விஞ்ஞானத்தின் கதை/நோயற்ற வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

7. நோயற்ற வாழ்வு

மோதிரங்களால் அலங்கரிக்கப்பட்ட விரல்களில் நோயும் குடிகொண்டிருந்தால் அவ் விரல்களுக்குரியவனை செல்வன் என்று நாம் சொல்வதற்கில்லை. எனவேதான் "நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்” என்ற வழக்கு நம்மிடையே இருந்து வருகிறது.

எவனொருவன் பிணிகளிலிருந்து அறவே விடுபட்டு உலகைத் தான் வாழக்கூடிய இடமாக அமைத்துக் கொள்ளும் திறனுடையவகை இருக்கிறானோ அவனே சுகவாசி. அவனது உள்ளமும் உணர்வுகளும் நியதிக்குட்பட்டு ஒரே ஒழுங்கில் நிலைக்கின்றன.

நம் ஆதி ஞானியரின் கூற்றுப்படி நம் உடல் ஐம் பூதங்களால் உருவாக்கப் பட்டது. ஐம்பூதங்கள் மண், நீர், வெறுமை, ஒளி, காற்று என இவை ஐந்தாம். கிரேக்க அறிவியலாரின் கொள்கைப்படி நம் உடல் நால்வகைப் பூதங்களால் ஆனது. அவர்கள் வெறுமையை நீக்கி மிகுதியான நான்கைக் கணக்கிட்டனர். இவற்றின் விகிதாசாரக் கூட்டுறவே உடம்பு. ஆதலின் இவற்றை ஒழுங்குற உடம்பிற்குள் நாம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவை பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் உணவு, நீர், காற்று மூலமாக ஒன்று சேர்ந்து நம்மை வளர்க்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ அமைந்தால் அப்போதுதான் நோய் பீடிக்கிறது. எனவே நோய் வாய்ப்படும்போது மருத்துவர்கள் உணவை முதலில் கட்டுப்படுத்துகின்றனர். இந்த நிலைதான் ஆதி நாளிலிருந்து கையாளப் படுகின்றது.

மனித உடலை ஓர் இயந்திரமாகக் கொள்ளலாம். இந்த இயந்திரத்தின் வேலைப்பாடு வியப்புக்கு உரியது. நமது உடல் இந்தப் பெரிய உலகின் சிறிய குறிப்புப் படமாகும். எதை உடம்பில் காண முடியாதோ அதை வெளியில் காண முடியாது. எனவேதான் உள்ளத்தைப் பொறுத்தது உலகு என்றனர் ஞானியர். உடற்கூற்றைப் புரிந்து கொள்ளும் போதுதான் உலகைப் புரிந்து கொள்ளுகிறோமென்பது இதனால் தெளிவாகிறது. இந்த எண்ணத்தின் உந்தலால் தான் மருத்துவம் உருப்பெற்றது; வளர்ந்தது. பெரும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளாலும் கூட இன்னும் நம் உடலின் இயக்கத்தை முழுமையாக அறிய முடியவில்லை. அறிவு முழுமையாக கைக்கு அகப்படக் கூடியதல்ல; அது நாளுக்கு நாள் வளரும் தன்மை உடையது என்பதற்கு மருத்துவம் நல்ல எடுத்துக் காட்டு. இப்படி இருக்க, உடலைப் பற்றி அறிய பாமரனுக்கு ஏற்படும் ஆவலைப் பற்றித் தனியே கூற வேண்டுவதில்லை அல்லவா? உள்ளத்தை ஆராயும் திறன் கொண்ட இயந்திர சாதனத்தை இதுவரை எவரும் கண்டு பிடிக்கவில்லை. உடலின் உள்ளும் புறமும் நடைபெறும் இயக்கம் பற்றி விஞ்ஞானிகள் எவ்வளவு விரிவாக எடுத்துச் சொன்ன போதிலும், அந்த இயக்கம் எதன் உந்தலால் நடைபெறுகிறது என்பதை மட்டும் விளக்க முடியவில்லை. சாவு ஏன் வருகிறது? அதன் வருகையை முன்கூட்டியே தெரிந்துரைக்க முடியுமா? இக்கேள்விகளுக்கான பதிலை எவர் தருவார்? பரந்த கல்வி, அனுபவங்கள் வழியே மனிதன் கற்றுக் கொண்ட பாடம்—அறிவின் எல்லைக் கோடு என்றும் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதாகும்.

