் ஒருவன் தன் வயிற்றிலேயே தாளம் போட்டுக்கொண்டு பிச்சை வாங்கத் தோன்றியிருக்கிறான். அவனைக் கண்டால் சிலர், “ஏண்டா, ஆள் வாட்டசாட்டமாய் இருக்கிறாய்; வேலை செய்து சம்பாதிக்கிறதற்கென்ன?” என்று விரட்டுவார்கள். இப்படி விாட்டுவதில் நானும் முக்கியப் பங்கெடுத்துக்கொண்டேன். “என்ன ஸார், இவனுக்கு என்ன கேடு? செக்குலக்கை மாதிரி இருக்கிறான். இவனுக்கெல்லாம் காசு கொடுப்பது தர்மமே ஆகாது. ஏதோ கூன் குருடாக இருந்தால் உதவி செய்வது நியாயம்” என்று எல்லோருக்கும் படும்படி பிரசங்கமும் செய்து விடுவேன்.

ஒரு நாள் ராதாவும் அவள் அண்ணனும் ஏறிய சமயத்திலேயே இந்த வயிற்றுத் தாளக்காரனும் நானிருந்த வண்டியில் நுழைந்துவிட்டான். அன்றைக்கு எனது பிரசங்கத்தின் பயனாக அந்தப் பயலுக்கு தம்படி கூடக் கிடைக்கவில்லை. ராதாவுக்கு ஒவ்வொருவரும் காலணாவாவது கொடுத்தார்கள். எனக்கு அன்று வெகு சந்தோஷம், சாயங்காலம் வரையில் சீழ்க்கை அடித்துக் கொண்டே உற்சாகமாக வேலை செய்தேன்.

பிறகு சில நாட்களுக்கு ராதாவைக் காண முடியவில்லை. ஏன் அவள் வருவதில்லை என்று எனக்குள்ளே ஒரு ஏக்கம் குடி புகலாயிற்று. திடீரென்று ஒரு நாள் அவள் தனியாக வந்தாள். ஆவலோடு அவளிடம் பேசினேன். “உன் அண்ணன் எங்கே?” என்று விசாரித்தேன். அவன் காலராக் கண்டு இறந்து விட்டதாகச் சொன்னாள். அவள் கண்களிலே நீர் ததும்பிற்று.

சில நாட்களில் மறுபடியும் அவள் மறைந்து விட்டாள். எங்கு போனாளோ என்ன நிலைமையில் இருக்கிறாளோ ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய இனிய குரல் மட்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

மேலும் ஒரு மூன்று வருஷங்கள் இப்படி நழுவி விட்டன. இன்று திடீரென்று எதிர்பாராத வகையில் அவள் பாட்டைக் கேட்கவே எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் அவளருகே செல்ல நான் எல்லோரையும் தள்ளிக் கொண்டு சென்றேன். என் குரலை அவள் அறிந்து கொண்டாள்.

“ஆமாம், நீங்க ராதா, ராதா என்று கூப்பிடுவீர்களே அந்த ராதா நான் தான்” என்று கலக்கத்தோடு கூறினாள்.

அவளுடைய அழகான கண்களிலே இப்பொழுது ஒளியில்லை. அதே முகம்-இல்லை, இப்பொழுது அந்த முகத்தில் ஜீவகலையே இல்லை. அது வெறும் பொம்மையின் முகம்போல உணர்ச்சியற்றுக் காணப்பட்டது. என் உள்ளத்திலே பலவகையான எண்ணங்கள் எழுந்து குமுறின.

“ராதா, உன் கண்கள் ஏன் இப்படியாய் விட்டன?” என்று குழறிக் குழறிக் கேட்டேன்.

அவள் பதில் பேசாமல் என்னவோ யோசித்துக் கொண்டிருந்தாள். ஒளியிழந்த கண்களிலிருந்து முத்துப்  போல இாண்டு துளிகள் பிதுங்கின. பேச்சை மாற்றலாமென்று நினைத்து நான், “யார் உன்னோடு வந்திருக்கும் கிழவன்? அவனுக்கு வயது ரொம்ப ஆகியிருக்கும் போல் இருக்கிறதே?” என்று இப்படிப் பல கேள்விகள் கேட்டேன்.

