௧௧. குடும்பத்தார் !
அன்னைதந்த பால்ஒழுகும்
குழந்தைவாய் தேன் ஒழுக
அம்மா என்று
சொன்னதுவும் தமிழன்றோ!
அக்குழந்தை செவியினிலே
தோய்ந்த தான
பொன்மொழியும் தமிழன்றோ!
புதிதுபுதி தாய்க்கண்ட
பொருளி னோடு
மின்னியதும் தமிழன்றோ!
விளையாட்டுக் கிளிப்பேச்சும்
தமிழே யன்றோ! 51
வானத்து வெண்ணிலவும்
வையத்தின் ஓவியமும்
தரும் வியப்பைத்
தேனொக்கப் பொழிந்ததுவும்
தமிழன்றோ! தெருவிலூறு
மக்கள் தந்த
ஊனுக்குள் உணர்வேயும்
தமிழன்றோ! வெளியேயும்
உள்ளத் துள்ளும்
தான்நந்தும் அனைத்துமே
காட்சிதரும் வாயிலெலாம்
தமிழே யன்றோ! 52
திருமிக்க தமிழகத்தின்
குடும்பத்தீர்! இல்லறத்தீர்!
செந்த மிழ்க்கே
வருமிக்க தீமையினை
எதிர்த்திடுவீர் நெஞ்சாலும்
வாய்மெய் யாலும்!
பொருள்மிக்க தமிழ்மொழிக்குப்
புரிந்திடுவீர் நற்றொண்டு;
புரியீ ராயின்,
இருள்மிக்க தாகிவிடும்
தமிழ்நாடும் தமிழர்களின்
இனிய வாழ்வும்! 53