ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்
தனபாலச் செட்டியார்
கம்பெனி
வாழ்க்கை
தனபாலச் செட்டியார் குறிப்பேடு
7—1—40
அ.மு.க. வரவு வட்டி வகைக்கு | 648 | 6 | 0 | ||||
கடை வாடகைக்காக காளிங்க | |||||||
நாயுடு வரவு | 68 | 0 | 0 | ||||
வண்டிச் சத்தம் | 0 | 6 | 0 | ||||
குமாஸ்தா குமரன் பற்று | 5 | 0 | 0 | ||||
வீட்டுக்கு மருந்துச் செலவு | 22 | 0 | 0 | ||||
பஞ்சாமிருத அபிஷேகத்துக்கு | |||||||
லோகாமிர்த குருக்கள் பற்று | 75 | 0 | 0 | ||||
வக்கீல் சுந்தரம் ஐயர் பற்று | 32 | 0 | 0 |
காவல்காரக் கந்தன் பற்று | 2 | 8 | 0 | ||||
ஆரஞ்சுப்பழம் | 1 | 8 | 0 | ||||
அம்பிகா ஓட்டல் செலவு | 2 | 8 | 0 | ||||
—— | —— | —— | |||||
வரவு மொத்தம் | 716 | 6 | 0 | ||||
செலவு | 140 | 14 | 0 | ||||
—— | —— | —— | |||||
இருப்பு | 575 | 8 | 0 |
தனபாலச் செட்டியார், வட்டிக்கு பணம் தருபவர், பல வீடுகளை வாடைகைக்கு விட்டு அதனால் வருமானம் பெறுபவர். அவருடைய குறிப்பேட்டிலே ஒருநாள் தகவல் தந்திருக்கிறது மேலே!
குமாஸ்தா குமரப்பன் குறிப்பு
8--1--40
செட்டியார் வரவு | 5 | 0 | 0 | ||||
அரிசி கடைக்காரனுக்கு | 1 | 8 | 0 | ||||
விறகுக் கடைக்கு | 0 | 6 | 0 | ||||
காய்கறி | 0 | 2 | 0 | ||||
கோயில் செலவு அர்ச்சனை உட்பட | 0 | 4 | 0 | ||||
சினிமா | 0 | 8 | 0 | ||||
தண்டல் செலுத்தியது | 2 | 0 | 0 | ||||
குழந்தைக்கு ரிப்பன், சோப் | 0 | 4 | 0 |
வரவும் செலவும் இங்கே நேராகி விட்டது!
கந்தன் குறிப்பு
செட்டியார் வரவு | 2 | 8 | 0 | ||||
சாராயக்கடை | 0 | 14 | 0 | ||||
நாஸ்தா | 0 | 2 | 0 |
வீட்டுக்கு | 1 | 0 | 0 | ||||
ஈட்டுக்காரன் | 0 | 8 | 0 |
இங்கேயும் வரவு செலவு நேர்!
குப்பி குறிப்பு
அவர் தந்தது | 1 | 0 | 0 | ||||
அரிசி | 0 | 8 | 0 | ||||
கருவாடு | 0 | 1 | 0 | ||||
மிளகாய் | 0 | 2 | 0 | ||||
எண்ணெய் | 0 | 2 | 0 | ||||
உப்பு | 0 | 1 | 0 | ||||
பூஜாரிக்கு | 0 | 2 | 0 |
இங்கேயும் கணக்கு நேர்!
லோகாமிர்த ஐயர் குறிப்பு
செட்டியார் வரவு | 75 | 0 | 0 | ||||
பழக்கடைக்காரனுக்கு | 15 | 0 | 0 | ||||
சாமாவுக்கு | 5 | 0 | 0 | ||||
பஞ்சாமிர்த பிரசாதம் தந்த வகையில் சு, ப, சு வரவு: |
6 | 0 | 0 | ||||
சேட்சிமனவால் | 3 | 0 | 0 | ||||
முத்து முதலி | 7 | 0 | 0 | ||||
நாகலிங்க நாயுடு | 4 | 0 | 0 | ||||
—— | —— | —— | |||||
வரவு | 95 | 0 | 0 | ||||
செலவு | 20 | 0 | 0 | ||||
—— | —— | —— | |||||
இருப்பு | 75 | 0 | 0 |
பங்கஜவல்லி கணக்கு
ஐயர் வரவு | 75 | 0 | 0 | ||||
பம்பாய் சிலக்சேலை | 35 | 0 | 0 | ||||
ஆர்கண்டி ஜாக்கட் | 6 | 0 | 0 | ||||
ஜானகிக்குப் பட்டுப்பாவாடை | 12 | 0 | 0 | ||||
குட்டிக்கூரா சோப், பவுடர், ஜவ்வாது, ரிப்பன் |
5 | 0 | 0 | ||||
சிந்தாமணி செலவு | 2 | 8 | 0 | ||||
பெங்களூர் காய்கறி | 2 | 0 | 0 | ||||
வரவு | 75 | 0 | 0 | ||||
செலவு | 62 | 8 | 0 | ||||
—— | —— | —— | |||||
இருப்பு | 12 | 8 | 0 |
இங்கே, கணக்கு நேராகவில்லை!
