உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 77

பாணர்களின் நிலத்தோடு செம்பியன் மாவள வாணராயன் என்ற பட்டமும் பெற்றான். இரண்டாம் பூதுகன் (939-950) இராஷ்டிரகூட அரசனாகிய மூன்றாம் கிருஷ்ணனுடன் சேர்ந்து தக்கோலப்போரில் சோழன் முதலாம் இராசாதித்தியனைக் களத்தில் கொன்றான். மாரசிம்ஹன் (961-974) நொளம்ப பல்லவரால் 8ஆம் நூற்றாண்டு முதல் ஆளப்பட்ட நொளம்பவாடி மும்பத்தாறாயிரத்தை வென்றான். கடைசி கங்க அரசனான இராசமல்லன் (974-1004) காலத்தில் அவன் அமைச்சனான சாமுண்டன் சிரவணபெல கோளாவிலுள்ள பெரிய சமணப் பாறைச் சிலைகளைக் கட்டுவித்தான்.

என்றுமே பேரரசரின் செல்லப் பிள்ளைகளாக இருந்த கங்கர் 11ஆம் நூற்றாண்டுக்குப்பின் மீண்டும் குறுநில மன்னர் நிலையை அடைந்து விட்டனர். இவர்களுள் பலர் நன்னிய கங்கசோடர் எனப் பெயர் பூண்டனர். 1180ஆம் ஆண்டைய கல்வெட்டுகளில் சீயகங்கன் அமராபரணன் என்ற சிற்றரசன் பெயர் காணப்படுகிறது. இவன் தந்தை கோவளாலபுரத்தின் இறைவனாகக் குறிக்கப்படுகிறான். தமிழில் நன்னூல் எழுதிய பவணந்தியை ஆதரித்த வள்ளல் இவனே என்று அறிகிறோம்.

விஷ்ணு குண்டின மரபு

விஷ்ணு குண்டின மரபினர் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளுக்கிடையிலுள்ள வேங்கை நாட்டை ஆண்டவர்கள். ஆந்திரப்பேரரசர் காலத்தில் இதில் ஆண்ட சாலங்காயன் மரபினரை ஒழித்து வாகாடகர் உதவியால் இவர்கள் 4ஆம் நூற்றாண்டின் நடுவில் ஆட்சிக்கு வந்து, ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிலைத்தனர். அதன்பின் அந்நாடு கீழைச்சாளுக்கியர் வசப்பட்டது.

சாளுக்கியர்

பல்லவ நாட்டுக்கு வடக்கே எழுந்த பேரரசுகளுள் வலிமைமிக்கது சாளுக்கிய அரசே. முற்காலச் சாளுக்கியர் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தென்னாட்டின் வடமேற்குப் பகுதியை முதலில் பைத்தானிலிருந்தும், பின் வாதாபி அல்லது பாதமியிலிருந்தும் ஆண்டார்கள்.