உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
206 ||

அப்பாத்துரையம் - 6




குந்திராவின் உறவினன் ஒருவன் அவன் சார்பில் கோயமுத்தூர் பகுதியிலுள்ள கோட்டைகளை ஆட்சி செய்து வந்தான். குந்திராவ் வீழ்ச்சியடைந்த பின்னும் அவன் கீழ்ப்படிய மறுத்தான். ஹைதர் தன் மைத்துனனான இஸ்மாயிலின் தலைமையில் ஒரு படையை அனுப்பி அக்கோட்டைகளைக் கைப்பற்றினான். சிறிய பலாப்பூர்க் கோட்டையின் தலைவன் கிளர்ந்தெழுந்தான். அவனையும் ஹைதர் தானே நேரில் சென்று அடக்கி ஒடுக்க முனைந்தான்.

உடையார் மரபினர் ஆட்சியின் கீழிருந்த பகுதி இன்றைய மைசூர்த் தனியரசின் ஒரு பாதிக்கும் குறைவானதே என்று மேலே தெரிவித்திருக்கிறோம். அது முழுவதும் இப்போது ஹைதர் ஆட்சியின் கீழ் அமைதியுற்றிருந்தது. ஆட்சிப் பொறுப்பன்றி இனி வேறு பொறுப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டதாகவே இச்சமயம் தோன்றிற்று. ஆனால், திடுமென வெளியேயிருந்து புதிய பொறுப்புக்கள் ஹைதரைக் கூவி அழைத்தன.

ஸலாபத்ஜங் மீர் அஸப் உத்தௌலா 1761 வரை ஆண்டான். அவன் தம்பியர் இருவரில் மூத்தவன் பஸாலத்.

அவன் ஏற்கெனவே அடோனி மண்டலத் தலைவனா யிருந்தான். ஜங்மீர் ஷூஜா உல்முல்க் வீரமும் பேரவாவும் உடையவன். இளையவன் மீர் நிஜாம் அலிகான் முந்திய நிஜாமைச் சிறைப்படுத்தி வதைத்து, பின் தானே நிஜாமாகி,1761 முதல் 1803 வரை 42 ஆண்டுக் காலம் நீடித்து ஆட்சி செய்தான். நிஜாம் அரசுரிமையிற் பிற்பட்டுவிட்ட பஸாலத் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அடானியில் தனியாட்சி நிறுவினான். அத்துடன் ஆட்சியைப் பரப்ப எண்ணங்கொண்டு மராட்டியர் கைவசமிருந்த சுரா மாகாணத்தின்மீது படையெடுத்தான்.

சுரா மாகாணத்தின் தலைநகரான ஹஸ் கோட்டை பெங்களூரை அடுத்திருந்தது. அதைக் கைப்பற்றும் முயற்சியில் பஸாலத் ஜங் வெற்றி பெற முடியவில்லை. அவ்வகையில் தனக்கு உதவி செய்தால், மாகாண ஆட்சியை ஹைதரிடமே விட்டு விடுவதாக அவன் தெரிவித்தான். இச்செயல் மூலம் தன் ஆட்சியையும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும். அத்துடன்