உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. தமிழ்ச் சொற்களும் தமிழ்ப் பண்பாடும்

சொற்கள் உலகப் பொருள்களின் குறியீடுகள் மட்டுமல்ல; கருத்துகளின் குறியீடுகளும் கூட. பொருள்களைக் குறிக்கும் சொற்கள் அச்சொற் பொருளை அறிந்த மக்கள் உள்ள நாட்டு மொழிகளிலெல்லாம் இருக்கும். ஆனால், கருத்துகளைக் குறிக்கும் சொற்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நிலையில் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, கொடுத்தல், தருதல், ஈதல்; நாம், நாங்கள்; வணக்கம், வழிபாடு, தொழுகை ஆகிய நுட்ப வேறுபாடுகள் ஆங்கிலத்தில் இல்லை. கனவு, நனவு, என்ற மாறுபாடும் காய், கனி ஆகிய வேறுபாடும் ஆங்கி லத்திலும் மற்றெம் மொழியிலும் இல்லை. இன்றைய பல ஆங்கிலக்கருத்துக் குறிகளுக்கும் இதுபோலத் தமிழில் பல சமயம் நேர் தனிச்சொல் இல்லாம் லிருப்பதுண்டு. இங்ஙனம் கருத்துக் குறிக்கும் சொல் வளத்தின் வேறு பாட்டாலேயே மொழிகளிடையே பண்பாட்டு வேறுபாடும், உயர்வு தாழ்வும் மதிக்கப்படும். தமிழ் இவ்வகையில் தனித் தன்மையும் உயர்வும் உடைய தென்பது ஆராய்ச்சி வகையால் காணவேண்டுவதொன்று.

மொழியில் என்ன இருக்கிறது என்றும் சொல்லில் என்ன இருக்கிறது, எந்த மொழிச்சொல்லை எந்த மொழியில் வழங்கினால் என்ன என்றும் இப்போது பல அரைகுறை மதியினர் ஆராயாது கூறுவதுண்டு. சொற்கள் கருத்துகளைக் குறிப்பவை; தமிழில் எல்லாச் சொல்லும் கருத்துக் குறிப்பவை; கருத்து அறிவியல் முறைப்படி கூறினால், நீடித்த வாழ்வுடைய ஓர் உயிரியக்கமுடைய பொருள் என்பதுபோன்ற உண்மைகளைக் கவனிப்பவர் இவ்வாறு கொள்ள முடியாது. மொழியின் சொல்லில் அம்மொழியாளரின் இறந்தகால வாழ்க்கைக் கருத்து முற்றிலும் கருவூலமாகச் சேமிக்கப்பட்டுள்ளது.