௨௪. மற்றும் பலர்
அச்சகத்துத் தமிழர்க்கோ
அருந்தமிழில் அன்பிருந்தால்
அச்சி யற்றும்
எச்சிறிய அறிக்கையிலும்
நூற்களிலும், எதிர்மொழியை
உடையவர் நீக்
கச்சொல்ல லாமன்றோ?
எண்எல்லாம் தமிழினிலே
உண்டோ என்றால்
மெச்சுகின்ற ஆங்கில எண்
அல்லாது வேறில்லை
என்கின் றாரே! 116
கலைச் சொல்லாக் கத்தாரே
கல்வியினால் நீர்பெற்ற
அறிவை யெல்லாம்
தலைச்சரக்காம் தமிழ்ச்சரக்கைத்
தலைகவிழ வைப்பதற்கோ
விற்கின் றீர்கள்?
மலைச்சறுக்கில் இருக்கின்றீர்
மாத்தமிழர் கண்திறந்து
வாழ்வுக் கெல்லாம்
நிலைச்சரக்கைக் கண்டுகொண்டார்
நெடுநாளின் விளையாட்டை
நிறுத்த வேண்டும். 117
அரசினரும் பெரியநிலை
அடைந்தவரும் அறிந்திடுக!
மக்கள் நெஞ்சில்
முரசிருந்து முழங்கிற்றுத்
தமிழ்வாழ்க! தமிழ்வெல்க!
என்றே முன்னாள்
அரசிருந்த தமிழன்னை
ஆட்சியிலே சூழ்ச்சிசெயும்
ஆட்கள் யாரும்
எரிசருகு! தமிழரிடை
எழுச்சியுறும் தமிழார்வம்
கொழுத்த தீ! தீ!! 118