உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 அப்பாத்துரையம் 11

இடத்தில் வெற்றிகண்டு, வியலூர், கொடுகூர் ஆகியவற்றை அழித்தான். சோழ இளவரசர் ஒன்பதின்மரை நேரிவாயிலில் முறியடித்து, தன் மைத்துனனாகிய கிள்ளிவளவனை அவன் சோழ அரசிருக்கை ஏற்றினான். தமிழக முழுதும் வென்று போர்கெழுகுட்டுவன் என்ற பெயர் பெற்றதுடன் அமையாது, இமயம்வரை படையெடுத்து கனகவிசயர் என்ற ஆரியபுல அரசரை வென்று, கண்ணகிக்குச் சிலை எடுப்பித்து விழா அயர்ந்தான். இவன் தம்பி இளங்கோவடிகளே சிலப்பதிகாரம் இயற்றியவர். ஐந்தாம்பத்தால் தன்னைப் பாடிய பரணர் என்ற புலவர் பெருமானுக்கு இவன் உம்பர்க்காட்டு வாரியத்தையும் தன்மகன் குட்டுவனையும் ஈந்ததாகக் கூறப்படுகிறது.

கண்ணகி விழாவுக்கு இலங்கை அரசன் கயவாகுவும் வெற்றிவேற்செழியனும் வந்திருந்தனர். இவர்கள் காலம் ஏறத்தாழ கி.பி.175 ஆகும்.

ஆறாம்பத்திற்குரிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பவன் இமயவரம்பனுக்கும் நார்முடிச்சேரனுக்கும் உடன் பிறந்தவன். அவன் ஆட்சி சேரன் செங்குட்டுவனுக்கு முந்தியதாயிருக்கக் கூடும். அவன் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் சிறப்புச்செயல் கரிகாலன் சீர் செய்த தொண்டை நாட்டின் வடபகுதியிலுள்ள காட்டூர்களின்மீது படையெடுத்து அவற்றின் கால்நடைச் செல்வங்களைக் கைக்கொண்டதாகும். அவன் கேரளத்தில் ஒவ்வொரு பிராமணர்க்கும் ஒரு பசுவும் ஒரு ஊரும் தானம் செய்தான். ஆறாம்பத்தால் தன்னைப்பாடிய பெண்பாற் புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்க்கு அணி மணிக்காக அவன் 9 'கா' ப் பொன்னும் 100,000 'காண' மும் கொடுத்து, அவரைத் தன் அரசுரிமைத் துணைவியாகக் கொண்டான்.

ஏழாம்பத்திற்குரிய செல்வக் கடுங்கோவாழியாதனின் உறவுமுறை விளங்கவில்லை. அவன் சேரமான் சிக்கற்பள்ளி துஞ்சிய செல்வக் கடுங்கோவாழிஆதன் என்றும் குறிக்கப்பட்டான். அவன் அந்துவன் சேரனுக்கும் தொண்டை மகளாகிய பொறையார் பெருந்தேவிக்கும் மகனாவான் என்று கூறப்பட்டுள்ளது. தன்னைப் பாடிய கபிலர் பெருமானுக்கு அவன் நூறாயிரம் காணமும், நன்றா மலையிலிருந்து காணும் நாடும் தந்தான்.