உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாக்குண்டாம்
(ஔவையார்)

கடவுள் வாழ்த்து

வாக்கு உண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மா மலராள்
நோக்கு உண்டாம்; மேனி நுடங்காது;—பூக் கொண்டு
துப்பு ஆர் திரு மேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார்தமக்கு.


நூல்

நன்றி ஒருவற்குச் செய்தக்கால், 'அந் நன்றி
என்று தருங்கொல்!' என வேண்டா—நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே; அல்லாத
ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.2

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்;
இன்னா அளவில், இனியவும் இன்னாத;
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே,
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.3

அட்டாலும் பால் சுவையின் குன்றாது; அளவளாய்
நட்டாலும், நண்பு அல்லார் நண்பு அல்லர்;
கெட்டாலும், மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும், வெண்மை தரும்.4

அடுத்து முயன்றாலும், ஆகும் நாள் அன்றி,
எடுத்த கருமங்கள் ஆகா:—தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.5