உள்ளடக்கத்துக்குச் செல்

விஞ்ஞானத்தின் கதை/வீடு

விக்கிமூலம் இலிருந்து


5. வீடு

னிதன் விலங்குகளுக்கு அஞ்சியகாலம் சிறிது சிறிதாக மறைந்து, அவற்றை விரட்டி விட்டு அவை குடியிருந்த குகைகளில் அடைக்கலம் புகுந்தான். ஆயினும் அச்சம் மிக்க வாழ்க்கையிலிருந்து அவன் விடுதலை பெற்றான் இல்லை.

மனிதன் கூட்டமாக வாழ்ந்தபோதிலும் ஒரு பொதுப் பாதுகாப்புத் தேவைப்பட்டது. அந்த பொதுப் பாதுகாப்புக்காக அமைந்ததுதான் வீடு. வீடு என்ற ஒன்று தனியே தோன்றுவதற்கிருந்த சூழ்நிலைகளைச் சற்றே விரிவாக ஆராய்வோம்.

வேளாண்மை ஆற்றோரங்களில் தொடங்கிய போது விலங்குணவு அறவே ஒழிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை. மாமிசமும் தானிய உணவும் சேர்த்தே உண்ணப்பட்டன. இத்தகையநிலை உருவானபோது தான் குடும்பம் என்ற ஒன்று ஏற்பட்டுக் கட்டுப்பாடுகள் உருவாயின. இயற்கையிலேயே வலிமை மிகுந்திருந்த ஆண் காட்டிற்குள் சென்று விலங்குகளைக் கொன்று மாமிச உணவைச் சேகரித்துக்கொண்டு வரவேண்டியது; வலிமை குறைந்திருந்த பெண் வயற்காட்டில் விளைந்த தானிய வகைகளைப் பக்குவப்படுத்தி உணவாக்க வேண்டியது; ஆக உணவு வகைகளைத் தயாரிக்க ஏற்பட்டதுதான் வீடு. பருவமாற்றங்களால் ஏற்படும் வெப்ப, தட்பங்களிலிருந்து உணவு வகைகளைப் பாதுகாக்கவும் வீடு உருப்பெற்றதெனக் கொள்ளலாம். குகை வாசத்திற்கு அடுத்தாற்போல் மனிதனின் வீடு மரக்கிளைகளில் அமைந்தது. தரையில் உலவும் கொடிய விலங்குகளிடமிருந்து மனிதன் தன்னைக் காத்துக்கொள்ளவே இத்தகைய வீடு அமைத்தான். பின்பு உலோக காலம் தோன்றி விலங்குகளை அடிமைப் படுத்திக்கொண்ட பின் வீடு தரைக்கு வந்தது. மரக்கிளைகள் நடப்பட்டு தாவர நார்களும், கொன்று தின்னப்பட்ட விலங்குகளிலிருந்து மிஞ்சிய நரம்புகளும் குறுக்கு வட்டமாகப் பின்னப்பட்டு இடைவெளியில் மரத்தின் இலைகளும் தழைகளும் திணிக்கப்பட்டு வீடுகள் அமைக்கப் பட்டன. மிகவும் குறைந்த வசதிகள் அமைந்த இத்தகைய வீடுகள் முக்கோண வடிவமாகத்தான் அமைந்திருக்க வேண்டும். இவை காற்றுக்கும், மழைக்கும், வெப்பத்திற்கும் ஈடு கொடுப்பதாயில்லை. மேலும், கொடிய விலங்குகளின் தொந்திரவும் சேர்ந்திருக்கலாம். எனவே, வீட்டை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று.