செட்டியார் கணக்கு காலிகோ பைண்டு நோட்புத்தசத்திலே குமஸ்தாவால் எழுதப்பட்டது. குமாஸ்தா குமரப்பன் தன் குறிப்பைப் பாக்கட் சைஸ் டைரியில்
குறித்துக்கொண்டான். லோகாமிர்த ஐயர், கும்பாபிஷேக விளம்பரக் காகிதங்களைக் கொண்டு, குமாரிகோகிலம் அழகாகத் தைத்துக்கொடுத்த நோட்டுப் புத்தகத்திலே விவரம் எழுதி அதைப் பாகவதத்திலே பத்திரமாக அடக்கம் செய்தார்! பங்சுஜவல்லியின் கணக்கு, சினிமா விளம்பரத்தாளின்
பின்புறத்திலே குறிக்கப்பட்டது. கந்தனுக்கும், குப்பிக்கும், ஏடு ஏது எழுத!
அவன் வீடுவந்தான் ஒரு ரூபாயைத் தந்தான்.
"என்னா இது? எழவாப் போச்சு, ஒத்தே ரூபாயைக் குடுத்தா, எதுக்குன்னு ஆகும்?""ஒத்தெ ரூபாயா? ஒங்கப்பன் நோட்டு நோட்டா நீட்டறானா? போடி, இந்தப் பணத்தை வாங்க அந்தப் பயகிட்ட நான் பல்லைக் காட்டினது உனக்கென்னா தெரியும்?"
"அப்பாடுணயா சொல்லுங்க? ஒத்தே ரூபாதானா கொடுத்தார்?"
"ஆமாண்டின்னா......."
"தெரியுதே லட்சணம்! சொல்லுவானேன்? நீங்க நின்ன நிலையிலேயே ஆடறது சொல்லுதேன்னே! ஐஞ்சு ரூபா வாங்கி அனியாயமா குடிச்சுப்போட்டு,என் அடிவயித்திலே நெருப்பைப் போடறிங்க."
"சிச்சீ! ஐஞ்சுமில்லே பத்துமில்லை. ரெண்டரை ரூபா கொடுத்தாரு"
"மிச்சம் எங்கே? என்னாங்க அனியாயம், ஒண்ணரை ரூபாய்க்கா குடிச்சித் தொலைக்கணும்??"
"செ, கழுதெ! எவண்டி ஒண்ணரைக்கும் ரெண்டரைக்கும் குடிப்பான். ஒங்க அண்ணனா ஈட்டுக்காரன்?"
"ஈட்டுக்காரனுக்குக் கடனைக் கொடுத்திட்டிங்களா?"
"விடுவானா? எட்டணா வாங்கிக்கிட்டான்"
"போவுது. அப்படின்னாலும், இன்னம் ஒரு ரூபா?"
"ஒரு ரூபா? முழுங்கிட்டேன் போயேன், பசியானா பசி உயிர் துடிச்சுது கொஞ்சம் நாஸ்தா பண்ணேன்"
"ஒரு ரூபாய்க்கா?
"ஏண்டி எனக்கென்ன, சாலா வயிறு? ரெண்டணாவுக்குத் தின்னேன்?"
"மிச்சம்"
"மிச்சம் இருக்குது"
"எங்கே"
"இருக்குதுன்னா விடுவயா, சும்மா மனஷனைப் பிடுங்கறேயே"
"எங்கேன்னா சொல்லுங்களேன்?"
"முடியாது போடி! சொல்ல முடியாது, காட்டவும் முடியாது"
"இருந்தாத்தானே காட்ட. அந்த எழவெடுத்த சாராயத்தை ஊத்திக்கிட்டு வந்தூட்டாச்சி. அடிவயித்தையே கலக்குதே,அடிக்கிற நாத்தம்"
"நாத்தமா அடிக்குது? இவ உடம்பு செண்டு நாத்தமாடி அடிக்குது! நாயே!"
