உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 207

நிஜாமின் வலுவையும் குறைக்க முடியும் என்று கண்டு, ஹைதர் அதில் முனைந்தான்.

ஹஸ் கோட்டையை ஹைதர் இரண்டு மூன்று நாட்களில் வென்றடக்கினான். அதன் பின், அவன் பெரிய பலாப்பூர்க் கோட்டையை அணுகினான். ஹைதரும் அவன் தமையனும் சிறு பிள்ளைகளாயிருக்கும்போது, அவர்கள் தாயுடன் சிறையில் அவதிப்பட்டிருந்த கோட்டை இதுவே. அவர்களைத் துன்புறுத்திய அப்பாஸ் அலிகானே அதன் முதல்வனாயிருந்தான்.வளர்ந்துவிட்ட புலிக்குட்டியின் சீற்றத்துக்கு அஞ்சி, அவன் பெண்டு பிள்ளைகளுடன் கோட்டையைவிட்டு ஓடினான்.

மாகாணத்தின் கடைசிக் கோட்டை ஈத்தா என்பது. மராட்டியர் தமிழகக் கொங்கு மண்டலத்தை வெல்லும் பேரவாவுடன் இங்கே பீரங்கிகள், வெடி மருந்துக் குவைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் போதிய அளவு சேமித்து வைத்திருந்தனர். இவை அனைத்தும் ஹைதர் கைவசமாயின. போர் முடிவில் பஸாலத் ஜங் ஒன்றிரண்டு பீரங்கிகள் தவிர மற்றச் செல்வங்களையும் மாகாண ஆட்சியையும் ஹைதரிடமே ஒப்படைத்தான். அத்துடன் அவன் அரிய உதவியைப் பாராட்டி நவாப் பகாதூர் சக் மக் ஜங் என்ற பட்டத்தையும் அரசுரிமைச் சின்னங்களையும் அவனுக்கு அளித்தான். ஹைதர் பட்டத்தில் 'ஜங்' என்ற அடைமொழியை மட்டும் நீக்கி, மற்றவற்றைத் தன் நிலவர உடைமையாக்கிக் கொண்டான். மீர் இஸ்மாயில் ஹுசேனை மாகாணத் தலைவனாக்கி விட்டு, ஹைதர் வெற்றியுடன் சீரங்கபட்டணத்துக்கு மீண்டான்.

சிறிய பலாப்பூர் வெற்றியை அடுத்து, அதைச் சார்ந்திருந்த ராயதுருக்கம், ஹர்ப்பன ஹள்ளி, சித்தல துருக்கம் ஆகிய கோட்டை முதலியவைகளையும் ஹைதர் தன் ஆட்சிக்குக் கீழ்க்கொண்டு வந்து, திறை தருவிக்க முயன்றான். இவ்வேலை கிட்டத்தட்ட முடியும் சமயத்தில் பேடனூர் அரசியலில் ஏற்பட்ட அரசுரிமைப் பூசல் அவன் கவனத்தை ஈர்த்தது.

ஹைதரின் பேரரச வாழ்வுக்கு அடிவாரமிட்ட நிகழ்ச்சி பேடனூர் வெற்றியேயாகும். பேடனூர் இன்றைய மைசூர்ப் பகுதியின் வடமேற்கிலுள்ள மலைநாட்டு சிறு நில அரசு ஆகும். 16-ஆம் நூற்றாண்டில் கிலாடி என்ற தலைநகரிலிருந்து நாயகமரபு