உள்ளடக்கத்துக்குச் செல்

விஞ்ஞானத்தின் கதை/மானங்காத்த மனிதன்

விக்கிமூலம் இலிருந்து

6. மானங் காத்த மனிதன்

தொடக்க காலத்தில் மனிதன் விலங்குகளுக்கு அஞ்சியதைப் போலவே வெப்ப, தட்பப் பருவங்களுக்கும் அஞ்சி வாழ்ந்தான். உலகின் வெப்ப, தட்பச் சூழ்நிலைகள் பருவத்திற்குப் பருவம் மாறுதலடைந்து மனிதனை வாட்டின. அப்பொழுதும் அவன் விலங்குகளை நோக்கியே தன் வாழ்க்கையைப் பண்படுத்திக் கொண்டான். விலங்குகளுக்கு இருப்பதைப் போல தடித்ததோல் மனிதனுக்கு இல்லை; அவற்றிற்கு இருப்பது போல அடர்ந்த மயிர்ப் பகுதி - இயற்கை வழிவந்த போர்வை மனிதனுக்கு இல்லை. இத்தகைய வசதிகளைப் பெற மனிதன் தன் அறிவைப் பயன்படுத்திய போதுதான் உடை உருப்பெற்றது. பொதுப் பாதுகாப்புக்கு வீடு உதவியது போல, மனிதனின் தனிப் பாதுகாப்புக்காக அமைந்தது உடை.

குகைகளை வீடுகளாகக் கொண்ட காலத்திலேயே உடை மனிதனுக்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும் என்பது இதனால் புரிகிறது. வெயிலின் வெப்பத்தை விட குளிரின் வாட்டலே மனிதனே வெகுவாகப் பாதித்தது. தடித்த தோலினாலும் அடர்ந்த உரோமங்களினாலும் மிருகங்கள் இயற்கையின் கொடுமைகளிலிருந்து தப்பி வாழ்வதைக் கண்ட மனிதன் தான் கொன்று உணவாக உண்டபின் மிகுதியாயிருந்த தோல் பகுதியைத் தன் மீது போர்த்துக் கொண்டான். இப் போர்வை முதலில் உடம்பு முழுவதும் முடிக் கொண்டிருந்தது. பின்பு அங்க அசைவுகளின் வசதியை முன்னிட்டு கழுத்துப் பட்டை, இடுப்புப் பகுதி, கால் பகுதி எனப் பல பகுதிகளாக்கப்பட்டு அதே போர்வை நன்கு பயன் படுத்தப்பட்டது. குளிர் நிலப்பகுதியான துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோக்கள் இன்று உபயோகிக்கும் உடையின் தன்மை இதனை நன்கு தெளிவுபடுத்தும்.

அடுத்த நிலையாக இறந்துபட்ட விலங்குகளின் மயிரை முறுக்கி அதை நெய்து உடுத்திக் கொள்ள மனிதன் கற்றான். இத்தகைய நெய்தலுக்கு அடிப்படையாக இருந்தது கூடை பின்னுதலாகும். எண்களும் கணக்கியலும், வேளாண்மைத் துறையினால் முன்னேறியதைப் போல நெய்தல் தொழிலாலும் முன்னேறின. எத்தனை இணுக்குகள் கூடையை முடையத் தேவைப்படுமென்றும், எத்தனை இழைகள் உடையை உருவாக்குமென்றும் எண்கள் கணக்கிடப்பட்டன. கணக்கியலில் புதுத்துறை இத் தொழிலால் பிறந்தது. இன்று வடிவங்களை ஆராயும் க்ஷேத்திர கணிதத்தின் (Geometry) தொடக்கம் இந்த நெய்தல் தொழிலே. எந்தக் கோணத்தில் எந்த வடிவில் இழைகள் நெய்யப்பட்டால் அதிகப் பலன் பெறலாம் என்ற கற்பனை மனிதனின் அறிவைத் தூண்டிவிட்டது.

விலங்குகளின் மயிர்களை முறுக்கி உடை நெய்த நிலையை அடுத்து மனிதன் பருத்தியிலிருந்தும் பயிர் நார்களிலிருந்தும் உடை நெய்யக் கற்றுக் கொண்டான். பருத்தி நூல் உடைகளை உருவாக்குவதில் இந்தியர்களும் பட்டுநூல் உடைகளை உருவாக்குவதில் சீனர்களும் நெடுங்காலத்திற்கு முன்பே சிறந்து விளங்கினர். இந்த இரு நாட்டவர்களே முதலில் நெய்யும் தொழிலை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்கள். இங்கிலாந்தில் தொழிற் புரட்சி ஏற்படும் வரையிலும் அந்நாட்டு உடைகளை நெய்ய இந்தியாவிலிருந்துதான் பருத்தி கொண்டு போகப் பட்டது.