அசுத்தத்தின் சுரங்கம் இந்த உடல் என்று கூறப்படுகிறது. உரிய நோக்கின்படி கண்டால் இக் கூற்று கற்பனை அல்லவே! உடல் இதைத் தவிர வேறில்லை என்று தெளிந்தால் அதற்கேன் இத்தனை பராமரிப்பு? அசுத்தச் சுரங்கம் எனப்படும் இவ்வுடல் பயன்படுத்தப்பட அது தூய்மையாக்கப்பட்டு ஒழுங்கு நிலையில் வைக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த வைரக் கற்களும், தங்கமும் சாதாரண மண்ணிடையே கலந்திருக்கின்றன. மண்ணின் அடியில் தங்கமும், வைரக் கற்களும் தென்படுவதை அறிந்த மனிதன் கோடிக் கணக்கில் செலவுசெய்து, விஞ்ஞானமுறையில் முயற்சி செய்து அவற்றை அடைய முயல்கிறான். அதைப் போலவே உடலைப் பேணுவதில் மருத்துவ முறை முயல்கிறது.

மனிதனுக்கும் விலங்குக்கும் மிகுந்த வேற்றுமை உண்டு. இயற்கையின் போக்கிலே விலங்கு வாழ்கிறது. உணவு வகைகளை அது பெரும்பாலும் மாற்றிக் கொள்வதில்லை; உண்ணும் வகைகளில் சோதனைகள் செய்வதும் இல்லை. மனிதனைப் போல அது தேவைக்கு மிஞ்சி எதையும் உண்பதில்லை. எனவேதான் மனிதனை அணுகுவதைப் போல நோய்கள் விலங்கினத்தை அணுகுவதில்லை. மனிதனின் அறிவு நுட்பம், புதியனவற்றை அனுபவிக்கும் ஆர்வம், மேலும் மேலும் முன்னேற வேண்டுமென்ற ஆசை முதலியன மனிதனைச் சில சமயங்களில் வெற்றி கொண்டு அவனைக் கீழே வீழ்த்தி விடுகின்றன; வேறு சில சமயங்களில் மனிதன் வெற்றிகண்டு புகழ் நாட்டுகிறான். உண்மையைக் கூறினால் மனிதன் புரியும் பல தவறுகளின் கூட்டமே அவன் காணும் வெற்றிப் புன்னகைக்குக் காரணம். இந்த நியதிக்கு உட்பட்டு உடலைப் பற்றிய ஆராய்ச்சியில் மனிதன் முதலில் தவறுகள் செய்து அனுபவப்பட்டு புதுப் புதுப் பாடங்களைக் கற்றிருக்கிறான்.

ஐம்பூதங்களின் சேர்க்கையில் தவறு ஏற்படுவதே நோயின் பிறப்புக்குக் காரணம். இதை ஆதி மனிதன் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. இயற்கைக்கு அஞ்சி அஞ்சிப் பழக்கப்பட்டிருந்த அவன் அசாதாரணச் சக்தி ஒன்றின் அட்டகாசமே நோய்க்குக் காரணம் என்று எண்ணினான்.நோயுற்றவனின் உடம்பில் பேய் புகுந்ததாக அவன் எண்ணினான். இந்த எண்ணத்தின் விளைவாக சாந்தி கழித்தலே நோயைத் தீர்க்கும் மருத்துவமாக அமைந்தது. இதனைச் செய்கின்ற மக்களை இன்றும் காணலாம். உள்ளத்தியலின்படி, பெரும்பாலான நோய்கள் மனத்தில் எழும் சிந்தனைகளைப் பொருத்தே அமைகின்றன. உண்டு என்று நினைத்தால் நம்மை அணுகவும், இல்லை என்று நினைத்தால் நம்மை விட்டு அகலவுமான பண்பு நோய்களுக்கு உண்டு.

மனிதனை அணுகும் ஒவ்வொரு நோயையும் தீர்க்கும் மருந்து வகைகளை ஆராய்வதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்திருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தும் வகையில் இந்த ஆராய்ச்சி நடைபெற வேண்டுமானால் உடல் கூறு பற்றித் தெளிவு வேண்டும். உடல் கூறு பற்றிய அறிவு பழங்காலத்தில் சீனர்களிடமும் இந்துக்களிடமும் அதிகம் இருந்தது. அவர்களே இறந்த உடல்களை வெட்டி நுண்ணிய ஆராய்ச்சி செய்தவர்கள். மத்திய காலத்தில் அராபியர்கள் இத்துறையில் மிகுந்த ஊக்கம் செலுத்தினர். அதற்குப் பின்னரே மேல் நாடுகளில் மருத்துவத் துறை ஆராய்ச்சிகள் பெருகின. எகிப்து, ஸ்பெயின் நாட்டுக் கலைக் கல்லூரிகளில் இத்தகைய ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் ஏற்பட்டது.