இந்தவிதத்திலே கணக்குக் குறிக்கப்பட்டது. உரையாடலின் முடிவிலே, கந்தனின் கரம் குப்பியின் முதுகைப் பதம் பார்க்க அந்த அம்மையின் குரல், அண்டைபக்கத்து வீட்டாரின் காதுகளைக் குடைந்தது. குப்பு அதற்குப் பிறகு, தன் வரவு செலவுக் கணக்கைத், தின்பண்டம் கேட்ட குழந்தையின் முதுகிலே அறை கொடுத்தபடி, கூறிவிட்டாள். " அந்தப் பாவி ஈட்டுக்காரனுக்கும். சாராயக் கடைக்கும் அழுதது போக மிச்சம் 1-ரூபா கொடுத்தான். அரிசிக்கு அரைரூபா போச்சி, முளகா இரண்டணா ஆச்சி, உப்பு ஒரு அணா, எண்ணெய் இரண்டணாமிச்சம் ரெண்டணா முந்தானியிலே முடிஞ்சிவைச்சிருந்தேன், மூலக்காத்தாளுக்குக் கிடா வெட்டறாங்க, ஏகாச்சும் குடுன்னு பூஜாரி அய்யா கேட்டாரு, இருந்ததெ கொடுத்தேன். வேறெ என்ன இருக்கு எங்கிட்ட? தின்பண்டம் வேணும்னா நான் திருடத்தான் போகணும், ஒாணாவுக்குக் கருவாடு வாங்கி வந்திருக்கிறேன். அதைத்தானே செய்யப்போறேன்.அதைத் தின்னாமே ஓலமிட்டா உதைதான் கிடைக்கும்?" என்று குப்பி கூவித் தன் வரவு செலவைப் பதிவு செய்தாள்.
குடும்ப வரவு செலவு இவ்வகையாக இருக்கிறது. பணம் கிடக்கட்டும் ஒருபுறம், பாடு எப்படி என்று பாருங்கள்.
செட்டியார் வேலை
வண்டி வந்திருப்பதாகக் காவல்காரன் வந்து சொன்னான்.
"ஏண்டா தடிக்கழுதே! நீ வர வரச் சுத்தச் சோம்பேறியாகிவிட்டே" என்று செட்டியார் கோபித்துக் கொண்டார்.
அந்தச்"சோம்பேறி" காலையிலே 4-30க்கு எழுந்திருந்தான். நடவு வேலையைச் சுருக்காக முடிக்கவேண்டுமென்று செட்டியார் சொல்லிவிட்டு வரச்சொன்னார் என்று உழவனிடம் போய்க் கூறிவிட்டு, ஒரு ஓட்டமாகத் தோட்டதுக்குப் போனான், அங்கு மத்தியானம் ஐயாவுக்கு ஆறு 'இளநீர்' எடுத்துக்கொண்டு கடைக்கு வரச்சொன்னான். அதைச் சொல்லிவிட்டு வருகிற வழியிலே, நெல்மண்டிக்குப் போனான், சுமார் ஒரு பத்து வண்டிதான் வந்திருக்கு என்ற கணக்கு எடுத்துக்கொண்டான், எஜமானனுக்குச் சொல்ல குடிசைக்குப் போனான். அங்கே கட்டை இல்வை,புளியவிறகு ஒரே முடிச்சா இருக்கு என்று குப்பி சொன்னாள், கோடாலி எடுத்து நாலு தட்டு தட்டிப் போட்டுவிட்டு, ஒரு வெத்திலே காம்பு போட்டுக்கொண்டு, பழையபடி செட்டியார் பங்களா வந்து சேர்ந்தான், வண்டிக்காரனுக்கு "ஐயா புறப்படப் போறாரு" என்ற செய்தி கூறிவிட்டுப், பிறகு வந்து கூறுகிறான், வண்டி வந்திருப்பதாக, செட்டியார், அந்தக் "சோம்பேறி"யைக் கண்டித்துவிட்டு மனைவி அறைக்குப் போகிறார். வெளியே வருகிறார் 11 மணிக்கு! வண்டி இதற்குள் மூன்று தடவை அவிழ்த்து அவிழ்த்துக்கட்டியாகிறது. சோம்பேறி சுந்தன் குரோடன்சுகளுக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு, வேலிப்பக்கம் இருந்த குழியிலே மண் வெட்டிப் போட்டுச் சரிப்படுத்திவிட்டு, விளாமரத்திலிருந்து பழம் பறித்து வீட்டுக்குள்ளே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, வியர்வையைத் துடைத்துவிட்டு, சாயத்துணியை