உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 179

மேலாட்சிகளை அவன் தன் தாயாதி உடன்பிறந்தானான கொங்குச் சேரனிடமே ஒப்படைத்தான். ஆனால், அவன் தமையன் நெடுஞ்சேரலாதன் மைந்தர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் காலங்களில் நன்னன் மீண்டும் தன்னாண்மை பெற்றுப் பகைவனானான்.பண்டை வட கொங்கு நாட்டுப் புன்னாட்டின் நீலமணிக் கல்வளம் அவாவி, அவன் அந் நாட்டின் மீது படையெடுத்தான். சேரர்படைத் தலைவனான வெளியன் வேண்மாள் ஆய் எயினன் பாழிப்பறந்தலைப் போரில் (பறந்தலை போர்க்களம்) கொல்லப்பட்டான். ஆயினும், சேரருடன் தொடர்ந்து நடந்த போரில் அவன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலால், கடம்பின் வாயில் போரில் முறியடிக்கப்பெற்றான். இதன் பின்னும் சேரன் செங்குட்டுவன் ஆட்சியில் அவன் கிளர்ந்தெழவே, அப் பெருஞ் சேரன் புராண மரபுக்குரிய முருகனைப் போலவே கடலகத்துள்ள தீவினுட் சென்று அவன் காவற் கோட்டையையும், காவல் மரத்தையும் அழித்து அவன் ஆட்சியையும் நிலையாக முடிவுக்குக் கொண்டு வந்தான்.

இதுவரை, சேரர், தாம் மேல் கொங்கிலும், வட கொங்கிலும் வென்ற நாடுகளை, அவ் வெற்றிகளின்போது உடனின்ற தம் தாயாதியரான கொங்குச் சேரரிடமே ஒப்படைத்து வந்தனர் என்று காண்கிறோம். ஆனால், சேரன் செங்குட்டுவன் இப்போது சேரர்-கடம்பர் போரில் தன் பக்கமே ஆதரவு காட்டிய கோசரிடமே கடம்பர் ஆட்சியை ஒப்படைத்தான் என்று கருத இடமுண்டு. இச் சூழல் கீழே ஆராயப்படுகிறது.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்ட தேசங்கடந்த தேசியப் பெருவிழாவில் (குத்தாயமாக கி.பி 180) இலங்கை மன்னன் கயவாகுவும் அவந்திநாட்டு மன்னனும் அவர்களுடன் ஒப்பாகக் கொங்கு நாட்டுச் சார்பில் கொங்கிளங் கோசரும் வந்து கலந்து கொண்ட ரென்றும்; இலங்கை அரசரும் அவந்தி அரசரும் தத்தம் நாடுகளில் சென்று அங்கே கண்ணகிக்குக் கோயிலும் விழாவும் எடுத்தது போலவே, கொங்கிளங் கோசரும் தம் நாடாகிய கொங்கு நாட்டில் சென்று கண்ணகிக்குக் கோயிலும் விழாவும் எடுத்தனர் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.