மருத்துவரின் அன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தது. ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்கு முன்னால் மருத்துவர் ஒரு வாக்குத் தர வேண்டும்- நோயாளி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தீங்கு விளைவிக்கப்பட மாட்டான் என்று. வாக்குக்கு மாறாக நோயாளி குணப்படுத்தப்படாது போவானானால் மருத்துவருக்குத் தண்டனை உண்டு. கண்ணைப் பரிசோதிக்கும்போது கண் குணப்படுத்தப் படவில்லையானால் மருத்துவரின் கண் பழுதாக்கப் படும்; காலில் இரண சிகிச்சை செய்யப்பட்டு அது தோல்வியுறுமானால், மருத்துவரின் கால் பழுதாக்கப்படும். அக்காலத்தில் மருத்துவர்கள் பெரும் பாலும் ஏழைகளைக் கவனிக்காமல் பெருஞ் செல்வர்களுக்கு மட்டுமே மருத்துவம் செய்து வந்ததால் அவர்களுக்கு ஆபத்து இருந்தது. உயிருக்கு உயிர்கூட மருத்துவர்கள் அன்று கொடுக்க நேர்ந்தது.

எனவே தொடக்கத்தில் மருத்துவம் விரைவாக முன்னேறவில்லை. உணவின் மூலமும், நீரின் மூலமுமே பெரும்பாலான நோய்கள் உடலுக்குள் புகுவதை அறிந்த மருத்துவர் நோயாளிகள் உட்கொண்ட உணவிலும் நீரிலும் திருத்தங்கள் செய்தனர். இப்படிப் பலவகையிலும் இன்னற்பட்டுக் கடைசியில் மருத்துவம் ஒரு கலையாகக்கூடத் தீர்மானிக்கப்பட்டது. கிரேக்க நாட்டு மருத்துவரான ஹிபாக்கிரிட்டீஸ் அற்றை நாளில் தனது குறிப்பேட்டில் "வாழ்வு சிறிது; வளர் கலைபெரிது. சந்தர்ப்பங்கள் அரிதே கிடைப்பவை; சோதனைகள் பயங்கரமானவை. ஆராய்ச்சியின் முடிவு நிலை இல்லாதது. ஆயினும் நாம் (மருத்துவர்) நமது கடமைகளை ஒழுங்குறச் செய்யவேண்டும்; ஆனாலும் நோயாளி, துணையாட்கள், சூழ்நிலைச் சந்தர்ப்பங்களின் ஒத்துழைப்பு மிகத் தேவை" என்று எழுதி உள்ளார்.

அன்றைய மருத்துவரின் வாழ்க்கை எவ்வளவு பயங்கரமானது—நிலையற்றது!

இப்படிப்பட்ட நிலையிருந்தும் ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தினால் சில மருத்துவர்கள் நோயின் தன்மையையும், மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் அறிய தங்களுக்குத் தாங்களே நோய்களை வரவழைத்துக் கொண்டனர்; மருந்துகளைப் பிரயோகித்தனர். அவர்கள் பிழைத்தால் மருத்துவத்துறைக்கு வெற்றி; மருத்துவத்துறை முன்னேறும். இல்லையேல் உலகம் வாழத் தங்களைத் தியாகம் செய்த பலரது பட்டியலில் அவர்கள் பெயரும் சேரும். உலகம் முன்னேற அணு அணுவாக விஞ்ஞானிகள் எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி நேர்ந்ததை இது உறுதிப்படுத்துகிறது.

