உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. இல்லறமே பேரின்பம்

'ஒன்றே குலம், ஒருவனே தேவன்'- இது தமிழர் நெறி. இக் கருத்தையே மனித உலகின் நாகரிக சமயங்கள் எல்லாம் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. ஆனால், ஒரு குலத்துக்கும் ஒரு தெய்வத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கி, ஒருமைக் கோட்பாட்டின் உச்ச உயர்முகடு கண்டுரைத்த உலக முதல்வர் திருவள்ளுவர் ஒருவரே!

'ஒன்றே குலம்' இது சங்ககாலத் தமிழர் கண்ட வாசகம். ஆனால், இஃது அவர்களுக்கு நீண்டநாள் முன்னரே-நூற்றுக் கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே-வள்ளுவர் கண்ட ஒரு முழு மெய்ம்மையின் ஓர் அரைகுறை நிழற்கோடு மட்டுமே. அவர் கண்ட அம்முழு மெய்ம்மை குலம் ஒன்றே என்பதன்று, வாழ்க்கை ஒன்று, வாழ்குடி உலகு அதாவது மனித இனம் ஒன்று என்பதே. இதைக்கண்டவான் பேரறிஞருள் வள்ளுவர் முதல்வர். அது மட்டுமன்று. அவர் கண்ட அளவிலும் முறையிலும் அதனை வேறு எவரும் காணவில்லை என்னலாம். ஏனெனில், வாழ்க்கை ஒன்று, றைமை ஒன்று- இவற்றின் தொடர்பு கண்டு இறைமைக்கு இலக்கணமும் உயிர் விளக்கமும் அளித்தவர் வள்ளுவர் ஒருவரே.

இயற்கை ஒன்று. ஒரு வழி நின்று முழு நிலைப்பட்ட அதன் அமைதியே (வள்ளுவர் மொழியில் தெய்வம், ஊழ்) அறம். இவ்வியற்கை வழி நின்று வளரும் உயிர் உலக, மன்பதை அமைதியே பொருள். இதனையே நாம் வாழ்க்கை என்கிறோம். இக்காலத்தவர் பெரும்பாலார் இதனைச் சமுதாய வாழ்க்கை, சமய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என வேறு வேறுபட்ட துறைகளாகக் கொள்வர். இத்துறைகளை வள்ளுவர் மதித்தாரானாலும், இவற்றின் அடிப்படை உணர்ந்து அதனையே வாழ்முதல் அதாவது பொருள் என்று கூறினார்.