உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


புத்தூர் என்ற பெயரையும் எய்தியுள்ளது. அன்றியும், இதனை அழகார் திருப்புத்தூர் என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழங்கியுள்ளனர் என்பது, ‘அரிக்கும் புனல்சேர் அரிசிற்றென் கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே‘ என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் அறியப்படுகின்றது. எனவே, புகழ்த் துணையாரது திருப்பதி அழகார் திருப்புத்தூர் என்று உமாபதி சிவனார் தம் திருத்தொண்டர் புராண சாரத்தில் குறித்தமைக்குக் காரணம், சுந்தரமூர்த்தி சுவாமிகளது அரிசிற் கரைப்புத்தூர்ப் பதிகமேயாகும். இந்நாளில், அழகார் திருப்புத்தூர் என்பது அழகாத்திரிப்புத்தூர் எனவும், அழகாப்புத்தூர் எனவும் வழங்கப்படுகின்றது. இது, கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் நான்கு மைல் தூரத்தில், குடவாயிலுக்குச் செல்லும் பெரு வழியில் அரிசில் ஆற்றின் தென்கரையில் இருக்கின்றது. இத் திருப்பதியில் அவதரித்துத் திருத்தொண்டு புரிந்து இறைவன் பால் படிக்காசு பெற்ற புகழ்த்துணையாரைத் தம்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘அரிசிற் புனல்கொண்டு வந்தாட்டுகின்றான்‘ என்று அரிசிலாற்றையும் குறித்திருப்பது உணரற் பாலதாகும். திருஞானசம்பந்த சுவாமிகளும் தமது அரிசிற்கரைப் புத்தூர்ப் பதிகத்தில்,

‘அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே‘

என்று புகழ்த்துணையார் இத்தலத்திற்செய்த திருத்தொண்டைப் பாராட்டியுள்ளனர். ஆகவே, சைவசமய குரவர்களாகிய திருஞான சம்பந்தராலும், சுந்தரமூர்த்திகளாலும் குறிக்கப் பெற்றதும், இக்காலத்தில் அழகாப்புத்தூர் என்று வழங்கப்படு வதும் ஆகிய அரிசிற்கரைப் புத்தூரே அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய புகழ்த்துணைநாயனாரது திருப்பதி என்பது நன்கு விளங்குதல் காண்க.