உடல் எங்கும் இரத்தம் பாய்கிறதென்று முதலில் கண்டவர்கள் சீனர்கள்தாம். இந்த உண்மை நெடுங் காலம்வரை மேலை நாட்டவர்க்குத் தெரியாது. படுவா கலைக் கல்லூரியில் பயின்ற வில்லியம் ஹார்வி இரத்த ஓட்டம் சம்பந்தமாக கி.பி. 1628-ல் தம் நூலைப் பிரசுரித்த பின்பே மேலை நாடுகளில் உடற் கூற்றின் இத்துறை பற்றி ஆராய்ச்சி முளைவிட்டது. இருதயத்தின் ஒருபுறமாக இரத்தம் உட்புகுந்து மறுபுறமாக அது வெளியேறுகிறதென்று மட்டும் ஹார்வியால் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அவரால் விளக்கமுடியவில்லை. செத்த உடல்களை வெட்டி நுண்ணிய ஆராய்ச்சி செய்த இந்துக்களையும், சீனர்களையும் பின்பற்றி ஆராய்ச்சிசெய்த மால்பீகி என்பவரால்தான் உண்மை புலப்படுத்தப்பட்டது. மயிரிழைபோன்ற தந்துகிக்குழாய்கள் மூலம் இரத்த ஓட்டத்தின் போக்கு நிர்ணயிக்கப் பட்டதை அவர் சோதனைகள் பலவற்றின்மூலம் கண்டுபிடித்தார். அவருக்குப் பெரும் துணைபுரியும் வகையில் அவருடைய காலத்தில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. மால்பீகி என்பவர் ஹார்விக்கு அடுத்து வாழ்ந்தவர்.

உலக மக்கள் விஞ்ஞானிகளுக்கு மிகுந்த நன்றி தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை கி.பி. 1847-இல் நிகழ்ந்தது. அதற்கு முன்னால் இரண சிகிச்சை என்பது சித்திரவதைக்கு மறுபெயராக இருந்து வந்தது. கையில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை அறுத்துச் சோதிக்க வெட்டரிவாளும் ரம்பமும் உபயோகிக்கப்பட்டன. நோயாளி கதறக் கதற அவனைக் கொல்லர் பட்டறைப் பொருளாக மதித்திருந்த அவல நிலையை மாற்றும் வண்ணம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் சிம்ப்சன் என்பவர் குளோரஃபார்ம் என்ற மயக்க மருந்தைக் கண்டுபிடித்து இரண சிகிச்சையில் புதுப் பாதை அமைத்தார். உடம்பில் ஏற்படும் ஊமைக் காயங்களையும் முறிவுகளையும் காணுவதற்கு கி.பி. 1895-இல் ஜெர்மனியைச் சேர்ந்த ரான்ட்ஜன் அறிமுகப்படுத்திய எக்ஸ்-ரே கதிர்கள் மிக்க உதவிபுரிந்தன. காசம்போன்ற நோய்களைத் தீர்க்க இக்கதிர்கள் இக்காலத்தில் பயன்படுகின்றன. இதனை அடுத்து க்யூரி அம்மையார் கண்டு பிடித்த ரேடியக் கதிர்களும் மனித குலத்திற்குக் குறிப்பிடத் தகுந்த பணிபுரிந்து வருகின்றன.

எத்தனை விஞ்ஞான அதிசயங்கள் தோன்றினும் மனித குலத்தில் “சாவு இல்லாமல் செய்யமுடியுமா?" என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்குப் பதில் அளிப்பதுபோல் மருத்துவத்துறை அரிய சாதனை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நுரையீரல் சிறிது காலத்திற்கு வேலை செய்யாது நின்று விடுமானால் இந்த இடைக்காலத்தில் மட்டுமே வேலை செய்ய செயற்கை நுரையீரல் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால் மூச்சடைப்பு, எதிர்பாராத செய்திகளால் மாரடைப்பு, நினைவு தப்புதல் முதலியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தச் செயற்கை நுரையீரல்கள் இப்போது அதிகமாகப் பயன்பட்டு வருகின்றன. இதைப் போலவே முறிவு கண்ட உடலுறுப்புக்கள் பிளாஸ்டிக்கினாலான செயற்கை உறுப்புக்களால் நிறைவு பெறுகின்றன. இறந்த மனிதனைக்கூட ஐந்து நிமிட நேரம் உயிர் பிழைக்க வைக்கும் விந்தை இப்போது மருத்துவத் துறையின் வெற்றியாக விளங்குகிறது. நோய் உண்டாகாமலும், பரவாமலும் இருக்க உணவும் நீரும் சீர்திருத்தப்பட வேண்டும். நீரைச் சுத்தப்படுத்த அங்கங்குள்ள அரசாங்க அதிகாரிகள் விஞ்ஞானிகளின் துணைகொண்டு மக்களுக்கு ஆவன செய்கின்றனர். உணவை ஆராய்ந்து நலம் பெருக்க ஆராய்ச்சிசாலைகள் கட்டப்படுகின்றன. பெங்களூரிலிருக்கும் உணவு ஆராய்ச்சிசாலை நமக்கு அண்மையிலிருக்கும் அத்தகைய ஆராய்ச்சி சாலையாகும்.



—————