உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
182 ||

அப்பாத்துரையம் - 6



ராஜனின் படைகளால் முறியடிக்கப் பெற்றான். அவனுக்குப் பின் ஆட்சி பல கைகள் மாறி வலுவிழந்தது. ஆனால், நிஜாமின் ஆதரவு பெற்று அன்வருதீன் 1743 முதல் 1748 வரை நல்லாட்சி நடத்தினான். அதன் பின் இங்கும் அரசுரிமைப் போட்டி எழுந்தது. அன்வருதீன் மகனான வாலாஜா-சுராஜ் உத்தௌலா-முகமதலி ஒரு புறமும், தோஸ்த் அலிகானின் மருமகனான சந்தா சாகிப் மற்றொரு புறமும் போட்டியிட்டனர். முகமதலியை நாஸிர்ஜங்கும், சந்தா சாகிபை முசபர் ஜங்கும் பிரஞ்சுக்காரரும் ஆதரித்தனர்.

போரின் முதல் கட்டத்தில் நாஸிர்ஜங்கின் மேலோங்கிற்று. கமருத்தீன் இறந்த சமயம் நாஸிர்ஜங் அருகிலிருந்ததால் அவன் அரசிருக்கையை எளிதில் காப்பாற்ற முடிந்தது. மைசூர் மன்னரும் மற்றும் குறுநில அரசரும் அவனை ஆதரித்தனர். பிரஞ்சுப் படையில் அப்போது உட்கிளர்ச்சி இருந்து வந்ததனால், முஸபர்ஜங் புதுச்சேரிக்கு ஓட நேர்ந்தது.

புதிய நிஜாமான நாஸிர் ஜங்கின் ஆணைக்கு இணங்கியே மைசூர் அரசன் போரில் இறங்கினான். அரசன் சிக்க கிருஷ்ணராஜன் திறமையற்றவனாயிருந்ததால், அமைச்சன் நஞ்சிராஜனே இதுபோது அரசியலை நடத்தி வந்தான். அவன் முஸபர்ஜங்கின் ஆட்கள் வசமிருந்த தேவன ஹள்ளிக் கோட்டையை முற்றுகை செய்தான். மூத்த ஹைதர் சாகிபு வீரப்போர் செய்து மடிந்ததும், ஹைதரும் ஷாபாஸும் திறமையாகப் படை நடத்தி மூத்த ஹைதரின் இடத்தில் ஷாபாஸ் அமர்வு பெற்றதும் இம்முற்றுகையிலேதான். ஹைதர் தன் கன்னிப்போர் ஆற்றிப் புகழும் ஆதரவும் பெற்றதும் இங்கேயே.

மைசூர்ப் படைகளின் அடுத்த நிகழ்ச்சி ஆர்க்காட்டு முற்றுகையே. நாஸிர்ஜங் முகமதலியை நவாபாக்குவிக்கும் முயற்சியில் தன் படைகளுடன் இதில் ஈடுபட்டான்.ஷாபாஸும் ஹைதரும் மைசூர்ப் படைகளை இங்கே நடத்தினார்கள். முற்றுகை வெற்றியடைந்தது. முகமதலி நவாபாக்கப்பட்டான். நாஸிர்ஜங் வெற்றிப் புகழுடன் அங்கேயே தங்கியிருந்தான். மைசூர்ப் படைகள் இங்கே வீர தீரத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நின்று போரிட்டது கண்டு, ஆங்கில வரலாற்றாசிரியர்கள்கூட வியப்படைந்துள்ளனர். இதில் புத்தம் புதிய