34||-– – அப்பாத்துரையம் - 11
குரிய அரும்பொருள்கள் சங்கினாலும் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டவை. மரம், செம்பு ஆகியவைகளும் வழங்கப்பட்டன. விலங்குகளில் யானை, ஒட்டகம், கழுதை, நாய்கள், ஆடுமாடுகள் ஆகியவையும், புலி, கரடி, மான், மலையாடு, முயல், காண்டாமிருகம் ஆகியவையும் மயில், கிளி, கோழி, புறா, பருந்து, பாம்பு, ஆமை ஆகியவையும், பதுமைகள் வடிவிலும், முத்திரை ஓவியங்களிலும் காணப்படுகின்றன. நாய்கள் சிந்துவெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
சங்கு, மயில், ஆனை என்ற மூன்றும் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்கும் இடையே இருந்த வாணிகத் தொடர்புக்குச் சான்றுகள் ஆகும். அணிகலன்கள் தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், தந்தம், கண்ணாடி ஆகியவற்றால் செய்யப்பட்டன, சிந்துவெளித் தங்கத்தில் சிறிது வெள்ளி கலந்திருப்பதால் அது கோலாரிலிருந்து சென்றதே என்று அறிஞர் துணிந்துள்ளனர். சங்க இலக்கியங்களிலே தங்கம் விளையும் கோலார் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிந்துவெளிக் காலத்திலிருந்தே அங்கே தங்கம் வெட்டி எடுக்கப்பட்டதென்று இதனால் தெரியவருகிறது. சிந்து வெளியில் தங்க வெள்ளிக் கலவை, வெள்ளீயம், காரீயம் ஆகியவையும் வழங்கின. செம்பு இரசபுதனத்திலிருந்தும் பாரசிகத்திலிருந்தும் கிடைத்தன. இன்று செம்புடன் நூற்றுக்குப் பன்னிரண்டு பங்கு வெள்ளீயம் சேர்த்து வெண்கலம் செய்யப்படுகிறது. ஆனால், மொகஞ்சதரோவில் செம்பில் 100-க்கு 22 பங்கு வெள்ளீயம் சேர்த்து வெண்கலம் செய்யப்பட்டுள்ளது. மொகஞ்சதரோவின் வெண்கலக் கலவையே சிந்து கங்கை வெளியில் கி.மு.4-ஆம் நூற்றாண்டுவரை வழங்கியதாக அறிகிறோம்.
சிந்துவெளி மக்கள் பலவகை மழிக்கும் கத்திகளைப் பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் தாடி வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், மீசையுட்பட முகமுழுதும் உடலும் மழித்தனர். ஆண், பெண் இருபாலரும் கண்ணுக்கு மையிட்டனர். செங்காவிப் பொட்டு நெற்றிக்கு இடப்பட்டது. மேசை நாற்காலி போன்ற பீடங்கள் வீடுகளில் இருந்தன. பெரும்பாலும் செல்வர் வீடுகளுக்கு மாடிகள் இருந்தன. இரம்பம், தோல் அறுக்கும் உளி ஆகியவையும், வாள், ஈட்டி, அம்புமுனை ஆகிய வேட்டைக்கான கருவிகளும் காணப்படுகின்றன. போர், போர்க்கருவிகளுக்கான அடையாளம் எதுவும் காணவில்லை. ஆனால், ஹரப்பாவில்