உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 33

பெரிதும் தென்னாட்டையும் தமிழகத்தையும் நினைவூட்டுவதாயுள்ளது. இறந்தவரைப் புதைத்தல், சமயச்சார்பற்ற நாகரிகம், தொழில் வாணிகச் சிறப்பு, நகரவாழ்வு, உயர் இன்பவாழ்க்கைப் பொருள்கள், திட்டமிட்ட நகரமைப்பு ஆகியவகைகளில் சங்க இலக்கியகாலத் தமிழகத்துக்குச் சிந்துவெளி மிக அணுக்கத் தொடர்புடையது. இவை எல்லவாற்றிலும் சிந்துவெளி நாகரிகத்துக்குப் பிற்பட்ட காலத்துக்குரிய வேத நாகரிகம் வேறுபட்டது ஆகும்.

இன்றைய தென்னாட்டு நாகரிகத்தின் தனிச்சிறப்புக்குரிய கூறுகளுள் ஒன்று தெப்பக்குள அமைப்பு ஆகும். மொகஞ்சதரோவின் அரண்மனையடுத்த செய்குளம் பேரளவில் தென்னாட்டுத் தெப்பக் குளங்களை நினைவூட்டுவதாயுள்ளது. அதன் அமைப்பு இன்றைய அமைப்பான்மை வல்லுநருக்குக்கூட வியப்பூட்டுகின்றது. நீர்த்தேக்க எல்லையிலேயே அது 40 அடி(1200 செ.மீ) அடி நீளம் 23 அடி(690 செ.மீ.) அகலம் உடையது. சுற்றிலும் நீர் எல்லை வரைப் படிக்கட்டுகளும் 4 1/2, அடி (135 செ.மீ.,) 7 அடி (210 செ.மீ.) திண்ணம் உள்ள இரு மதில்களும் உள்ளன. மதில்களிடையிலும் மதில் முகட்டிலும் அகலமான சுற்றுப்பாதைகள் உள்ளன. செய்குளத்தின் அடித்தளம் வழவழப்பாக இழைக்கப்பட்ட செங்கல்லால் பாவப்பட்டு நிலக்கீலால் தற்கால சிமிட்டிப் பூச்சுப்போலத் தோன்றுப்படி பூசப்பட்டுள்ளது. அடித்தளத்தில் நீர் ஊறித் தண்ணீர் கெட்டுவிடாமலிருப்பதற்காகச் செய்யப்பட்ட இவ்வேறுபாடு இன்றளவும் நீரைத் தூய்மையுடையதாகக்காக்கிறது. நிலக்கீல் மொகஞ்சதரோவில் அருகலாகவும் சுமேரில் ஏராளமாகவும் பயன்படுத்தப் பட்டிருப்பதால் அது அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.

தமிழகத்திலும் கன்னட நாட்டிலும் சமயப்பற்றுடையவர் இல்லங்களில் காணப்படுவது போன்ற பூசைப் புரைகள் மொகஞ்சதரோவிலுள்ள பெரும்பாலான வீடுகளில் உள்ளன.

பிள்ளைகளுக்குரிய விளையாட்டுப் பொருள்களில் இன்றும் காணத்தக்க ஒரு புதுமை மொகஞ்சதரோவில் உள்ளது. கம்பில் கட்டப்பட்ட ஒரு கயிற்றின் மீது ஒரு பறவை ஏறி இறங்கும் படியாகப் பொறி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள்கள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டுள்ளன. ஆனால், விழக்காலங்களுக்-