எகிப்தின் பெரும் பகுதிகளில் கற்கள் மிகுதியாகக் கிடைத்தன. மரக்கிளைகளைவிடக் கற்கள் உறுதியானவை என்றறியப்பட்டபின் கற்களினால் வீடுகள் கட்டப்பட்டன. இதன் விளக்கமாகத்தான் எகிப்தியப் பிரமிடுகள் விளங்குகின்றன. வேறு சில இடங்களில், குறிப்பாக ஆற்றோரங்களில் களிமண் அதிகமாகக் கிடைத்தது. மனிதன் அதைச் சிறுசிறு பட்டை வடிவங்களாக உருவாக்கிச் சூரிய வெப்பத்தினால் உறுதியுள்ள தாக்கினான். பின்னர் நெருப்பின் பயன் தெரிந்தபின் அம் மண் கற்கள் மேலும் உறுதியாக்கப்பட்டன. எகிப்தியப் பிரமிடுகள் தோன்றியது போலவே இராக்கிலுள்ள யூபரிட்டீஸ் ஆற்றுப் பகுதியில் இத்தகைய செங்கற்களைக்கொண்டு வியப்புக்குரிய கட்டிடங்கள் உருவாயின.

இந்தியர்களும் சீனர்களும் கட்டிட வேலைப்பாடுகளில் சிறந்து விளங்கினார்கள். தமிழ்நாட்டுக் கோவில்களும் சீனநாட்டுக் கோவில்களும் இதற்கு இன்றும் சான்று கூறுகின்றன. எகிப்தியர், இந்தியர், சீனர், கிரேக்கர் முதலியோர் கட்டிட நுட்பங்களை ஒரே மாதிரியாகக் கையாண்டனர்.இரண்டு சரிசமமான தூண்களை நிறுத்துவதும் மேலே குறுக்காக மரப் பகுதியொன்றைப் பொருத்துவதும் இவர்கள் எல்லோரும் வாயில் நிலைப் படியை உண்டாக்க வழியாக இருந்தது. வளைவுப் பகுதிகளை உண்டாக்க அன்று அறியப்படாதிருந்தமையின் இந்நாடுகளில் இம்முறை கையாளப்படவில்லை. வளைவுகளை இணைத்துக் கட்டும் முறை முதலில் உரோமானியரால் கையாளப்பட்டது. பின்னர் இவர்களிடமிருந்து அரபுநாட்டு முகமதியர் கற்றுக்கொண்டு தாம் வெற்றிகண்டு ஆட்சி புரிந்த எல்லா நாடுகளிலும் பரப்பினர். இதை அடிப்படையாகக்கொண்டு மத்திய காலத்தில் (கி.பி.1200-1500) கிறித்தவர்கள் தங்கள் கோவில்களைக் கட்டி அலங்கரித்தனர்.

மனப் பிணக்காலும், கட்சிப் பூசல்களாலும், மன வெறியாலும் காலம் நெடுகிலும் போர்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததை வரலாறு வாயிலாக நாம் அறிவோம். இந்தப் போர்கள் மனித குலத்தைச் சிதைத்து வந்திருக்கின்றன. ஆனாலும் கட்டிடக் கலையை இவை வளர்த்திருக்கின்றன என்று கூறலாம். பகைவர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், தம் உடைமைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் விளைவே உறுதிவாய்ந்த கோட்டை, கொத்தளங்களின் பிறப்பு ஆகும்.

அந்நாட்களுக்குப்பின் கட்டிடக் கலை சிறிது சிறிதாக முன்னேறியது. உறுதி வாய்ந்த கட்டிடங்கள் பல நாகரிகப் பூச்சுடன் இன்று கட்டப்படுகின்றன. உலகத்தின் அதிசயமாக விளங்குவதும், மிக உயரமானதெனக் கருதப்படுவதுமான எகிப்தியப் பிரமிடுகளைக் காட்டிலும் இரு மடங்கு உயரமான கட்டிடங்களை இன்று பல இடங்களில் காண முடிகின்றது. இத்தகைய கட்டிடங்களில் பயன்படுத்தப் படுபவை சிமென்ட், கான்கிரீட் முதலியவையாகும். மணல், சுண்ணாம்பு, சரளைக்கற்கள் முதலியவற்றை விஞ்ஞான நோக்கோடு ஆராய்ந்து கலவை செய்யப்பட்டவையே சிமென்டும் கான்கிரீட்டும். விலையுயர்ந்த உலோகங்களின் இடத்தை நிரப்பிச் செலவை குறைக்க இவை பெரிதும் உதவுகின்றன.

