உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடநம்பிக்கை 2


மூடநம்பிக்கையின் அடிப்படை

ஞாயிறு-திங்கள் கிரகணங்கள், பின்னால் ஏற்படும் கொள்ளை நோய், கொடும் பஞ்சம் ஆகியவற்றை முன் கூட்டியே அறிவிப்பவைகள் என்றும், வால் நட்சத்திரம் தோன்றுவது அரசர்களின் இறப்பையோ, நாடுகளின் அழிவையோ, போரின் வருகையையோ அல்லது பிளேக்கின் தோற்றத்தையோ முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறி என்றும் பன்னெடுங்காலமாக நம்பப்பட்டு வருகின்றன. வானத்தில் ஏற்படும் வியப்புக்குரிய மாறுதல்களான வடக்கே பால்வெளியில் வெளிச்சம் தோன்றுவது, மதியைச் சுற்றி வட்டம் ஏற்படுவது, பரிதியில் கறைகள் காணப்படுவது, விண்வீழ் கொள்ளி வீழ்வது போன்றவைகள் சிறிது அறிவு வந்த முன்னோர்களுக்கு மிக்க அச்சத்தைக் கொடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட வானிலை நிகழ்ச்சிகளால் அச்சுறுத்தப்படும் அழிவைத் தடுக்கவேண்டி, அவர்கள். முழங்கால் படியிட்டுக் கொண்டு, அவைகளை நோக்கி வழிபாட்டுரை கூறியும், பலிகளிட்டும் வணக்கம் செலுத்தினர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு உதவிக்காக வானை நோக்கிக் கதறிடும்போது அவர்களுடைய முகங்கள் அச்சத்தால் கவ்வப்பட்டிருந்தன.