உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

அப்பாத்துரையம் - 7

எதிரே இருந்துவரும் குதிரைக் குளம்பின் ஓசை என்று தெரிந்ததும், அத்திரையாக அப்படி யார் செல்லக் கூடும் என்று வியப்புடன் எதிர்நோக்கியிருந்தேன். திடுமென ஒரு வெள்ளை நாய் பின் தொடர, கறுப்புக் குதிரை மீது புயல் வேகத்தின் என்னை ஒருவர் கடந்து சென்றார். அந்த வேகத்தின் அதிர்ச்சியில் நான் சிறிது நேரம் அசைவற்றிருந்தேன். பின் வெயிலேறு முன் நகர் சென்று மீள எண்ணிப் புறப்பட எழுந்தேன்.

குதிரைக் குளம்படி ஓசை படிப்படியாக குறைந்து

வந்தது. ஆனால், அது திடீரென நின்று தடாலெனப் பேரொலி எழுந்தது. அதனையடுத்து நாயின் அலறலும் கேட்டது. நான் என்னவென்று காணும் எண்ணத்துடன் சற்றுத் திரும்பிச் சென்று பார்த்தேன். சிறிது தொலைக்குள் குதிரையும் மனிதனும் நிலத்தின் மீது புரண்டுகிடந்தனர். மனிதரின் காலொன்று குதிரையினடியில் சிக்கிக் கொண்டதால், அவர் அதை விடுவிக்க முடியாமல் தவித்தார்.

நாய் என்னை நோக்கி ஓடிவந்தது. என்னைச் சுற்றிச் சுற்றி ஓடி மீண்டு வந்து பின்னும் சுற்றிற்று. அந்த வாய்பேசா விலங்கு என்னை உதவிக்கு அழைக்கிறது என்று அறிந்து, மனிதரை அணுகி, “ஐயா! உடம்பில் காயம் பட்டுவிட்டதா? நான் உதவட்டுமா," என்றேன்.

அவர் முரட்டு மனிதராகவே தோன்றினார். பேச்சும் துடுக்குத்தனமுடையதாகவே இருந்தது. உதவி வேண்டும் நிலையில்கூட அவர் உதவிக்கு உரிய பண்பற்றவராகக் காணப் பட்டார். ஆயினும், உதவியில்லாமலே அவர் எழுந்து நடக்க முயன்றபோது, அம்முயற்சி பலிக்கவில்லை. அவர்மீது வந்த வெறுப்பைவிட, அந்நிலையில் அவர்மீது இரக்கமே என்னிடம் மேலெழுந்தது.நான் அவரைத் தாங்கி எழுந்து நிற்க வைத்தேன் அவர் தடை செய்யவில்லை.

"ஐயா! தங்களால் உதவியில்லாமல் இனிப்போக முடியாது என்று நினைக்கிறேன். தார்ன்ஹில் இல்லம் அருகேதான் இருக்கிறது. அங்கே சென்று யாரையாவது உதவிக்குக் கூட்டிக் கொண்டு வரட்டுமா?" என்றேன்.