இந்தியாவில் கிராமங்களே அதிகமாக இருப்பதால் மண் வீடுகளே பெரும்பாலும் காணப்படுகின்றன. உலோகங்களைப் போல் மண் வெப்பத்தையோ, குளிரையோ எளிதில் கடத்துவதில்லை. மரம் இத்தன்மைத்தாய் இருப்பினும் எளிதில் மழையாலும் வெயிலாலும் கெடுக்கப்பட்டு விடுகின்றது. மரங்களை அடுத்துச் சுவர்களை எழுப்பச் செங்கற்களை உருவாக்கப்பட்டதைப் போல் வீட்டின் மேற்புறத்தை வேய கூரைக்கு அடுத்து ஓடுகள் உருவாக்கப்பட்டன. ஒரு சிலர் உலோகத்தகடுகளைப் பயன்படுத்தினர். எளிதில் இவை சூட்டைக் கடத்தியபடியால் பின்னர் கல்நார்-சிமென்ட் பழக்கத்திற்கு வந்திருக்கிறது. இது வெப்பத்தை அரிதில் கடத்துவது மட்டுமல்லாமல் உறுதியாகவும் விளங்குகின்றது.

குளிர் மிகுதியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே பெரும்பாலும் வீடு அமைக்கப்பட்டதால் முதலில் சன்னலோ, வேறு சுகாதார அமைப்புக்களோ காணப்படவில்லை. வெயில் காலம் வந்தபோது புழுக்கத்தைத் தடுக்க, காற்றோட்ட வசதிகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு தொடங்கிய சுகாதார முறைகள் படிப்படியாகப் பெருகி இன்று அதிக முன்னேற்றம் பெற்றுள்ளன.

சூழ்நிலை வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள, சரிசெய்யப்பட்ட (Air-conditioned) கட்டிடங்கள் மனிதன் கண்ட சாதனைகளில் ஒன்றாகும். பஞ்ச பூதங்களையும் கிரகங்களையும் அடக்கி ஆளும் திறன் மனிதனுக்கு உண்டு என்பதை இத்தகைய சாதனைகள் எடுத்துக் காட்டுகின்றன.

முன்னேற்றத்தின் கடைசி அறிக்கையாக 'ரெடிமேட் வீடுகள்' விளங்குகின்றன. சமையலறை, படுக்கையறை, கக்கூஸ்.... போன்று வெவ்வேறு பகுதிகள் தனித்தனியே இயந்திர சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் வீடு வேண்டுவோர் நிச்சயித்திருக்கும் நிலப்பகுதிகளுக்கு அந்த தயார் செய்யப்பட்ட வீட்டுப் பகுதிகள் லாரிகள் மூலமாகக்கொண்டு செல்லப் படுகின்றன. அங்குச் சுமைதூக்கி (crane) களின் உதவியால் நிலத்தில் இறக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஒன்றோடொன்று லாவகமாக இணைக்கப்படுகின்றன. மின்சார இணைப்பும், தண்ணீர்க் குழாய் இணைப்பும் பின்னர் நடைபெறுகின்றன. எல்லாவிதமான நவீன வசதிகளும் கொண்ட இவ்வீடுகள் வரிசை வரிசையாக அமைக்கப்படுவதே சிறந்தது. ஒன்றின் இணைப்பால் மற்றொன்று உறுதிப்படுகின்றது.

வெவ்வேறு வெப்ப நிலையில் வெந்நீர் தயாரிக்கக் கூட விஞ்ஞானிகள் வழிகண்டு பிடித்திருக்கிறார்கள். மின்சாரத்தின் உதவியால் 40°, 50°, 60°.... சென்டிகிரேடுகள் அளவில் எந்த வெப்ப நிலையில் வேண்டுமானாலும் மின்சாரப் பொத்தானை அமுக்கிய மாத்திரத்தில் வெந்நீர் தயாரித்துத் தரப்படுகிறது.


————

"https://ta.wikisource.org/w/index.php?title=விஞ்ஞானத்தின்_கதை/வீடு&oldid=1553343" இலிருந்து மீள்விக்கப்பட்டது