36 அப்பாத்துரையம் 11
-கான ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். மனித நாகரிகத்தின் பிறப்பிடமும், வளர்ப்புப் பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல; சிந்துவெளியும் தென்னாடுமே என்பதை இது அறுதியிட்டுக் காட்டுகின்றது.
சிந்துவெளி நாகரிகம் வேத ஆரிய நாகரித்துடன் தொடர்பற்றது. மேலும் அது வேதநாகரிகத்துக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதே சமயம் அது திராவிட நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உண்மையில் ஆரியர் சிந்து கங்கை வெளியில் நுழையுமுன் இருந்த திராவிட நாகரிகம் அதுவே என்று துணியலாம். ஏனெனில், ஹரப்பா மொகெஞ்சதரோ ஆகிய இரண்டு நகரங்களும் இயற்கையாய் அழிந்தவையாகத் தோற்றவில்லை. கி.மு.2500-ஆம் ஆண்டுக்குப் பின் அவை திடுமென அழிவுற்றதற்கான அடையாளங்கள் உள்ளன. இருக்கு வேத ஆரியர் படையெடுப்பாலேயே அவை அழிந்திருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.
இருக்குவேத ஆரியர் தங்கள் எதிரிகளை ஆரியர் அல்லாதவர்கள், தாசர்கள் (கறுப்பர்கள்), புரியாமொழி பேசுபவர்கள், சப்பை மூக்கர், தமக்கென்று வேறுமாதிரியான வழிபாடுகளையுடையவர்கள். சிசுன தேவர்கள் (இலிங்கத்தை வணங்குபவர்கள்), மாயமந்திரம் வல்லவர்கள், கோட்டையால் பாதுகாக்கப்பட்ட பல நகரங்களை யுடையவர்கள், மிகுந்த செல்வமுடையவர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். இவ்வர்ணனைகள் அனைத்தும் சிந்துவெளி நாகரிகத்துடன் முற்றிலும் பொருத்துபவையே. இந்திரன் உதவியால் இம்மக்கள் நகரங்களைத் தாங்கள் அழித்ததாக அவர்கள் பல தடவை கூறுகின்றனர்.
இருக்குவேதத்தில் கண்டிக்கப்பட்ட சிந்துவெளி மக்களின் பழக்கவழக்கங்கள், கோட்பாடுகள் ஆகியவை யசுர் முதலிய பிற்பட்ட வேதங்களிலும் பிற்கால புராணப்பகைமையும் தணிந்தபின் சிந்துவெளிச்சமயம், நாகரிகம், பழக்க வழக்கங்கள் ஆகியவைகள் புதிய இந்தோஆரியரால் மேற்கொள்ளப்பட்டன என்று அறிகிறோம். ஆனால், பண்பாடுகள் ஏற்கப்பட்டாலும் சிந்துவெளித் திராவிட மக்கள் மொழி, ஆட்சி, நாகரிகத்தூய்மை ஆகியவை சிந்து கங்கை வெளியில் படிப்படியாகக் கைவிடப்பட்டன. நாளடைவில் தென்னாட்டின் வடகோடியையும் இவை தாக்கின.