இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
தமிழியக்கம்
முதுமைபெறு சமயமெனும்
களர்நிலத்தில் நட்டதமிழ்ப்
பெருநூல் எல்லாம்
இதுவரைக்கும் என்னபயன்
தந்ததென எண்ணுகையில்
நான்கு கோடிப்
பொதுவான தமிழரிலே
பொன்னான தமிழ்வெறுத்தார்
பெரும்பா லோராம்!
புதுநூற்கள் புதுக் கருத்தால்
பொது வகையால் தரவேண்டும்
புலவரெல்லாம். 44
சோற்றுக் கென் றொருபுலவர்
தமிழ் எதிர்ப்பார் அடிவீழ்வார்!
தொகையாம் செல்வப்
பேற்றுக் கென் றொருபுலவர்
சாஸ்திரமும் தமிழ் என்றே
பேசி நிற்பார்!
நேற்றுச்சென் றார்நெறியே
நாம் செல்வோம் என ஒருவர்
நிகழ்த்தா நிற்பார்!
காற்றிற்போம் பதராகக்
காட்சியளிக் கின்றார்கள்
புலவர் சில்லோர்! 45