ஜன நெருக்கத்திலே நாங்கள் நின்று பேசிக்கொண்டிருப்பது பலருக்குப் பெரிய சிரமமாகத் தோன்றியது. அவர்கள் சத்தம்போட ஆரம்பித்தார்கள்.

“கோயமுத்துார் போய் வேண்டுமானால் பேசிக் கொள்ளலாம்” என்று அவள் நகர்ந்து விட்டாள். நான் அப்படியே ஸ்தம்பித்து நின்றுகொண்டிருந்தேன். வடக்குக் கோயமுத்துார் ஸ்டேஷனில் வந்து ஏறிய ஒரு பிச்சைக்காரியை யாரோ அதட்டும் சப்தம் மட்டும் என் காதில் குரூரமாக வந்து புகுந்தது.

“ஏன் இப்படிப் பிச்சை எடுத்துக்கொண்டு திாிகிறாய்? உனக்கென்ன கால் இல்லையா, கை இல்லையா? நாலு விட்டிலே பத்துத் தேச்சுக் கொடுத்தாலும் வயிறு வளர்க்கலாமே?” என்றார் அவர். அந்தப் பிச்சைக்காரி மற்றவர்களைப் போலப் பேசாமலிருந்து விடவில்லை. நல்ல வாயாடி போலிருக்கிறது. “ஏய்யா, இஷ்டமிருந்தால் ஒரு தம்பிடி கொடுங்கோ, இல்லாவிட்டால் பேசாம இருங்கோ, உங்களை யோசனை கேட்கவா நான் வந்திருக்கிறேன்?” என்று சட்டென்று பதில் கூறிவிட்டாள்.

இந்த வார்த்தைகளைச் சிந்தித்துக் கொண்டேயிருந்தேன். ரெயிலும் கோவை ஜங்ஷனுக்கு வந்து நின்றது. நான் அவசரம் அவசரமாகக் கீழே இறங்கி ராதாவைத் தேடிக்கொண்டு போனேன்.  முதலிலேயே கண் போனதைப்பற்றிக் கேட்க எனக்கு ஆவலாக இருந்தாலும் துணிவு உண்டாகவில்லை. ராகாவுக்கு அதிக விசனத்தைக் கொடுக்கக்கூடாது என்று எண்ணிக்கொண்டு மெதுவாக, “இந்தத் தள்ளாத கிழவர் யார்?” என்று கேட்டேன்.

“இவர்தான் என் தகப்பனார். முன்பெல்லாம் இவர் குடிசையைவிட்டு வெளியிலேயே வரமாட்டார். சக்தியிருக்கும் வரையில் கூவி ஜீவனம் செய்து எங்களைக் காப்பாற்றினார். பிறகு சக்தியில்லாமல் போகவே குடிசையிலேயே இருந்தார். பிச்சை எடுப்பது ரொம்பக் கேவலம் என்று அதை வெறுத்து வந்தார். ஆனால் என்ன செய்வது? என் அண்ணனும் இறந்து போனான். பிறகு வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது செய்ய வேண்டுமே?”

“ராதா, உனக்கு....ம்...உன்னுடைய கண் எப்படி இப்படியாச்சு?”

“கண்ணா........ அது ஒரு சிப்பாய் எனக்குச் செய்த உபகாரம்.”

“உபகாரமா!”

“ஆமாம். கண்ணிருந்தபோது எனக்கு ஒரு காலணா தருமம் செய்வதென்றாலும் ஜனங்களுக்கு அவ்வளவு பிரியமாயிருக்கவில்லை. இப்போ எல்லோரும் பாவம் குருடி என்று இாக்கப்பட்டுக் காசு கொடுக்கிறார்கள். அதனால் கண்ணைப் போக்கியது உபகாரந்தானே ? பிச்சைக்காரிக்குக் கண் இருந்து என்ன பிரயோசனம்?”

