உள்ளடக்கத்துக்குச் செல்

விஞ்ஞானத்தின் கதை/கலை

விக்கிமூலம் இலிருந்து


8. கலை

குழந்தை எப்போது சிரிக்கிறது? குழந்தை மழலை பேசி எப்போது சூழ்ந்திருப்பவரை மகிழ்விக்கிறது?

அது பூரண உடல் நலம் பெற்றிருக்கவேண்டும். அதற்குத் தேவையான உணவு அளிக்கப்பட்டு நிம்மதியாக ஒருமுறை தூங்கி எழுந்துவிட்டால் குழந்தையின் உற்சாகத்தைப் பற்றிக் கேட்கவேண்டியதில்லை. ட்ரூ... பப்...ட்ரூ... க்ளக்...பூ...ம்...இப்படி அதன் சங்கீதம் உருப்பெறுகிறது.

இதுதான் கலையின் பிறப்பு!

மழலைப் பருவம் தாண்டியபின் குழந்தையின் கையில் எழுதுகோல் ஏதேனும் கிடைத்தால் அது வீடு முழுவதும் கிறுக்கிவிடுகிறது. அந்தக் கிறுக்கலுக்கு என்ன பொருள் என்று அந்தக் குழந்தைக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது. ஆனால் மகிழ்வடைந்த ஒர் உள்ளத்தின் பதிவுக்கோடு என்று மட்டும் நாம் அதைத் துணிந்து கூறலாம்.

இந்த இரு எடுத்துக்காட்டுக்கள் மூலம் கலை எப் பொழுது பிறக்கிறது என்று சற்று சிந்திப்போம்.

கலை எப்பொழுது பிறக்கிறது?

உடலும் உள்ளமும் நிறைவு பெற்று பூரித்து எழும் மகிழ்ச்சியை அல்லது எண்ணத்தை வண்ணமுடன் வெளியிட வேண்டுமென்று மனிதன் முயலும்போது தான் கலை பிறக்கிறது. ஒவியம், கவிதை, சிற்பம், நடனம் ஆகிய கலைகள் மனிதனின் முன்னேற்றத்தைப் படிப்படியாக எடுத்துக் காட்ட வல்லன.

மனிதன் விலங்குகளைக் கொன்றும், பின்னர் வேளாண்மையைத் தொடங்கி ஆற்றுப்புறங்களில் நகரங்களை உருவாக்கிக்கொண்டும் வாழ்ந்தபோது கூட்டுறவின் வலிமையை உணர்ந்திருந்தான். மிக வலிமையுள்ள காட்டு விலங்கை வேட்டையாட தனி மனிதனால் முடியாது போனதால் துணைவர்களைச் சேர்த்து வெற்றி கண்டு, பின்னர் கொல்லப்பட்ட விலங்கைப் பங்கு போட்டுக்கொள்வது பழக்கமாயிற்று. இப்படிக் கூட்டங்கள் பல அங்கங்கே காடுகளில் உருவாகி அக் கூட்டங்களுக்கு வலிமை மிக்கவர்கள் தலைவர்கள் ஆயினர். கிராமங்களும், நகரங்களும் நிலை பெற்றபோதும் இவ்வாறு தலைவர்கள் நியமிக்கப்பட்டதை முன்னர் பார்த்தோம். உணவு பற்றாக்குறையின் போதும், விலங்கை வேட்டையாடும் போதும் சில சமயங்களில் இக் கூட்டங்களுக்கிடையே சண்டை நிகழும். அந்தச் சண்டையில் வெற்றி பெற்றவன் தோற்றவனின் கூட்டத்திற்கும் கிராமங்களுக்கும் தலைவனாவான். ஒரு சண்டையில் வெற்றிபெற்ற களிப்பு, குழுக்களே நெஞ்சு நிரம்பச் செய்து பாடல்கள் பாடக் காரணமாயிற்று. தலைவனின் போர்த்திறம் பற்றியும், அவனது குணநலம் பற்றியும் பாடல்கள் உருவாக்கப்பட்டன. அப்பாடல்கள் ஒய்வு கிடைத்த போதெல்லாம் பாடப்பட்டுப் பரப்பப் பட்டன. முதலில் பாடல்கள் வாய்மூலம் மட்டுமே இசைக்கப்பட்டன. பாடல்கள் எழுத்து வடிவம் பெறவில்லை. இன்றைக்கு இருக்கும் செல்வாக்கு பாடகர்களுக்கு அந்த நாளில் இல்லை. பெரும்பாலும் பாடகர்கள் நாடோடிகளே. தலைவனைப்பற்றிப் புகழ்ந்து பாடுவதும் அதற்குச் சன்மானம் பெற்றுக்கொண்டு அடுத்த தலைவனைப் பற்றிப் பாடச் செல்வதும் அந்த நாடோடிகளின் வழக்கமாக இருந்தது. பின்பு தனித்தனிக் குழுக்களுக்கு மகிழ்ச்சிதர நிரந்தரமாகப் பாடகர்கள் தேவைப்பட்டதால் பாடகர்களுக்கு நாடோடிவாழ்க்கை முடிந்து நிலையான வாழ்க்கை தொடங்கிற்று. இத்தகைய நிலையான வாழ்க்கைக்குக் காரணம் கோவில்களின் எழுச்சி என்றும் சொல்லலாம். ஊருக்குப் பொதுவாக அன்று கோவில்தான் கலை அரங்கமாக அமைந்திருந்தது.

