தென்னாடு 35
நகரில் வெளியரண் ஒன்று இருக்கிறது. சிந்துவெளி நகரங்கள் யாவும் கோட்டை சூழ்ந்தவையே என்பதை இது காட்டுகிறது. வீடுதோறும் பெண்களுக்கும் விருந்தினருக்கும் சமையலுக்கும் தனியிடம் இருந்தது. பெரிய வீடுகளில் காவலர்க்குத் தனியிடம் இருந்ததாகத் தெரிகிறது.
தூண்டில் முள், கொட்டாப்புளி, இழைப்புளி, சுத்தி, துளையிடு கருவி, நெசவாளர் கருவிகள், துணிதுன்னும் ஊசி, தந்த ஆடைமாட்டி, கொண்டையூசி, எலும்புப் பொத்தான்கள், முகக் கண்ணாடி ஆகியவை சிந்துவெளி மக்களின் உயர் இன்ப வாழ்க்கைகான சின்னங்கள். நீள் சதுர வடிவுடைய செப்புத் தகடுகள் பல உள்ளன. இவை நாணயங்கள் என்று கருதப்படுகிறது. இவையும் நிறைகோல், படிக்கற்கள், அளவுகோல், முத்திரைகள் ஆகியவையும் வாணிக வாழ்வுக்குரிய அடையாளங்கள். இலக்கமிடப்பட்ட பல் பொருள்களும் உள்ளன. அவை அரசியலுக்கு உரிமைப்பட்ட பொருள்களாக இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
கொத்துவேலை, மட்பாண்டவேலை, தச்சு, கல்தச்சு, பொற்கொல்லர் வேலை, கன்னாரவேலை, இரத்தினத்தொழில், செதுக்குக்கலை, சங்குத்தொழில், மீன்பிடித்தல், வண்டி ஓட்டல், தோட்டி வேலை, காவல் தொழில், கப்பல் தொழில், (நெல், கோதுமை, வால்கோதுமை, எள் பருத்தி ஆகியவற்றின்) பயிர்த் தொழில், தந்த வேலை, பாய் முடைதல், வாணிகம், சிற்பம், ஓவியம் ஆகியவை சிந்துவெளி மக்கள் ஈடுபட்ட தொழில்கள் ஆகும். ஓவியம், இசை, நடனம் ஆகிய கலைகளையும், கணிதம், மருத்துவம், வானநூல் ஆகிய இயல்களையும் அவர்கள் தேர்ந்து வைத்திருந்தனர். மிருதங்கம் நடனப் பெண் ஆகிய ஓவியங்கள் கலைகளுக்குச் சான்று. நிறைக்கற்கள் கணக்கறிவை உணர்த்துகின்றன. வீடு கட்டுவதில் அவர்கள் இராசி அறிவைக் காட்டியிருந்தனர். கல்வமொன்றில் மீந்துள்ள சிலாசத்து அவர்கள் மருத்துவப் பயிற்சிக்குச் சான்று ஆகும்.
தமிழ் ஆண்டைப்போலச் சிந்துவெளி மக்கள் ஆண்டு தை மாதத்திலேயே தொடங்கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க சிந்து வெளி மக்களுக்கு எட்டேயிருந்தன. இதனால் சிந்துவெளி நாகரிகத்தின் பழமை கி.மு. 5610 வரை எட்டுவதாகத் தெரிகிறது. இது சுமேரிய நாகரிகம் பிறப்பதற்கு ஆயிரக்கணக்