உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/114

விக்கிமூலம் இலிருந்து


114அப்பா! சில சினிமாக் கொட்டகைக்குள் போனால் வேனிற்காலத்தில் கூட குளிர்ச்சியாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அதனால் அங்கே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் கஷ்டமாகத் தோன்றவில்லை அல்லவா? அதற்குக் காரணம் காற்றைக் குளிர்வித்து அதிலுள்ள நீராவியை நீக்கிவிட்டு சினிமாக் கொட்டகைக்குள் அனுப்புவது தான்.

காற்று உஷ்ணமாக இருந்தால் வேர்வை உண்டாகிறது. காற்றில் நீராவியிருந்தால் வேர்வை ஆவியாக மாற முடியாமல் போகிறது. அதனால் தான் வேனிற்காலம் நமக்கு அதிகத் துன்பம் தருவதாக இருக்கிறது. ஆதலால் காற்றைக் குளிர்விக்கும் கருவிக்குள் காற்றை அதற்காக அமைந்துள்ள விசிறியைக் கொண்டு செல்லும்படி செய்கிறார்கள். அது எண்ணெய் தோய்த்த சணல் வழியாகச் செல்லுவதால் அதிலுள்ள கிருமிகள், தூசிகள் முதலிய அசுத்தங்கள் வடிகட்டப் படுகின்றன. அதன் பின் அந்தக் காற்றின் மீது குளிர்ந்த நீரைத் தெளிக்கவோ அல்லது அந்தக் காற்றைக் குளிர்ந்த நீர் ஓடும் குழாயுள்ள அறைக்குள் செலுத்தவோ செய்கிறார்கள். அப்பொழுது காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து நீராக வழிந்து விடுகிறது. காற்றும் குளிர்ந்து விடுகிறது.

இவ்வாறு சுத்தமான குளிர்ந்த காற்றை விசிறியின் உதவி கொண்டு சினிமாக் கொட்டகைக்குள் கூரையின் அருகிலுள்ள துவாரத்தின் வழியாக அனுப்புகிறார்கள். அங்கே சுவாசிக்கப்படும் காற்று குழாய்கள் வழியாகச் சுத்தம் செய்யும் அறைக்குச் செல்கிறது. ஆயிரம் பேர் படம் பார்த்தால் அவர்களிடம் ஒரு மணி நேரத்தில் 40 பவுண்டு வேர்வை உண்டாகும். அதனால் எவ்வளவு கஷ்டம் உண்டாகும், யோசித்துப் பார். அதை எல்லாம் நீக்கி விடுகிறது இந்த முறை.

அம்மா! இந்த முறையை சினிமாக் கொட்டகைக்கு உபயோகிப்பது போலவே வீடுகளிலும் ஹோட்டல்களிலும் காரியாலயங்களிலும் ரயில் வண்டிகளிலும் உபயோகிக்கிறார்கள். காற்று குளிர்ந்திருப்பது சுகமாயிருக்கிறது. சுத்தமாயிருப்பதால் சுவாச நோய்கள் அண்டுவதில்லை. இந்த முறையை அமெரிக்க எஞ்சினியர் வில்லிஸ் என்பவர் 1902-ம் ஆண்டில் கண்டு பிடித்தார். அது இப்பொழுது உலகமெங்கும் பல துறைகளிலும் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/114&oldid=1538299" இலிருந்து மீள்விக்கப்பட்டது