7
இப்படிப்பட்ட சில வழக்கமான பல சடங்குகளைச் செய்யவில்லை. இதுதான் இன்று எதிர்ப்புக்காட்டும் சிலரது குற்றச்சாட்டுகள், சீர்திருத்தத் திருமணங்களைப் பொருத்தமட்டில், இக் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கவில்லை. மறுக்கவும் மாட்டோம். அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.
நாங்கள் சீர்திருத்தம் என்று கூறுவதே, இப்படிப்பட்ட சடங்குகளை நீக்கவேண்டும், அடியோடு விட்டுவிட வேண்டும் என்பதுதானே! அப்படியிருக்க சடங்குகள் இல்லையென்று கூறுவதைக்கேட்டு அவைகளை எப்படி எங்களால் மேற்கொள்ள முடியும்?
சீர்திருத்தத் திருமணம் தேவையென்பதற்காக நாங்கள் கூறும் காரணங்களை மறுத்தல்ல இன்று காணப்படும் எதிர்ப்புகள். எதிர்ப்புகள் எங்கு காணப்பட்டாலும் அது ஏதோ சில சடங்குகளை அழித்து விடுகிறோம் ஒழித்து விடுகிறோம் என்பதற்காகத்தான் காணப்படுகிறது.
சங்கராச்சாரியாரிலிருந்து சாதாரண அய்யரிலிருந்து சாதாரண சாமியார்வரை படித்த பார்ப்பனர்களிலிருந்து படிக்காத பாமரர்வரை, அவர்கள் யாராக இருப்பினும் இதுவரை சீர்திருத்த முறையில்தான் திருமணங்கள் நிகழ வேண்டும் நடத்தப்படவேண்டும் என்பதற்காக சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் கூறிவரும் காரணங்களை ஒருவரும் மறுத்துப் பேசியது கிடையாதே!
அவர்கள் நாங்கள் கூறும் காரணங்களை மறுத்துப் பேசுவதில்லை. பேசவும் முடிவதில்லை. ஆனால் அர்த்தமற்ற சடங்குகளை பொருத்தமற்ற காரணங்களைக் காட்டிக் கடைபிடிக்கவில்லை யென்றுதான் குற்றஞ் சாட்டுகிறார்கள்.