௯. புலவர் (1)
தமிழ்ப் புலவர் ஒன்றுபடும்
நன்னாளே தமிழர்க்குப்
பொன்னா ளாகும்!
தமிழ்ப் பெருநூல் ஒன்றேனும்
ஒற்றுமையைத் தடைசெய்யக்
கண்ட துண்டோ ?
தமிழ்ப்புலவர் தமக்குள்ளே
மாறுபட்ட தன்மையினால்
இந்நாள் மட்டும்
தமிழ்ப்பெருநா டடைந்துள்ள
தீமையினைத் தமிழறிஞர்
அறிகி லாரோ? 41
ஒல்காதபெரும் புகழ்த் தொல்
காப்பியமும், நன்னூலும்
தமிழர்க் கெல்லாம்
நல்கரிய நன்மை யெலாம்
நல்கின என் றால்நாமும்
நன்றி சொல்வோம்,
செல்பலநூற் றாண்டுசெல
அவ்விருநூல் திருவடியில்
புதிய நூற்கள்
பல்காவேல் இருநூற்கும்
பழியே! நம் புலவர்க்கும்
பழியே யன்றோ? 42
தனித்தியங்கத் தக்கதெனத்
தமிழ்பற்றித் தமிழ்ப்புலவர்
சாற்று கின்றார்
இனித்திடும் அவ் விருநூலில்
வடமொழிஏ ன்? வடஎழுத்துக்
கொழுங்கு தான் ஏன்?
தனித் தமிழில் இந்நாட்டுத்
தக்கபுதுக் காப்பியம், நன்
னூல், இயற்ற
நினைப்பாரேல் நம்புலவர்
நில வாவோ ஆயிரம் நூல்
தமிழ கத்தே. 43
2