நாளடைவில் இசைக்கருவிகள் பிறந்து இசையை வெகுவாகப் பரப்பின. மனிதனை ஈர்ப்பதில் இசைக்கு இணையாக வேறெதுவும் இல்லை எனலாம். மின்சாரம் அறிமுகமானபின் ரேடியோ, டெலிவிஷன் மூலமாக கலைகள் வெகு வேகமாகப் பரப்பப்படுகின்றன.

இனி எழுத்தின் பிறப்பையும் வளர்ச்சியையும் பற்றி ஆராய்வோம்.

மனித இனத்தையும் விலங்கினத்தையும் வேறுபடுத்திக் காட்டுவது மொழிவளம். ஒருவர்க்கு ஒருவர் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள இந்த மொழியின் உதவி மிகவும் அவசியம். மொழி என்று சொல்லும்போது பேச்சு, எழுத்து என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை இரண்டில் எழுத்துத்தான் முதலில் மனித வாழ்க்கையில் இடம் பெற்றது. வியப்பாக இருக்கிறதல்லவா? இதுதான் உண்மை. வாய்மூலம் ஒலி கிளப்பித் தன் எண்ணத்தைப் பிறருக்கு வெளிப்படுத்த எண்ணிய மனிதன் முதலில் தோல்வியுற்று எழுத்தின் உதவியை நாடினான். எழுத்து என்று குறிப்பிடும்போது இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துக்கள் என்று தவறாக எண்ணக்கூடாது. அன்றைய எழுத்துக்கள் படங்களே; அன்றைய சொற்றொடர் படங்களின் கோர்வையாகும். "மாலையில் இங்கு வா" என்று நண்பனுக்குத் தன் எண்ணத்தை வெளிப்படுத்த விரும்பிய ஒருவன் நடக்கும் மனிதனைப்போன்ற படமும், சூரியன் அஸ்தமிக்கும் படமும் வரைந்து தன் கருத்தை வெளியிட்டான். பழங்குகைகளில் இத்தகைய படங்கள் வரையப் பட்டிருப்பதைக் காணலாம்.

