உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 37

சிந்துவெளி நாகரிகம் பற்றிய செய்திகள் இன்னும் முழுதும் பழம் பொருளாராய்ச்சியால் தெளிவுபெறவில்லை. அகழ்வு ஆராய்ச்சியில் ஒரு பகுதியே நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் அகழ்வும் ஆராய்ச்சியும் பெருகித் திராவிட நாகரிகம், தென்னாட்டு வரலாறு ஆகியவற்றுக்கு இன்னும் மிகுதியான விளக்கம் ஏற்பட வழியுண்டு.


மொழி இனம்

மொழியாராய்ச்சி இன ஆராய்ச்சி ஆகியவை சிந்து வெளி தரும் ஒளியுடன் ஒத்து இயல்கின்றன. அத்துறைகளும் வருங்காலத்தில் வரலாற்றுப் பேரொளி தரவல்லன.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டுத் தெலுங்கு, துளு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளும் ஒரே எழுத்துமுறை உடைய ஒரு மொழியாய் இருந்தன. அதே சமயம் தெற்கே தமிழும் மலையாளமும் ஒரே எழுத்துடைய ஒரே மொழியாய் இருந்தன. இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐந்து திராவிட மொழிகளும் இரண்டு மொழிகளாவே இருந்தன என்று அறிகிறோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டுத் தென்திராவிடம் அதாவது தமிழ் - மலையாளத்துக்கும், வடதிராவிடம் அதாவது தெலுங்கு – துளு - கன்னடத்துக்கும் மிகுதி வேற்றுமை இல்லாதிருந்தது.

தென்னாட்டின் ஐந்து மொழிகளும் இரண்டாயிரத்தைந்நூறு அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஒரே மொழியாயிருந்திருக்கவேண்டும். இதனை நாம் பண்டைத்திராவிடமொழி எனலாம். இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பண்பட்ட திராவிட மொழிகளாகிய தென்னாட்டு மொழிகளும், சிந்து கங்கை வெளிகளிலுள்ள பண்படாத் திராவிட மொழிகளாகிய பிராகுவி, கோண்டு, இராசமகாலி ஆகியவையும் ஒரே மொழியாய் இருந்திருக்க வேண்டும். இதனை நாம் வரலாற்றுக்கு முற்பட்ட திராவிடம் எனலாம்.

சிந்துவெளி மொழி, தமிழ் அல்லது பழங்கன்னடத்தை ஒத்திருந்தது என்று அறிகிறோம். இது பண்டைத் திராவிட நிலையையோ, வரலாற்றுக்கு முற்பட்ட திராவிடநிலையையோ குறித்தது ஆகலாம்.