சமுதாய வளர்ச்சியில் வேளாண்மை எவ்வாறு பங்கு கொண்டதோ அவ்வாறே உடையின் பெருக்கமும் பங்கு கொண்டிருக்கிறது. பற்பல இடங்களில் நெய்யப்பட்ட உடைகளைக் குறைவான விலைக்கு வாங்கி அதிகமான விலைக்கு விற்க சந்தைகள் அங்கங்கே உருவாயின. வாணிபத்தில் போட்டி ஏற்படுதல் தன்மையாதலின் பூசல்கள் கிளம்பின; கட்சி சேர்ந்து சண்டைகளும் நிகழ்ந்தன. பின்னர் வாணிபத்தின் வளர்ச்சியை இச்சிறு பூசல்கள் குறுக்கிட்டுத் தடுத்ததை உணர்ந்து வாணிபர்கள் கூட்டுறவுச் சபைகள் அமைத்து விலைகளை நிர்ணயித்து வணிக சட்ட திட்டங்களை வரையறுத்தனர். இதனால் வாணிபத்தில் தேக்கம் ஏற்படாமல் பரவி பிற நாட்டு வாணிபமும் உருவாயிற்று; வெற்றி கண்டது.

கையாலேயே நூற்பதும் நெய்வதுமான நிலைக்கு அடுத்த நிலையாக மனிதன் முன்னேற்றம் காண விஞ்ஞானம் துணைக்கு வந்தது. கைராட்டையும் கைத்தறியும் இந்தப் பாதையில் அறிவியலின் முதல் குழந்தைகளாகத் தோன்றின. இவை இரண்டும் இந்தியரால் கண்டு பிடிக்கப்பட்டவை. இம் முறைகளை அறிமுகப் படுத்திக்கொண்ட மற்றைய நாடுகள் பின்னர் அறிவியலின் வேக வளர்ச்சியால் அருவி நீரின் வளர்ச்சியாலும், ஆற்று நீர் ஓட்டத்தினாலும் இயந்திரங்களாக மாற்றும் முறையைக் கண்டன. நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட் என்ற ஆங்கிலேய விஞ்ஞானிக்கு இதில் பெரும் பங்கு உண்டு. மின்சாரம் வழக்கிற்கு வந்த பின் பழைய முறைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன. பல்லாயிரக் கணக்கான இராட்டைகளும், கைத்தறிகளும் செய்யக்கூடிய வேலையை மின்சாரத்தின் உதவியால் இயந்திரங்கள் எளிதில் முடித்து விடுகின்றன. இதனால் இந்தியா பெரும் அளவு பாதிக்கப்படுகின்றது. கைத்தறி நெசவாளர் படும் துயரம் கண்ணீர் வடிக்கத்தக்கதாய் உள்ளது. கிராமக் கைத்தொழில்கள அழிவைக் காணுகின்றன. மகாத்மாகாந்தி இதைக் கண்டித்துக் குரல் கொடுத்தார்; கதராடை அணியும் விரதத்தை மேற்கொண்டார். அன்னாரது உதவியால் பெற்ற சுதந்திர நாட்டை இயக்கிவரும் அரசியலார் இயந்திர சாலைகள் பலவற்றை இன்று நாடெங்கிலும் தொடங்கி வைக்கிறார்கள்.

நூலாடைகளையும் கம்பளி ஆடைகளையும் தவிர்த்து தற்பொழுது புதுவகையான உடைகள் வழக்கிற்கு வந்திருக்கின்றன. ரேயான் அல்லது செயற்கைப் பட்டு இவற்றில் குறிப்பிடத்தக்கதாகும். இயற்கையில் பட்டுப்பூச்சி நூலைத் தயாரித்ததை உற்று நோக்கிய மனிதன் தானும் அதேபோல் பட்டு நூலைத் தயாரிக்க எண்ணினான். பட்டுப் பூச்சிகள் உணவாகக் கொண்ட முசுக்கட்டை மரத்தின் இலைகளைக்கொண்டு அம்முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். பின்னர், முசுக்கட்டை மரத்தில் இருக்கும் ஸெலுலோஸ் சத்துப் பொருளே எல்லா மரங்களிலும் இருப்பதை அறிந்த அவன் செயற்கைப் பட்டுநூலைத் தயாரிக்க எல்லா மரங்களையும் பயன் படுத்திக் கொண்டான். மரம் முதலில் நன்கு வேக வைக்கப்பட்டு, கூழாக்கப் படவேண்டும். அடுத்து, தேவைப்படும் இரசாயனப் பொருட்களை அதனோடு சேர்க்க வேண்டும். இயந்திரத்தின் உதவியால் பட்டுப் பூச்சி தயாரிப்பதைப் போல் மெல்லிய இழைகள் நூற்கப்படுகின்றன. இதில் இன்னொரு விந்தை என்னவெனில் இயற்கைப் பட்டைவிட செயற்கைப் பட்டு உறுதி வாய்ந்ததாக உள்ளது.

கண்ணாடி நூலினாலும் உலோக நூலினாலும் தற்போது உடைகள் தயாரிக்கப் படுகின்றன. அலுமினிய உலோகம் இவ்வாறு பயன்படுகிறது. பிளாஸ்டிக் உடைகளின் உதவி நாம் அறிந்ததே. இது நீரில் நனையாது; தீயில் பொசுங்காது. இவற்றினால் விஞ்ஞானியின் மேதைத் தன்மையினை நாம் நன்கு அறியமுடிகின்றது. இயற்கை காட்டிய வழியே நடந்து கொண்டிருந்த மனிதன், இயற்கையை அனுசரித்துத் தன் பாதையை அமைத்து வாழ்ந்த மனிதன், இன்று இயற்கை பொய்த்தாலும் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு விட்டானே!


————