எகிப்தியப் பழங்குடி மக்கள் படம் வரைந்து விளக்குவதில் திறன் பெற்றிருந்தார்கள். ஆறாயிரம், ஏழாயிரம் ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்ட எகிப்தியக் கோவில்களும் பிரமிடுகளும் இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றன. மெசபடோமிய மக்கள் களிமண்ணால் சில உருவங்களைச் செய்து அவற்றிற்குக் குறிப்பிட்ட பொருளுண்டென்று ஏற்றுக்கொண்டார்கள். களிமண் கொண்டு செய்யப்பட்ட ஏடுகள் அடங்கிய புத்தகங்களைக்கூட அவர்கள் தயாரித்தார்கள். இந்தியாவில் பனைமரத்து ஓலைகளில் எழுத்துக்கள் எழுதப்பட்டன; கிரேக்க நாட்டில் ஊசி முனைகொண்டு மெழுகு ஏட்டில் எழுதப்பட்டன. பின்னர் காகிதம் செய்யும் முறையைச் சீனர்கள் கண்டுபிடித்தனர். அராபியர்கள் அதைக் கற்று இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப் பாவில் பரப்பினார்கள். தற்பொழுது மரம், புல், மூங்கில், கந்தல் துணி முதலியவற்றிலிருந்து பெருமளவில் காகிதம் இயந்திரங்களின் உதவியால் செய்யப்படுகின்றது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் புத்தகத் தயாரிப்பு கையினாலேயே செய்யப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரு புத்தகத்தைத் தயாரிக்க நெடுநாட்கள் ஆயினமையால் புத்தக வெளியீடு அபூர்வமாயும், அதிக விலையுள்ளதாயும் இருந்தது. சீனா இத்துறையில் புதிய வளர்ச்சியைக் காட்டியது. சிறு சிறு மரக்கட்டைகளில் சொற்றொடர்களைச் செதுக்கி, அவற்றை வரிசைப் படுத்தி, அவற்றின் மேற்பரப்பில் மை தடவி.காகிதத்தின்மீது அழுத்தினார்கள். அதுவே முதல் அச்சாகும். இந்த முறை பழக்கத்திற்கு வந்த போது, படம் எழுதி அதை எழுத்தாகப் பாவிக்கும் நிலை மாறி மொழிக்கு உதவும் எழுத்துக்கள் புனையப்பட்டன. சீனர்கள் கண்டுபிடித்த அச்சுமுறையை கி.பி.1450- இல் ஜெர்மானியர்கள் பின்பற்றி எழுத்துக்களை தனித் தனியே மரக்கட்டைகளில் செதுக்கினார்கள். எழுத்துக் கட்டைகள் கோர்வையாக அடுக்கப்பட்டு அச்சுத் தொழில் முன்னேறிற்று. அச்சு இயந்திரங்கள் புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின; வியப்பூட்டும் வகையில் மனித அறிவை வளர்த்தன. அச்சு இயந்திரங்களைப் போல வேறெந்தப் புதுமையும் மனித குலத்தை வேகமாக வளர்க்கவில்லை. இம்மலர்ச்சிக்குப் பின் செய்தித்தாள்களும், வார-மாத ஏடுகளும் கணக்கற்று உருவாயின. கையினால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த அச்சு இயந்திரங்கள் பின்னர் நீராவித் திறனாலும் மின்சாரத் திறனாலும் இயக்கப்பட்டன. இப்போது வழக்கில் இருக்கும் 'லினோடைப்' அச்சு இயந்திரங்கள் நாள்தோறும் பல்வேறு மொழிகளில் கோடிக்கணக்கான அச்சுப்பிரதிகளை வெளியிட்டு வருகின்றன.

உள்ளெழுந்த ஆர்வ மிகுதியை சீரிய முறையில் வெளியிட உதவுவது நாடகம். அதைப் பற்றியும் சற்றே இங்கு ஆராய்வோம்.

குழுக்களின் வெற்றியையும் தலைவனின் பிரதாபங்களையும் பாடல்கள் மூலம் பரப்பியதைப்போலவே சிலர் உரைநடை மூலம் பரப்பினர். ஊரின் எல்லையில் குன்றுப் பகுதி ஏதேனும் இருக்கும். அங்கு பாறை ஒன்றில் நின்றுகொண்டு ஒருவன் கதை சொல்லிக்கொண்டிருப்பான். பாறைக்குக் கீழே பொதுமக்கள் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் அவனது உரைகேட்டு மகிழ்வர். இந்த நிலைக்கு அடுத்து பாறைக்குப் பின் துணி ஒன்று தொங்கவிடப்பட்டது. அந்தத் துணியில் போர்க்களப் படமோ அல்லது கதை படிக்கப்படும் சூழலுக்கு ஏற்ப வேறு படமோ வரையப்பட்டிருக்கும். பொதுமக்கள் உட்கார்ந்து கேட்பதற்கு கற்களை வெட்டி இருக்கைகள் அமைத்தல், மரப் பலகைகளை வெட்டி இருக்கைகள் அமைத்தல் முதலிய முன்னேற்றங்கள் அடுத்து இடம் பெற்றன.

