தந்தையும் மகளும்/60
60அப்பா! வேனிற்காலத்தில், வெட்டிவேர்த் தட்டிகள் தொங்க விடுகிறார்களே, அதற்குக் காரணம் யாது?
அம்மா! வேனிற்காலத்தில் வெயில் கடுமையாகக் காய்கிறது. நமக்கு நிரம்பக் கஷ்டமாகத் தோன்றுகிறது. நீ இதை கவனித்திருக்கிறாய் அல்லவா? அதன் காரணம் என்ன தெரியுமா?வேனிற் காலத்தில் நமமுடைய உடம்பில் வேர்வை உண்டாகிறது. அது நீராவியாக மாறுவதற்கு நம்முடைய உடம்பிலுள்ள சூட்டையே பயன்படுத்திக் கொள்கிறது. அப்படி வேர்வை நீராவியாக மாறும்பொழுது நம்முடைய உடம்பு உஷ்ணமாக-கஷ்டமாகத் தோன்றாமல் குளிர்ச்சியாக--சுகமாகத் தோன்றுகிறது. ஆனால் காற்றில் நீராவி அளவுக்கு அதிகமாக ஏற்படும் சமயத்தில் வேர்வை நீராவியாக மாறமுடியாது, நமக்குத் கஷ்டமாகத் தோன்றும்.
இந்தக் கஷ்ட நிலைமையை நீக்குவதற்காகத்தான் வெட்டிவேர்த் தட்டிகளைத் தொங்கவிட்டு அதன்மீது தண்ணீர் தெளிக்கிறார்கள். நாம் தெளிக்கும் தண்ணீர் குளிர்ந்ததாகையால் அது காற்றிலுள்ள நீராவியை நீர்த்துளிகளாக மாற்றிவிடுகிறது. அதனால் காற்று குளிர்ந்து விடுகிறது. மறுபடியும் நீராவியை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படுகிறது அதனால் நம்முடைய வேர்வை நீராவியாக மாறி நம்முடைய உடம்பிலுள்ள உஷ்ணத்தைக் குறைக்கின்றது. அது நமக்குச் சுகமாக இருக்கிறது.
ஆனால், அம்மா! இப்படிச் செய்வதற்காக வெட்டிவேர்த் தட்டிதான் தொங்க விடவேண்டும் என்பதில்லை. ஏதேனும் ஒரு துணித் திரையைத் தொங்க விட்டாலும் போதும். ஆனால் வெட்டிவேர்த் தட்டியைத் தொங்க விட்டு அதன் மீது தண்ணீரைத் தெளித்தால் நம்முடைய உடலிலுள்ள சூடு ஓரளவு குறைந்து சுகமாயிருப்பதோடு. வெட்டிவேரின் நறுமணமும் நமக்கு இன்பமாயிருக்கும். அதற்காகத்தான் வெட்டிவேர்த் தட்டிகளைத் தொங்க விட்டுத் தண்ணீர் தெளிக்கிறார்கள்.