உதறித் தலையிலே கட்டுகிறான். செட்டியார் அவனை "என்ன ராங்கிடா உனக்கு! துணியை உதறுவதும், தலையிலே முண்டாசு கட்டுவதும், மாப்பிள்ளை போல உலாத்துவதுமா இருக்கறேயே தவிர, வேலை வெட்டி ஒழுங்காகச் செய்யறியா? வரவர ரொம்பக் கெட்டுப் போய்விட்டே உனக்கென்ன இங்கே இருந்து ஒழுங்கா வேலை செய்து கொண்டிருக்க இஷ்டமில்லையா?" என்று கேட்கிறார். காவல்காரன், கும்பிட்டுக் கூத்தாடித் தன் அடக்கத்தை தெரிவித்துக் கொள்கிறான். வீட்டின் அலுவல் முடிந்தது என்று, செட்டியார் கடைக்குப் போகிறார். அங்கே "சோம்பேறிகள்" இருப்பார்களல்லவா, அவர்களை வேலைவாங்க! போகிறார் என்றால், எப்படி? வண்டியில்! வழியிலே மாடு கொஞ்சம், தொல்லை கொடுக்கிறது. வண்டி ஓட்டுபவன் நாலு நாளாகச் சொல்லிக்கொண்டுதான் இருந்தான், "லாடம் இல்லீங்க, மாடு நகரமாட்டேனென்குது, கால் தேய்ந்து போச்சு" எனறு. "ஏண்டா திருட்டுப்பயலே! லாடம் சுட்டிச் சரியா மாசம் மூணுகூட ஆகலயே, இதுக்குள்ளே லாடம் தேய்ந்து போச்சா? அந்த லாடக்காரன் ஏதாவது கமிஷன் கொடுக்கிறானா உனக்கு, மாசம் தவறாமே லாடம் லாடம்னு உயிரை வாங்கறே. அடுத்த மாசம் பார்த்துக்கொள்வோம்; தட்டி ஓட்டு என்று சொல்லியபடியே இருந்தார். அன்று அவன் தட்டித்தான் ஓட்டினான். மாடு படுத்துக்கொண்டது. "தடிப்பயல்! எருமைமாடு! மண்டையிலே களிமண்!" என்று அவனை அர்ச்சித்து விட்டு, வழியே வந்த வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு கடைக்குப் போனார். வண்டிக்கு 6 அணா வீண்செலவு! "வாங்கோ செட்டியார்! ஏது ரொம்பக் களைச்சி இளைச்சி வந்திருக்கிறிங்க" என்று வரவேற்றார், செட்டியாருடைய பற்றுவழிக்காரர்.
"ஆமாம்! ரொம்ப அலைச்சாட்டம்தான்" என்றார் செட்டியார்.
"எல்லாம், இப்போ அம்பிகாவிலே போய்க் கூடிப் பேசறானுங்க" என்றார் அவர்.
"யார்" என்று கேட்டுக்கொண்டே செட்டியார் கடைக் குமாஸ்தாவைப் பார்த்தார்; அவன் "பையனைப்" பார்த்தான், பையன், விசிறியை எடுத்துக்கொண்டு ஐயா பக்கத்திலே நின்றுகொண்டு, அவன் வேலையைச் செய்தான், இதற்குள் செட்டியாரின் நண்பர், "யாரா? என்ன செட்டியாரே, தூக்கமா? அந்த மூன்று விலாசமும், வந்தாச்சே" என்றார். "கோயமுத்தூரா? சேலமா?" என்று செட்டியார் கேட்டார். "சேலத்தானுங்கதான்" என்றார் அவர். "அம்பிகாவிலே என்ன" என்று. கேட்டார் செட்டியார். "அம்பிகாவுக்கு அழைத்துக்கொண்டுபோய்க் காப்பி பலகாரம் வாங்கிக் கொடுத்து, தன்னிடம் சரக்கு எடுக்கும்படி தூண்டுகிறான். பெ.வா.' என்றார். "அப்படியா" என்றார் செட்டியார். இருவருமாகக் கடையைவிட்டுப் புறப்பட்டு அம்பிகா பவன் போனார்கள். ஆசாமிகளைக் கண்டார்கள். அங்கே பெ.வா. இல்லை! மூவருக்கும், செட்டியார் செலவிலே காப்பி வகையறா நடந்தது. 2-8-0 பில்! பிறகு கடைக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.
