உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

தமிழ்ச் சொற்களின் பொருள் பல கால மாறுபாட்டால் பொருள் திரிந்திருப்பதுண்டு. அறிஞர் தேவநேயப்பாவாணர் போன்ற ஆராய்ச்சியாளர் பலர் அத்தகைய மாறுபாடுகளில் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். வளைதல் என்ற பொருளில் மட்டுமே சங்க இலக்கியங்களில் 'வாங்கு' என்ற வழங்கும் இச்சொல் கை வளைந்து பெறுதல் என்ற குறிப்பில் 'பெறு' என்னும் பொருளில் இன்று வழங்குகிறது. இது இத்தகைய மாறுதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மேற் குறிப்பிட்டது போன்ற சொற்பொருள் மாறுபாடு காலவேறுபாட்டை மட்டுமே குறிக்கும். ஆனால், பண்பாட்டு மாறுபாட்டைக் குறிக்கும் சொற்களும் பல உண்டு. இம்மாறுபாடுகளிற் பல உண்மையில் தமிழ்ப் பற்றுடையவர் உள்ளத்தை அறுக்கும் மாறுபாடுகள் ஆகும். ஏனெனில், அச் சொற்களின் பழம் பொருளும் புதுப்பொருளும் தமிழன் முன்னைய உயர்வையும் இடைக்கால வீழ்ச்சியையும் அளந்து காட்டுபவையாயுள்ளன.

இத்தகைய சொற்களில் நூல், பாட்டு, பட்டினம், பொன் என்பன சில.

நூல்

நூல் என்ற சொல் இப்போது பெரும்பாலும் சுவடி அல்லது புத்தகம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.திருக்குறள் ஒரு நல்ல நூல், இது சங்க நூல் என்றெல்லாம் வழங்குகிறோம். ஆயினும் வானநூல், கணக்குநூல் என்று சொல்லும்போது நாம் கொள்ளும் பொருள் வேறு. இங்கே அது அறிவுநூல் என்றோ, அறிவுநூல் துறை என்றோ பொருள்படும். இப்பிந்திய பொருளிலேயே முற்காலத்தில் இச்சொல் பயன்பட்டது. நூல், நூலோர், கணக்காயர் முதலிய சொற்கள் முற்கால இலக்கிய வழக்கில் இலக்கியத்தையோ இலக்கிய ஏடுகளையோ குறித்ததாகக் காட்டவே முடியாது. ஏனெனில் அது ஆராய்ச்சி முடிவுகளை மட்டுமே குறித்தது. இவ்வகையில் 'நூல்' என்ற பழந்தமிழ்ச் சொல்லின் பொருள் அறிவியல் (Science) என்ற ஆங்கிலப் பொருளே ஆகும். தமிழரிடையே ஆராய்ச்சி பழங்கதையாகப் போனபின்னரே இது சுவடி எனும் பொருளில்