"ஐயையோ, அப்படி நினைக்கலாமா? கண் இருந்தால் ஏதாவது வேலை செய்து பிழைக்கலாமே?” "ஆமாம், எல்லோரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். ஆனால் வேலைக்குப் போய்ப் பார்த்தாலல்லவா அந்தக் கஷ்டம் தெரியும்? அதிலும் சிறு வயது முதற்கொண்டு பிச்சை வாங்கி வயிறு வளர்த்துக்கொண்டு யதேச்சையாகக் திரிந்தவர்களுக்கு அதைப் போலக் கஷ்டமானது வேரறொன்றுமே இல்லை. நானும் வேலை செய்து ஜீவனம் பண்ணலாமென்றுதான் முயற்சி செய்தேன். பணக்காார் என்ன வைதாலும் பேசினாலும் சரி என்று பொறுத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்தேன். சொற்ப சம்பளத்திற்காக அவர்கள் வேலைக்காார்களைச் சக்கையாய்ப் பிழிவது எனக்கு வெறுப்பாக இருந்தது. இருந்தாலும் அதைச் சகித்துக்கொண்டுதான் காலந் தள்ள நினைத்தேன். ஆனால் திக்கற்றவர்களுக்கும் மானம் உண்டு. இந்த உலகத்திலே என் போன்றவர்கள் மானத்தோடு வாழவே முடியாதுபோல் இருக்கிறது. நானும் இந்த மூன்று வருஷங்களாகவே என்ன என்னமோ வேலை செய்து பார்த்துவிட்டேன். எங்கே போனாலும் என்னை இந்த மனிதர்கள் சுலபமான பொருளாக நினைத்தார்கள். குரல் நன்றாயிருப்பதால் சினிமாவில் சேரலாம் என்று சிலர் சொன்னர்கள். அங்கேயுள்ள வாழ்க்கை மகா கேவலமாக எனக்குக் தெரிந்தது. அதனால் அதையும் விட்டு விட்டேன். எனக்கு இந்த உலகத்திலே வாழவேண்டுமென்ற ஆசையே அற்றுப்போய்விட்டது. என் தகப்பனார் தமது தள்ளாக காலத்தில் கஞ்சியில்லாது சாகக் கூடாது என்ற ஒரே நோக்கத்தால்தான் இப்பொழுது இந்த உயிரை வைத்துக்கொண்டிருக்கிறேன்.”

“மறுபடியும் இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய்?” “பிச்சை எடுப்பதுதான் எனக்கு மேல் என்று தோன்றுகிறது. கிடைத்ததைக்கொண்டு சுயேச்சையாகக் காலங் தள்ளலாம். ஒருவருடைய பேச்சுக்கும் இஷ்டத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை.”

வாழ்க்கையில் அடைந்த கஷ்டங்களாலும், ஏமாற்றங்களாலும் அவள் இவ்வாறு பேசுகிறாள் என்பதை நான் உணர்ந்தேன். பிறகு மெதுவாக, “உன் கண்களை ஏன் அந்தச் சிப்பாய் போக்கினான்?” என்று கேட்டேன். அவள் பதிற் சொல்லச் சிறிது தயங்கினாள். என் குரலில் நடுக்கமும் சோகமும் இருப்பதை அவள் கண்டு கொண்டாள் போலிருக்கிறது. ஆனால் சற்று யோசித்துவிட்டு மறுமொழி சொல்லலானாள்.

“அவன் என்னைப் பலவந்தப்படுத்த ஆரம்பித்தான். கைத்துப்பாக்கியை நீட்டிப் பயங்காட்டினான். நான் அவனேடு போராடவேண்டியதாயிற்று. குடிவெறியில் இருந்தமையால் அவனை என்னால் ஒருவாறு சமாளிக்க முடிந்தது. ஆனால் நான் திமிறித் தப்பிக்க முயலும்போது அவன் கையில் இருந்த துப்பாக்கி வெடித்துவிட்டது. குண்டு போடாத தோட்டாவானதால் உயிர் போகவில்லை என்று ஆஸ்பத்திரி டாக்டர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் என் கண்கள் போய்விட்டன.”

இதைக் கேட்கும்போது என் தலை சுற்ற ஆரம்பித்தது. உள்ளத்தை யாரோ இறுக்கிப் பிழிவதுபோல இருந்தது. அப்படியே துாண் போல நின்று கொண்டிருந்தேன். ராதா மேலும் பேசினாளோ என்னவோ, என் காதில் ஒன்றும் விழவில்லை. நான் உணர்வற்றுச் சுற்றிலும் பார்க்கும்போது அவளைக் காணோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உரிமைப்_பெண்/ராதா&oldid=1535453" இலிருந்து மீள்விக்கப்பட்டது