உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழியக்கம்

அறிவிப்புப் பலகையெல்லாம்
    அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே
        அன்றி, அச்சொல்
குறைவற்ற தொடராகக்
    குற்றமற்ற சொல்லாக
        அமையு மாயின்
மறுவற்றுத் திகழாளோ
    செந்தமிழ்த்தாய்? தமிழ்மக்கள்
        மகிழ்ந்தி டாரோ?
குறியுற்ற மறவர்களே!
    இப்பணியை முடிப்பதற்கோர்
        கூட்டம் வேண்டும். 24

பேச்சாலும் எழுத்தாலும்
   பாட்டாலும் கூத்தாலும்
       பிறர் உவக்க
ஓச்சுகவே மணிமுரசு!
   வீதியெல்லாம் வரிசையுற
       உலவா நிற்பீர்!
ஏச்சாலும் எதிர்ப்பாலும்
   வருகின்ற இன்னலுக்குள்
       இன்ப வெள்ளம்
பாய்ச்சாதோ பொதுத்தொண்டு?
    பைந்தமிழ்க்குச் செயும்தொண்டு?
        பருக வாரீர் 25