உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

55


கப்பம் செலுத்தாமல் அரசுபுரிந்தான் என்று கூறுகின்றது. இதனால் இவன் காலத்தேதான் சம்புவராயர்கள் நெடுமுடி வேந்தராய் ஆட்சிபுரியும் பெருமையை அடைந்தனர் என்பது நன்கு வெளியாகின்றது. இவர்களது இராச்சியமும் தொண்டை மண்டலத்துப் படைவீட்டி ராஜ்யம் என்று புகழப்படும் சிறப்பையும் அடைந்தது. படைவீட்டினுள் அம்மையப் பேச்சுவரர் ஆலயம் எடுப்பித்து அதற்கு நிபந்தங்கள் விட்டவனும் இவ்வேந்தனேயாவன். இவனது தந்தையாகிய அம்மையப்பன் கண்ணுடைய பெருமானான விக்கிரமசோழச் சம்புவராயனது பெயரே இவ்வாலயத்திற்கு இடப்பட்டது போலும். சோழ மன்னர்களது ஆட்சிக் காலங்களில் எடுப்பிக்கப்பெற்ற இராஜராஜேச்சுரம், கங்கைகொண்ட சோழேச்சுரம், விக்கிரமசோழேச்சுரம் என்ற ஆலயங்கள் எய்தியுள்ள பெயர்களையும் ஆராய்ந்து நோக்குங் கால் இவ்வுண்மை நன்கு புலப்படும்.

இனி இவனுக்குப் பின்னர் அரசுரிமை எய்தியவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. ஆனால் இவனுக்குப் பின்னர்ப்பட்டம் பெற்றவன் தனது சுயேச்சையை இழந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கேற்ப, காஞ்சிபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள சில இடங்களிலும் தெலுங்குநாட்டுச் சோழர்களது கல்வெட்டுக்களும் சேந்தமங்கலத்துப் பல்லவனாகிய கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுக்களும் அக்காலத்தில் காணப் படுகின்றன. எனவே, சம்புவராயர்களும் சிலகாலம் இவர்களுக்குத் திறை செலுத்தும் நிலையிலிருந்தனரோ என்று ஐயுற வேண்டியிருக் கின்றது. ஆயினும் கி.பி.1314-15-ல் வீரசோழச் சம்புவராயன், வீரசம்புவராயன் என்போரது கல்வெட்டுக்கள் சில இடங்களில் காணப்படுகின்றன, இன்னோர் சுயேச்சையுற்று வாழ்ந்து வந்தனர் என்று தெரிகிறது. அன்றியும் கி.பி. 1322-ல் சகலலோக சக்கிரவர்த்தி வென்று மண்கொண்ட சம்புவராயன் பட்டம் சூட்டப்பெற்று அரசாளத் தொடங்கினான். இவன் சக்கிரவர்த்தி என்ற பட்டம் பெற்றிருத்தலாலும் ‘வென்றுமண் கொண்ட' என்ற அடைமொழிகளோடு விளங்குதலாலும் இவனே தெலுங்கு நாட்டுச் சோழர் முதலானோரைப் போரில் வென்று மீண்டும் சுயேச்சையுற்றுத்