"வாடகைப் பணம் வந்திருக்கு" என்று குமாஸ்தா சொன்னார். செட்டியார் அந்தச் சமயத்திலே, வாழைக்காய் வற்றலுக்கும் உருளை வற்றலுக்கும் உள்ள வித்யாசத்தைச் சேலத்தாருக்கு விவரித்துக் கொண்டிருந்தார். குமாஸ்தா, இரண்டு மூன்று தடவை ஜாடையாகச் சொன்னான், செட்டியார் காதிலே விழவில்லை. சேலத்து வியாபாரிகள் போனபிறகு, (போகுமுன் 1-8-0 ரூபாய் ஆரஞ்சு தீர்ந்துவிட்டது.) செட்டியார், குமாஸ்தாவைக் கூப்பிட்டார்.
"இதோ பாரப்பா நான் நல்லதனமாகச் சொல்றேன் கேள். உன் நடவடிக்கையே நமக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை" என்றார். குமாஸ்தா பதில் சொல்ல ஆரம்பித்தார். செட்டியாரின் குரல், உரத்துவிட்டது. "எதிர்த்துப் பேசாதே, கடையை விட்டு கீழே இறங்கு, மரியாதையோடு நட" என்று மள மளவென்று வார்த்தைகளை வீசினார். குமாஸ்தா மௌனமாகிவிட்டார். பத்து நிமிஷத்துக்குப் பிறகு, செட்டியார் விசாரணை நடத்தலானார். "கோபம் வந்துவிடுகிறது உனக்கு. ஒரு வேலைச் சரியாக செய்கிறயா? வாடகைப் பணத்தை வசூல் செய்யச் சொல்லலே உன்னை?""சொன்னிங்க. நான்தான்......."
"நான் சொன்னேன்,நீ கேட்டுப் பாத்தூட்டு வந்து விட்டே, துரைமகன் இல்லை! யாருவீட்டு முதலு"
"வாடகை வந்ததுன்னு சொன்னேனே"
"வாடகை வந்தாச்சா?ஏண்டா! மாமாட்டம் நிக்கறே? வாடகை வாடகைன்னு நான் வரட்டுக் கத்து கத்தறேன்; வாயை மூடிகிட்டு இருந்தூட்டு, இப்போ வாடகை வந்ததுன்னு இரகசியம் பேசறே!"
"அப்பவே சொன்னேனுங்க சேலத்து ஆசாமிங்க இருந்தாங்களே......."
"ஏண்டா! அவனுங்க எதிரிலேயா சொன்னே? சொல்லலாமா? அவனுங்க எதிரே இதை எல்லாம் சொல்லலாமா?
"அதுக்காகத்தான்: மெதுவாச் சொன்னேன்?"
"என்னத்தைச் சொன்னயோ! இழவு. என்ன கொடுத்தான் வாடகை?"
"68" (அறுபத்தெட்டு)
"அதென்னடா 2 ரூபா குறைவு"
"சுண்ணாம்பு அடிச்ச செலவாம்"
"யாரு அடிக்கச் சொன்னதாம்"
"சானிடரி இன்ஸ்பெக்டர் நோடிசு அனுப்பினாராம்??"
'அடே! எந்த நோடிசு வந்தா எனக்கென்னடா? நான் சுண்ணாம்பு அடிக்கச் சொன்னேனா?"
"இல்லைங்க""யாரைக் கேட்டுச் சுண்ணாம்பு அடிச்சான்? இரண்டு ரூபாயை எப்படி வாடகையிலே பிடிக்கலாம்? எனனடா கதை இது?"
"நான் சொல்லிப் பார்த்தேனுங்க...."
