உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


கொண்டிருந்தான் என்று தெரிகிறது. இவன் எதிரிலி சோழச் சம்புவராயனது தம்பியாயிருத்தல் வேண்டுமென்று ஊகிக்கப்படுகிறது. இவ்விருவேந்தரும் ஒரேகாலத்தில் ஆட்சி புரிந்து வந்துள்ளார் என்பது பல கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. நமது இராஜகம்பீரச் சம்புவராயன் குன்றத்தூரை இராஜகம்பீர நல்லூர் என்னும் பெயருடன் நிலவுமாறு பங்களராயர்க்குக் காணியாகக் கி.பி.1236-ல் அளித்தான். இச்செய்தியை உணர்த்தும் கல்வெட்டொன்று வைகவூர்த் திருமலையிற் காணப்படு கின்றது. அதனை அடியில் குறிக்கின்றேன். ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள்' ஸ்ரீஇராஜராஜ தேவருக்கு யாண்டு' இருபதாவது முதல் ஜயங்கொண்ட சோழமண்டலத்துத் தமனூர் நாட்டு விரான்பாக்கத்து இலாலப் பெருமான் மகன் ஆண்டான்கள் பங்களராயர்க்குப் பல்குன்றக் கோட்டத்துப் பங்களநாட்டு நடுவில்.... க்குன்றத்தூரான ராஜகம்பீரநல்லூர் இவர்க்குக் காணியாகக் கீழ்நோக்கின கிணறும் மேனோக்கின மரமும் நாற்பாலெல்லையும் விற்றொற்றிப் பரிக்கிரயத்துக்கு உரித்தாவதாகக் கொடுத்தோம். அத்திமல்லன் சம்புகுலப் பெருமாளான ராஜகம்பீரச் சம்புவராயனேன். (S.I.I. Vol.1 No.74)

இக்கல்வெட்டால் இராஜகம்பீரச் சம்புவராயன் மூன்றாம் இராஜராஜசோழனது ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு குறுநில மன்னன் என்பதும், 'சம்புகுலப்பெருமாள்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன் என்பதும் நன்கு விளங்குகின்றன. இராஜகம் பீரச்சதுர்வேதிமங்கலம் எனவும், சம்புகுலப் பெருமான் அகரம் எனவும் அழைக்கப்படும் ஊர்கள் இம்மன்னன் பெயரால் அழைக்கப்பெற்ற ஊர்கள் போலும். இராஜகம்பீர நல்லூரும் இராஜகம்பீரச் சதுர்வேதிமங்கலமும் வேறு ஊர்களாதல் உணர்க.

இனிச் சம்புவராய மன்னர்களுள் இராஜகம்பீரச் சம்புவராயனே மிகவும் பெருமையுற்றவன். இவ்வேந்தன் காலத்தில் இவனது இராச்சியம் பெருகியதோடு 'இராஜகம்பீரவிராஜ்ஜியம்' என்னும் பெயரையும் எய்தியது. இவன் படைவீட்டில் ஒரு மலைக்கோட்டையமைத்து அதனைத் தனக்கு உறைவிடமாகவுஞ் செய்துகொண்டான். கி.பி. 1258-ல் படைவீட்டில் வெட்டப் பெற்றுள்ள ஒரு கல்வெட்டு இவன் சோழர்களுக்குக்