உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




19. தமிழ்ப் பண்பின் தகையார்ந்த சால்பு

தமிழர் இன வேறுபாடற்ற தன்மையே தமிழ்ப் பண்பு. அதுவே தமிழகம் கடந்து, தென்னக முழுவதும் பரந்து, தென்னகப் பண்பாய் இயங்கிற்று, இயங்குகிறது, என்றும் இயங்கும். இத் தமிழ்ப் பண்பு தென்னகப் பண்பு உயிரற்ற தேகப் பண்பன்று. அது உயிர்ப்பண்பு, விசையார்ந்தபண்பு, தான் இன வேறுபாடு காட்டாததுடன் அது அமைவதில்லை. தன்னைச் சார்ந்த கிளையினங்கள், அயலினங்கள் எல்லாவற்றையும் அது அப்பண்பினால் தன் வயப்படுத்தி ஒற்றுமையூட்டவல்லது,ஆட்டி வந்துள்ளது, வருகிறது. தன்னுடன் இணைவுற்ற பின் அது அவற்றை முன்னிலும் பன்மடங்காக வளப்படுத்தவல்லது. இதனை நாம் வரலாற்றிலே பின்சென்று காணலாம்.

தமிழகத்துக்குள் சிவாஜியின் மரபினருடன் மராத்தியர் வந்து குடி புகுந்தனர். தத்தம் தாய்மொழி பேணிக்கொண்டே, தத்தம் பழக்க வழக்கங்களுடனேயே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அவர்கள் பல்வேறு தொழில்களிலும் இன்றும் முனைந்துள்ளனர். வீட்டில் பேசும் மொழியன்றி வேறெதுவும் இன்று அவர்களைத் தமிழர் சமுதாயத்திலிருந்து பிரித்தறிய உதவாது. இவர்கள் போலவேதான் சௌராஷ்டிரத்தி லிருந்து நடுஇந்தியா, கன்னடநாடு, தெலுங்குநாடு ஆகியவற்றி லெல்லாம் சுற்றி இறுதியில் மதுரையிலும் தமிழகத்திலும் குடியேறிய சௌராட்டிரர் தம் தாய்மொழி நீங்கலாக மற்றெவ் வழியிலும் தமிழரிடமிருந்து வேறு பிரித்தறிய முடியாத வராகியுள்ளனர். சௌராட்டிரத் தாயகம் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால் பெருமையும் இறும்பூதும் எய்தும் அளவுக்கு அவர்கள் முன்னேறியுள்ளதுடன், இக் காலம்வரை எழுத்தும் இலக்கியமும் இல்லாத தம் தாய்மொழிக்குத் தமிழகத்திலிருந்தே எழுத்தும் இலக்கியமும் உண்டுபண்ணி இனப் பெருமை பேணு பவராய் உள்ளனர்.