"அவர் மாட்டேன் என்று சொல்லிவிட்டாரு, நீங்க சரின்னு ஒப்புக்கிட்டிங்களா? ஏண்டா இப்படித் துரோகம் செய்யறிங்க! டே! இதோ பார். அந்த இரண்டு ரூபாயை வசூல் செய்தாகணும்; இல்லை, உன் கணக்கிலே பிடிச்சுடுவேன்"
இந்த அன்புக்குப் பிறகு, வட்டி செலுத்தினார், செலுத்தவேண்டியவர். பகல் சாப்பாடு கடைக்கு வந்தது செட்டியார் சாப்பிட்டு முடித்தார். பையன் இடத்தைச் சுத்தம் செய்தான். குமாஸ்தா கை அலம்பத் தண்ணீர் கொட்டினான். மற்றொரு குமாஸ்தா, துடைக்கத் துணி கொடுத்தான். இதற்குள், மெத்தை இதற்குள், மெத்தை விரிக்கப்பட்டது. செட்டியார் சிரமபரிகாரம் செய்து கொண்டார். பையன் விசிறினான். மாலை சுமார் 5 மணிக்கு எழுந்தார். குமாஸ்தாவை மருந்துக்கடைக்கு அனுப்பினார். பையனை விட்டு, வக்கீல் குமாஸ்தாவை வரவழைத்துப் பணம் கொடுத்தார். காவல்காரச் "சோம்பேறி" இதற்குள், வயல் வேலையை மேற்பார்வை செய்துவிட்டு, வயிற்றுக்குக் கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுவிட்டு, தோட்டத்து இளநீரைச் சுமந்துகொண்டு வந்து, செட்டியார் தூக்குவது தெரிந்து, பங்களா சென்று அங்கு, வேலைகளைக் கவனித்துவிட்டு,
வந்து சேர்ந்தான். அவனிடம் பணம் வீசினார். வீட்டுக்குப் புறப்படும் சமயம், குருக்கள் வந்து சேர்ந்தார். செட்டியார் குளிர்ந்த முகத்துடன் அவரை வரவேற்றார். சத்கதாகாலட்சேபம் நடைபெறலாயிற்று.செட்:- சாமி! வாங்க! எங்கே உங்க தரிசனமே கிடைக்கறதில்லை.
குரு:- நன்னா சொன்னேள்! செட்டியாரவாளுடைய பேட்டி தான் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு.
செட்:- சிவ! சிவ! என்னங்க சாமி ! நம்மைப் பத்தி அவ்வளவு பிரமாதமாப் பேசறிங்க.
குரு:- நான் மட்டுமா? செட்டியாரவாள்! நேத்தி சாயரட்சை கமலா என்ன சொன்னா தெரியுமோ?
செட்:- கமலாவா? அவ, என்னைப்பத்திக்கூடப் பேசுறாளோ?
குரு:- பேஷ்! உம்மைப்பத்தி பேசறாளான்னுவேறே கேக்கறேளே? என்ன சொக்குப்பொடி போட்டேளோ தெரியல்லே, சதா உம்ம கவனம்தான் அவளுக்கு
செட்:- சும்மா விளையாட்டு.
குரு:- பிரமாணமாச் சொல்றேன்.
செட்: சிவ! சிவ! சரி, என்ன சொன்னா?
குரு:- செட்டியாரைப் பார்க்கிறதுன்னா, காஞ்சி கருடசேர்வை போலிருக்குன்னு சொன்னா
செ:- அப்படியா சொன்னா, கமலா,எப்பவும் பேசறதிலே ரொம்ப சாமார்த்தியம்.
குரு - அதென்ன அப்படிச் சொல்லிட்டேள்? பேச்சிலே மட்டுந்தானா?
செ:- எதலையுமே தெளிவுதான்.
குரு :- யார் இருக்கா இந்த ஊரிலே அவளாட்டம் பாட......
செட்:- நாட்டியங்கூட........
குரு:- நடறாஜ தாண்டவந்தான்.
செட்:- நல்ல சுபாவந்தான்; ஆனா பணத்திலேகொஞ்சம் நிகா.
குரு:- அது சகஜம்; செட்டியாரவாள்! நாளைக்குப் பஞ்சாமிருத அபிஷேகத்துக்கு அவளும் வர்ரா.
செட்:- பலே! அப்ப, ரொம்ப ஜோராச் செய்துடனும்.
குரு:- பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவோ?
செச:- (குமாஸ்தாவைக் கூப்பிட்டு) ஐயரிடம், ஐம்பது ரூபா.....
குரு:- இன்னம் ஒரு இருபத்தைந்து சேர்த்துத் தாருங்கோ.
செட்:- அவ்வளவுக்குச் செலவு இருக்கோ?
குரு :- எல்லாம் அவளும் நானும் சேர்ந்து பட்ஜட் போட்டிருக்கிறோம்.
செ:- அப்போ அதுக்கு அப்பீல் கிடையாது!
ஐயர் எழுபத்தைந்து வாங்கிக்கொண்டு போனபிறகு,செட்டியார் கடைவீதிப் பக்கம் தமாஷாக நடந்து போய், நண்பர்களைக் கண்டு பேசிவிட்டு, வீடு சென்றார்.