முதலில் நாடகம் ஒருவனால் மட்டும் படிக்கப்பட்டது. பின்னர் இருவரது உரையாடலாக அது மாற்றம் கண்டது. அதன் பின் கவிஞர்களும், நாடகாசிரியர்களும் புதுப் புது உத்திகளைக் கையாண்டு கதைப் பாத்திரங்களைப் பெருக்கினார்கள். அப்போது நடிப்பு அவ்வளவாகக் கவனிக்கப்படவில்லை. பேசும் பேச்சு ஒன்றுதான் உணர்ச்சியின் தூதுவன். அச்சம், கோபம், மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகளை முகத்தில் தேக்கி அன்று அவர்கள் நடிக்கவில்லை. அதன் விவரம் அவர்களுக்கு அன்றைய நிலையில் புரிந்துகொள்ள முடியாததாக இருந்ததால் அதற்கு மாறாக ஓர் உத்தியைக் கையாண்டார்கள். ஒவ்வொரு உணர்ச்சி பாவத்திற்கும் ஒரு முகமூடி தயாரித்தார்கள். அதை முகத்திலிட்டு நடிக்க வந்தால் அதைத் தாங்கியவனின் உணர்ச்சி பாவத்தை நாடகம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய நாடகங்களில் பயங்கர நிகழ்ச்சிகளும் இடம் பெறுவதுண்டு. துன்பியல் நாடகங்கள் உண்மையிலேயே துன்பியலில் முடியுமாம். உதாரணமாகக் கூறினால் மகாகவி ஷேக்ஸ்பியரின் 'ஜூலியஸ் சீசர்' என்னும் நாடகத்தைக் குறிப்பிடலாம். நாடகத்தில் ஜூலியஸ் சீசர் கொல்லப்பட வேண்டும். எனவே அந்தப் பாத்திரம் தாங்கும் நடிகன் உண்மையிலேயே கொல்லப்படுவான். ஆனால் இத்தகைய பரிதாபம் நெடுங்காலம் நீடிக்கவில்லை.

கோவில்கள் எழுச்சி பெற்றபோது சிற்பம், சங்கீதம், சித்திரம் முதலியவை கோவிலுக்குள் இடம் பெற்றது போல நாடகமும் கோவிலுக்குள் புகுந்து கொண்டது. கடவுள் தன்மையை விளக்கும் நாடகங்கள் அதற்குப் பின் உருவாயின.

பிற்காலத்தில் நாடகக் கலை வெகுவாக வளர்ச்சி பெற்றது. பணக்காரர்களாலும், மன்னர்களாலும் ஆதரவு தரப்பட்டு வளர்ந்து வந்த நாடகங்கள் அண்மையில் பொதுமக்களின் ஆதரவிலே வளரத் தொடங்கியது. பொதுமக்களே முனைந்து நின்று கலையரங்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் நிறுவ உதவினார்கள். இதனால் நாடகக் குழுக்கள் பெருகி, மக்களின் இரசிகத் தன்மை பெருகி வாழ்வின் கருத்துக்களும் உயர்ந்தன.

மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்ட பின் ஒரே நாடகத்தை ஒரே சமயத்தில் பல ஊர்களில் பல கோடி மக்கள் பார்த்துக் களிக்க உதவும் சினிமா உருவாயிற்று. பொது மக்களின் இரசிகத் தன்மையை இது வெகுவாகப் பிரதிபலிக்கிறது.

சினிமாத் துறையோடு கூட ரேடியோவின் உதவியையும் நாம் மறப்பதற்கு இல்லை. நாடகக் குழு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவர்கள் பேசும் பேச்சு மட்டும்தான் நமக்குக் கேட்கிறது. ஆனாலும் நாம் இரசிக்கிறோமே! இதன் நுணுக்கம் என்ன? நாடகத் துறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நாளடைவில் வீட்டுக்கு ஒரு ரேடியோ இருக்கப்போவது நிச்சயம். இது மனித இனத்தின் இரசனையை வெளிப்படுத்தும் அளவு கோல். ரேடியோவில் இருக்கும் குறையை டெலிவிஷன் நிறைவு செய்கிறது. இனி நாடகக் குழுக்களை ஒரே சமயத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காணலாம்.


—————

"https://ta.wikisource.org/w/index.php?title=விஞ்ஞானத்தின்_கதை/கலை&oldid=1553339" இலிருந்து மீள்விக்கப்பட்டது